இமய வாசலில் ஒரு கவி இமயம்

சமஸ்கிருத இலக்கிய வரலாற்றில் காஷ்மீருக்குப் பெரும் பங்குண்டு. உத்படர், மம்மடர், கையடர், ருய்யகர், பிலஹணர், கலஹணர் என்ற பல கவிகள் அங்கு தோன்றினர். இலக்கிய இயல் ஆய்வில் சிறந்த மேதைகள் பாமஹர், வாமனர், ஆனந்தவர்தனர், அபிநவகுப்தர் மஹிம பட்டர் என்ற பெரும் புலவர்கள் இருந்தனர். அந்த வரிசையில் ஒரு மகா கவியாகவும், காவிய ரசிகராகவும், கவிதை இயலில் ஒளசித்யம் என்ற புதியதொரு கொள்கையைப் புகுத்தியவருமாகத் திகழ்ந்தவர்களில் க்ஷேமேந்திரர் ஒருவர்.
க்ஷேமேந்திரர் எழுதாத இலக்கியத் துறையே இல்லை என்ற அளவுக்கு எழுதியவர். அறத்தின் வழி நின்று வாழ்ந்தவர். தன் நூல்கள் அனைத்திலும் அறத்தை வலியுறுத்தியவர்.
க்ஷேமேந்திரர் ஸாரஸ்வத பிராமண குலத்தில் ஒரு செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். தாத்தா போகீந்திரர். தந்தை பிரகாசேந்திரர். சைவக் குடும்பம். பிரகாசேந்திரர் கோவில்கள், மடங்களைக் கட்டி, பல லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார்.
க்ஷேமேந்திரர், தன் தந்தை ஒருநாள் சிவ பூஜை செய்யும்போது பக்தி மேலிட்டு சிவலிங்கத்தை இறுகத் தழுவிக் கொண்டதாகவும், அதே நிலையில் அவரது உயிர் பிரிந்தது என்றும் எழுதுகிறார். க்ஷேமேந்திரர் பிறந்து சுமார் கி.பி. 990. அவர் இறந்தது சுமார் 1070 எனக் கொள்ளலாம்.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் வாழ்ந்த பெருமேதை அபிநவகுப்தர். அவர் பரம மாகேச்வர, சைவாச்சாரிய என்ற பட்டங்களால் அறியப்பட்டவர். சிறந்த யோகி. கல்வியின் எல்லாத் துறையிலும் வல்லவர்.
எனினும், சைவ சமயம், சைவ தத்துவம் இரண்டும் கற்பிப்பதில் இணையற்றவர். தந்திராலோகம் என்ற சைவ தத்துவ நூலை இயற்றியவர். பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்திற்கு அபிநவபாரதி என்ற பெயரில் உரையெழுதியவர். ஆனந்த் வர்தனரின் கவிதை இயல் நூலான த்வன்யாலோகத்திற்கு லோசனம் என்ற உரையின் ஆசிரியர்.
இப்பெரும் கல்வி, சைவ சமயக் கடலான அபிநவ குப்தரிடம் க்ஷேமேந்திரர் இலக்கிய இயலைக் கற்றார். தன் நூல்களில் அபிநவகுப்தரைத் தலையாய ஆசிரியர் என்றும், ஞானக் கடலென்றும் க்ஷேமேந்திரர் குறிப்பிடுகிறார். அவர் கங்கா, சோமா, தேவதரா என்ற மூவரிடம் கல்வி கற்றார் என்றும் தெரிய வருகிறது. க்ஷேமேந்திரரின் புதல்வர் சோமேந்திரர். அவரும் சிறந்த கவியாகத் திகழ்ந்தார்.
