போற்றி உரைத்துக் காத்தருள்க நாவைக் கனிந்து - வாக்கு நயம், தருமதீபிகை 116
நேரிசை வெண்பா
உற்ற வுயிரும் ஒருமகனும் பேரரசும்
முற்றும் நிலைகுலைய மூண்டதே - வெற்றிமிகப்
பூத்த தசரதன்தான் போற்றா(து) உரைத்ததனால்
காத்தருள்க நாவைக் கனிந்து. 116
- வாக்கு நயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
தசரதன் ஓராமல் சொன்ன ஒரு சொல்லால் தனது இனிய உயிரும், அருமை மகனும், பெரிய அரசும் ஒருங்கே ஒழிந்தான். ஆதலால் யாண்டும் நாவைப் பாதுகாத்துப் பேசு எனப்பட்டது.
ஒரு உறுதி மொழியை வாய் திறந்து கூறுமுன்னர் அதன் முடிவை முன்னும் பின்னும் நன்கு ஆராய்ந்து சொல்ல வேண்டும். இல்லையானால் அல்லல் பல நேரும். இதனைத் தெளிவாக விளக்குதற்கு ஓர் இதிகாசத்தை இது எடுத்துக் காட்டியுள்ளது.
மன்னர் மன்னனாய் அயோத்தியில் அரசு புரிந்த தசரதன் தனது மனைவி கைகேசிக்கு அவள் விரும்பிய இாண்டு வரங்கள் தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தான். தக்க பருவம் வந்தது. தனக்குத் தருவதாகக் குறித்திருந்ததைத் தருக எனக் கேட்டாள்: அவன் தந்தேன் என்றான்.
அந்த வரத்தால் இராமனைக் காட்டுக்குப் போகும்படி பணித்தாள்; அப்பிள்ளைப் பிரிவால் அரசன் பதைத்து மாண்டான். ஆழ்ந்து நோக்காமல் உள்ளக் களிப்பால் உரைத்த ஒரு வாக்கால் உயிரும் மகனும் அரசும் இழந்தானாதலால் சொற் சோர்வால் நிகழும் கேட்டிற்கு அவன் ஓர் காட்டாய் நின்றான்.
நாவைக் காத்து அருள்க - நவை புகா வண்ணம் சொல்லைப் போற்றி ஒழுகுக.
கனிந்து - உள்ளுற உணர்ந்து.
செல்வம், கீர்த்தி முதலிய அரிய ஊதியங்களும், பழி, வறுமை முதலிய கொடிய கேடுகளும் ஒரு சொல்லால் விளைந்து விடுமாதலால், யாதும் வழுவுறாதபடி கூர்ந்து ஓர்ந்து தெளிந்து மொழிகளை வழங்க வேண்டும். வாய்க்கு வந்தபடி சொல்லின் நோய்க்கு இடமாகும்.
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. 642 சொல்வன்மை
சொற்சோர் வுடைமையின் எச்சோர்வும் அறிப. - அறிவுப் பத்து 8, முதுமொழிக் காஞ்சி
சொற்சோர்வு படேல். (ஒளவையார்)
சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிதே. (இனியவை நாற்பது)
சொல்லின் நலம் குறித்து வந்துள்ள இவற்றை ஈண்டு எண்ணி நாவை நன்கு பாதுகாக்க வேண்டும் என்பது கருத்து.