முசுறும் காலமும்

என் பால்ய காலத்தில்
வீட்டு மாமரத்தில்
இலைகளைப் பிணைத்துப் பின்னி
பெருங் கூட்டமாய் கூடுகளில்
முசுறெறும்புகள் வசித்தன...

மரமேறி மாம்பழங்கள்
பறித்துண்ண ஆசை விரிந்தாலும்
முசுறுகளை நினைத்தாலே
உடலெரியும்..

மாம்பழங்கள் சுற்றி கூடெழுப்பிக்
குழுமியிருக்கும்
அவைகளின் கூட்டைக் கலைத்தால்
உடலில் ஓரிடம் விடாது .. மொத்தமாய் விழும்

விழுந்த நொடியில் கடிக்கும்
கடித்த இடத்தில் தன் வால் நகர்த்தி
எரி நீர் வைக்கும்
எரியும் ஆனால் தழும்பாகாது, தடிக்காது..

உடலெங்கும் சாம்பலைப் பூசி
அகோரிகள் போல் மேலே செல்வோம்...
கூடுகள் உடைகையில்
வெண்ணரிசி போல் தரையுதிரும்
ஏராளம் முட்டைகள்…

அத்தனையும் மருந்தென
அள்ளிப் போவார் நாட்டு வைத்தியர்
நாங்கள் பட்டக் கடியில்
முசுறு முட்டை அவருக்கு...

என் மகனின் பால்யமோ
அட்டைப் பெட்டியுள்
அடுக்கி வந்த மாம்பழங்கள் தின்று
மாமரமும் முசுறுமின்றி
கணணியும் கைபேசியுமாய்
பரபரத்து அலைகிறது ...
எறும்புகள் போலவே

எழுதியவர் : பத்மநாபபுரம் அரவிந்தன் (2-Mar-19, 10:45 am)
பார்வை : 31

மேலே