க்ஷேமேந்திரர் வாழ்நாளில் இரண்டு காஷ்மீர மன்னர்களின் ஆட்சிகளைக் கண்டார். கி.பி.1028ல் பட்டமேறிய அனந்தராஜர், அவரது மைந்தனான கலசர் என்ற இரு மன்னர்களின் ஆட்சிகள். அனந்தராஜனை விவேகம் மிகுந்த தன் அரசில் சமுதாயத்தைக் குலைக்கும் போலித் தத்துவங்களை அறவே ஒழித்தவர் என்றும் க்ஷேமேந்திரர் தன் நூல்களில் குறிப்பிடுகிறார்.
ஆனால் அரசவைக் கவிஞராக இருந்ததாகவோ, அரசர்களிடம் பட்டம், பதவி, பொருள் பெற்றதாகவோ ஏதும் குறிப்பு இல்லை. அதற்கு மாறாக, மன்னர் சபைகளிலே கவி பாடிப் பிழைக்கும் அவல நிலையை ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.
கவிபி ந்ருப ஸேவாஸு
சித்ர அலங்கார ஹாரிணீ!
வாணீ வேச்யா இவ லோபேன
பரோப கரணீக்ரு தா!
கவிகள் வேசியைப் போன்று பணத்தாசையால் மன்னர்களுக்கு இன்பம் ஊட்டும் வகையில் பல அலங்காரங்களைப் பிரயோகித்து சித்திரக் கவியால் தமது பாடல்களை அமைத்தனர்.
க்ஷேமேந்திரர் தன் இறுதி நாட்களைத் திரிபுரசைலம் என்ற குன்றில் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்ததாகத் தனது தசாவதார சரிதத்தின் முடிவில் கூறுகிறார். ஹர்வான் கால்வாயிபன் தொடக்கத்தில் மஹாதேவர் கோவிலருகே உள்ள திரிப்ஹார் என்ற இன்றைய ஊர்தான் திரபுரசைலம். அதனருகில் திரிபுர கங்கா எனும் சிற்றாறு ஓடுகிறது.
க்ஷேமேந்திரருடைய வாழ்க்கையைப் பற்றி நாமறிந்த செய்திகள் இவ்வளவே. ஆனால் அவரது எழுத்துக்களைப் பற்றிச் சற்று அதிகமாகவே நமக்குத் தெரியும்.
1860களில் அவரது பெயரும் வேறு சிலரது நூல்களில் அவரது பெயரால் குறிப்பிடப்பட்ட சில நூற்பெயர்களும்தான் தெரிந்திருந்தது. பிறகு தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் பிருகத்கதா மஞ்சரியை டாக்டர் ர.சீ. பர்னேல் கண்டெடுத்தார். சில நாட்களில் டாக்டர் பூலருக்கு அதன் மற்றொரு பிரதி குஜராத்தில் கிடைத்தது.
அடியிற்கண்ட பிற நூல்களும் மெல்ல மெல்லக் கிடைக்கத் தொடங்கின:
1884 - 85 - பூலர் - பாரத மஞ்சரி, ராமாயண கதாசாரம், தசாவதார சரிதம், ஸமய மாத்ருகா வியாசஷ்டகம், ஸுவிருத்த திலகம், நீதி கல்பதரு, லோகப் பிரகாசம்.
இவை காஷ்மீரியிலேயே சாரதா, தேவநாகரி இரண்டு லிபிகளிலும் இருந்தன.
1882 - பீடர்சன் - சாருசர்ய சதகம், சதுர்வர்க்க ஸங்கிரஹம்
1882 - சரத் சந்திர தாஸ் - அவதான கல்பலதையின் திபெத்திய மொழிபெயர்ப்பு
போட் லிபியில் இருந்த சம்ஸ்கிருத மூலமும் போட் மொழிபெயர்ப்பும் அடங்கிய ஓர் எழுத்துப் பிரதி கிடைத்தது.
