கொடுமையா பெருமையா
மனிதர்களாக
மண்ணில் பிறப்பெடுத்தும்
மானுடமே மதிக்கலையே,
ஊருக்கு வெளியே
வயக்காட்டு பக்கமா
வசிக்க சொல்லி
ஒதுக்கி வைத்தால்
ஒட்டுமா மனித உறவு?
கடின உழைப்பால்
கால் வயிற்றை நிரப்ப கூழோ,
கஞ்சியோ, கிடைத்துவிடும்—அதனால்
கையேந்துவதுமில்லை
குரல் கொடுப்பதுமில்லை,
இயந்திரங்கள் கூட ஏமாற்றி
இவர்கள் பணியை , தாங்கள்
செய்ததாய் கணக்கில் காட்டும்
மானுடக் கழிவுகளை
மனிதர்களே எடுத்து அகற்றி
மக்கள் நலம் காக்கும்
மாந்தர்களை—கேவலம்
மனிதர்களாகக்கூட
மதிக்காதது, வெட்கக்கேடு!
மனித இனத்துக்கே
மாபெரும் துரோகம்
கொத்தடிமையாய் வாழும்
கீழ் சாதி மக்கள்
கால் வயிற்று பசிபோக்க
கழிவுகளின் கல்லறையில்
கால் பதிக்கும் மனித இனம்
வாழ வழி தேடி வந்து
விஷவாயுவுக்கு உயிரை தரும்
உறவுகள் சந்தியிலே நிக்கும்
பாரதத்தில் பிறந்ததற்கு
பெருமைபட்ட நாம்,
பாரபட்சம் பார்க்காம
பண்போடு பழகலையே!
உலகை சாக்கடையாக்கும்
ஊழல் சாதியை ஒழிக்காம,
கீழ் சாதியென ஒதுக்கினோமே
கொடுமையா? பெருமையா?