என்றும் கொண்டாடுவோம் மகளிரை

மலரின் மறுபிறப்பை அவதரித்து
மணப்பெண்ணை அடிவைக்கும் போது
மாமன், மாமி, நடத்தி மனமறிந்து கட்டிய
மணவாளன் தேவையறிந்து, பெற்ற
மழலையின் நலனை முன்னிறுத்தி
மயக்கும் புன்சிரிப்பில்
மதிமயங்கி தனக்கென ஏதும் எண்ணாது
மக்கட் நலன் ஒன்றே பெரும் பணியாய்
மாதந்தோறும் இடைவிடாது
மணக்கும் மலர் அன்றோ பெண்....! இதில்
மார்ச் எட்டு மட்டும் என்ன சிறப்பு!
மண்ணுலகில் பெண்ணை படைத்திட்ட பிறகு
மாளவனும், பிரம்மனும் கூட தன்
மஞ்சத்தில் நிம்மதியாய் உறங்குகிறானே! அம்மேதகு
மகளிருக்கு வருடத்தில் ஒரு நாள் என்ன
மண்ணுலகம் இயங்கும் வரை
மறவாது கொண்டாடுவோம் மகளிர் தினம்....!

அடுக்களையில் ஜடமாய்
அடங்கி கிடந்த மகளிர்
ஆடவரின் இச்சைக்கு
ஆட்பட்டு பிள்ளை பெற்றால் ஒன்றே
அனைத்திலும் சிறந்த பணி என
அறிவுறுத்தப்பட்டு மற்ற ஏதும்
அறிந்து கொள்ள கூடாது என் ஒடுக்கப்பட்டு, தன்
அடி வயிற்றில் சுமந்து பிரசவிக்கும் கருக்கூட
ஆன் மகனாய் பெற்றால்தான் மதிப்பு என்ற
அற்ப நிலைக்கு தள்ளப்பட்டு
அன்றாடம் மெழுகை உருகி தவித்த பெண்கள், இன்று
அற்புத சாதனைகள் பல புரிந்து,
அகிலத்தின் இருள் போக்க விழைந்து,
அண்டம் வியக்க செயல்பட்டு,
அமைதியாய் உலாவரும், ஆனந்த பைரவியாய் திகழும்
அற்புத இரகமன்றோ மகளிர்....!
அனைத்தின் அமையப்பெற்றிருப்பினும் ஏனோ
அடிமனதில் ஒரு சஞ்சலம்! இது
அகில மகளிருக்கும் ஏற்பட்ட சாபமோ,
அல்லது இந்திய மகளிருக்கு ஏற்பட்ட சாபமோ தெரியவில்லை....!

இல்லற பந்தம் என்று வரும்போது
இன்றும் பல மகளிர்
இன்னலுக்கு ஆட்படுத்தப்படுவது
இச்சமூக அமைப்பில்
இருந்து வரும் மாபெரும் அவலமன்றோ...!
இல்லறம் நல்லறமாய் திகழ,
இனிய மனையாளின் உணர்வு புரிந்து,
இருவரும் ஒரு சேர்ந்து கரம் கோர்த்து
இவள் நம்மில் பாதி என்றும், வரும்
இன்பம், துன்பம் யாவும்
இருவருக்கும் தான் என் உணர்ந்து, ஆண்மக்கள் தன்
இதய கதவை சற்று விசாலமாக்கி,
இல்லாளை அதில் குடிவைத்தால்
இல்லறத்தின் அழகு, இமயம் வரை உயர்வதோடு,
இம்மக்களின் தின கொண்டாட்டத்திற்கும் ஓர்
இன்றியமையா இடம் கிட்டும் என்பதில்
எனக்கு எள்ளளவும் ஐயம் இல்லை...!

"வாழ்க பாரதம் பல்லாண்டு, அதில் ஒளியாய்,
வீசட்டும் மகளிரின் இன்றியமையா தொண்டு....!"

இவண்
சங்கீதாதாமோதரன்

எழுதியவர் : சங்கீதாதாமோதரன் (8-Mar-19, 4:46 pm)
சேர்த்தது : Sangeethadamodharan
பார்வை : 545

மேலே