1883 - பூலர் - கவி கண்டாபரணம்
1885 - பீட்டர்சன் - ஒளசித்ய விசார சர்ச்சா, கவிகண்டாபரணம்
1885 - சில்வன் லெவி - தர்ப்பதலனம்
பிப்லியோதிகா இண்டிகா வரிசையில் அவதான கல்பலதா 1900க்குள் வெளியிடப்பட்டது. பம்பாய் நிர்ணயசாகர் பிரஸ் 13 நூல்களை 1900க்குள் வெளியிட்டது.
1923ல் பண்டித மதுசூதன சாஸ்திரி கௌல் என்பவருக்குக் காஷ்மீரியிலேயே "தேசோபதேசம்', "நர்மமாலா' ஆகிய இரண்டு நூல்களும் கிடைத்து ஸ்ரீநகர் ரிசர்ச் பிரிவு வெளியிட்டது. புனே பண்டர்கார் ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் 1956ல் நீதி கல்பதருவை வெளியிட்டது.
1959ல் மிதிலா இன்ஸ்டிட்யூட் தர்பங்கா அவதான கல்பலதாவின் சம்ஸ்கிருத மூலத்தைப் பிரசுரித்தது.

உஸ்மானியா பல்கலைக்கழகம் பதினோரு நூல்களை "க்ஷேமேந்திரருடைய சிறு காவியங்கள் தொகுப்பு' என்ற பெயரில் 1961ல் வெளியிட்டது. அவரது நூல்களில் 18 நூல்கள் முழுவதும் கிடைத்து வெளிவந்துள்ளன. பிற 16 நூல்களைத் தேடும் பணி இன்றும் தொடர்கிறது. வெளியான நூல்களைப் பற்றிய சிறு குறிப்புகள்:
அவதான கல்பலதா - புத்த ஜாதகக் கதைகளின் தொகுப்பு - 108 கற்பகக் கொடியில் 108 தளிர்கள்.
ராமாயண மஞ்சரி - வால்மீகி ராமாயணத்தின் ஏழு காண்டங்களின் சுருக்கம் - 6186 சுலோகங்கள்.
பாரத மஞ்சரி - வியாச பாரதத்தின் சுருக்கம் 10792 சுலோகங்கள்
பிருஹத் கதா மஞ்சரி - பைசாசப் பிராகிருதத்தில் இருந்த குணாடயர் எழுதிய பெருங்கதை எனும் உதயணன் கதைச் சுருக்கம். 7639 சுலோகங்கள்.
தசாவதார சரிதம் - பத்து அத்தியாயங்களில் பத்து அவதாரங்கள் - 1764 சுலோகங்கள்
நீதி கல்பதரு - ராஜ நீதி நூல் - 138 அத்தியாயங்கள்
லோகப் பிரகாசம் - தினசரி வாழ்க்கையில் உள்ள பல்வேறு உபகரணம் பிற பொருட்கள் ஆகியவற்றின் தொகுப்பு - ஒரு நிகண்டு அல்லது அகராதி
ஒளசித்ய விசார சர்ச்சா - இலக்கிய இயல் பற்றிய புதிய கொள்கை விளக்கமும் உதாரணங்களும்.
கவி கண்டாபரணம் - இலக்கிய இயல் பற்றிய நூல். காவியம் இயற்றுவதற்கான வழிமுறைகள்.
ஸுவ்ருத்த திலகம் - யாப்பிலக்கண நூல்.
சதுர்வர்க்க ஸங்கிரஹம் - அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களின் விளக்கமும், உபதேசமும்.
சாருசர்யா - நன்னெறி நூறு
தர்ப்ப தலனம் - செருக்கைத் தவிர்க்க அறிவுறுத்தும் கிண்டல் நூல் தேசோபதேசம் நாட்டுக்கு அறிவுரை
கலாவிலாசம் - நகைச்சுவையோடு சமூக அவலங்களை விமர்சிக்கும் சிறு காவியம். 557 சுலோகங்கள்
ஸேவ்ய - ஸேவக உபதேசம் - 61 சுலோகங்களில் எஜமானன் - பணியாளன் இடையே நல்லுறவு நீடிக்கச் சில இரகசியங்கள்.
நர்மமாலா - சமூகத்தில் நிலவும் தீய பண்புகளைக் கிண்டல் செய்து திருத்த முயலும் நூல். 406 அனுஷ்டுப் பாடல்கள்.
ஸமய மாத்ருகா - 639 சுலோகங்களில் ஒரு சிங்காரப் பிரபந்த காவியம். விலை மகளிர் வாழ்க்கையைப் படம் பிடிப்பது. ஜயா பீடனின் காலத்தில் நிலவிய சமுதாய நிலையைக் காட்டுவது.
க்ஷேமேந்திரர் ஒரு மகாகவி, ஒர புதிய கொள்கை அல்லது கோட்பாட்டை இலக்கிய இயலில் புகுத்திய விமர்சகர். சுருக்கமாக இந்த இரண்டு கோணங்களிலும் இருந்து அவரைப் பார்க்க முயற்சிக்கலாம்.
எந்த நாட்டிலும் எம்மொழியிலும் மகாகவிகள் நாட்டுப்பற்றும் தெய்வ நாட்டமும் உடையவர்களாகவே இருக்கக் காண்கிறோம். க்ஷேமேந்திரரும் அதற்கு விலக்கல்ல, காஷ்மீரைப் பற்றிப் பெருமிதத்தோடு அவர் பாடுகிறார்.
"இயற்கையின் வளங்கள் கூடி
நலம்பல பெருகிய நல்லதோர் நாடு
கவிகள் கூடும் காஷ்மீர நாடு
விண்ணவர் நாட்டையும் விஞ்சிடும் புகழால்
இந்திரன் செருக்கையும் இல்லா தாக்கும்.
விதஸ்தா ஆற்றின் மகிமை:'

"விந்தையாம் விதஸ்தா ஓடும் நாடு
அலைகளாம் புருவம் அவற்றின் நெளிப்பாய்
பாவங்கள் போக்கிடும் புண்ணிய ஆறு
விதஸ்தா நீரில் விருப்புடன் மூழ்கி
மாசு நீங்கிய மனத்தினர் ஆகி
வீடு பேறும் விரைவில் பெறுவர்
காந்தி மிக்க காஷ்மீர மங்கையர்
அழகின் ஒளியும் அலைவீசிடவே
ஆங்கதில் மூழ்கும் சந்திர பிம்பமும்
அமுதம் பொங்கும் அருள் முகமாகும்'
தேசோபதேசம், நர்மமாலா போன்ற நூல்களில் நகைச்சுவையும் நையாண்டியும் செய்து, சமூகத் தீமைகளைத் திருத்த முயல்கிறார். சமூகத்தில் நிகழும் தீமைகளால் தூண்டப்படாமல், ஆனால் அந்த அவலங்களைக் கண்டு வெட்கி, அவற்றைக் கேலி செய்து, சிரிப்பால் அவற்றைக் களைய முயலும் முயற்சி இது என்று விளக்குகிறார். திருவள்ளுவர், பர்த்ருஹரி, யோகிவேமனாவைப் போல் அவர் கூறும் சுபாஷிதங்கள் நன்னெறி காட்டுவன :
"கல்வி கேள்வி இல்லாதவனே குருடன். இரப்போர்க்கு எந்த வகையிலம் பயன்படாதவனே முட்டாள் - மூர்க்கன். புகழ் இல்லாதவனே இறந்தவன். தர்மத்தில் விருப்பும், ஈடுபாடும் இல்லாதவனே பரிதாபத்திற்கு உரியவன்.'
"பொறாமையை விடுதலும், இனிமையாகப் பேசுவதும், தைரியமும், கோபம் இன்மையும், பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தலும் ஆகிய ஐந்தும் இன்பத்திற்கான அனுபவ சித்தமான கலைகள் ஆகும்.'
"தர்மமே வாழ்வின் ஆணிவேர். வேண்டிய அனைத்தையும் அளிக்க வல்லது. வாழ்க்கையில் வெற்றியும் இறுதியில் முக்தியும் பெற விவேகம் இன்றியமையாதது. உலகம் என்னும் பெரிய பாலைவனத்தில், கற்பகத் தரு போல் தர்மம். அதைவிட வேறு இல்லை.'
விவேகத்தைப் பற்றிய பாடல்
"விவேகம் வந்தால், நலம்பெற முயலம் ஒருவருக்கு நேரும்
இடையூறுகள் அனைத்தும் தாமே மறைந்து விடுகின்றன
கர்வம் என்னும் பாம்பு ஓடி மறையும்
விவேகமே உண்மையில் அமுதம் இருக்குமிடம்
அதுதான் ஆத்மாவின் ஒளியை மலர்விக்கிறது...
அது தான் பிறவியை ஒழிக்கும்!
மனத்தின் வெளியை அகற்றும்!
மன அமைதி என்னும் அமுதத்தைப் பொழியும்!
அத்தகைய விவேகத்திற்கு வந்தனம்'
மேலே கண்ட வசன மொழிபெயர்ப்புகள் சிறந்த எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு செய்தவை.
க்ஷேமேந்திரர் குடும்பம் சைவ சமயத்தில் ஈடுபட்ட குடும்பம். அவரது தந்தை தீவிர சிவ பக்தர். க்ஷேமேந்திரரும் "சாருசர்யா' நூலில் "சிவபெருமானை வழிபடாமல் எந்தக் காரியத்தையும் தொடங்கக் கூடாது' என்று கூறுகிறார். பல நூல்களில் காப்புச் செய்யுளாகச் சிவபெருமானையே துதிக்கிறார்.
ஆயினும் சமயங்கள் பலவற்றையும் தாராள மனத்தோடு ஏற்றார். அவரது பெரிய நூலான "அவதான கல்பலதா' பௌத்த சமயக் கருத்துக்களை விளக்கும் நூல்.
க்ஷேமேந்திரரின் பெரும் புகழ் பெற்ற நூல் இலக்கிய இயலில் புதுக் கொள்கையாக அவர் இயற்றிய "ஒளசித்ய விசார சர்ச்சா' என்ற நூலே ஆகும்.
"கவிதைக்கு உயிராவது ரசம் என்று பல காலமாக இருந்த கருத்தை மறுத்து, கவிதையின் ஆத்மா ஒளசித்யம்தான்' என்று பேசினார் க்ஷேமேந்திரர். ஒளசித்யம் என்றால் உசிதமாகும் தன்மை, அதாவது பொருத்தம், ஏற்புடைமை.
"சுவையுணர்வு சிதைவதற்குப் பொருத்தமின்மை முக்கிய காரணம். சுவைக்கு மட்டுமின்றி, குணம், அலங்காரம், சொல், தொடர், வினைச் சொற்கள், திணை, பால், இடம் மற்றும் தேசம், காலம், மனப்பான்மை, இயல்பு போன்றவற்றின் அமைப்பு கூட ஒளசித்ய அடிப்படையில்தான் இருத்தல் வேண்டும்' என்பது க்ஷேமேந்திரரது கொள்கை.
கவிகளிடையே மகாக கவியாக ஓர் இமயமாக விளங்கிய க்ஷேமேந்திரர் மிக்க அடக்கமுடையவர். அவர் தன்னை வியாசதாசன் என்றே பல இடங்களில் சொல்லிக் கொள்கிறார். வியாசரைப் போல பல நூல்களின் ஆசிரியரான அவர் வியாசரைப் போல பெரும் புகழும் பெற்று விளங்கினார்.

மு. ஸ்ரீனிவாசன்

எழுதியவர் : (26-Feb-19, 6:49 pm)
பார்வை : 29

மேலே