மன்றில் ஒருவன் மனமுளைய நன்றில் நவிலுநா ஊனமடையும் - கொடுஞ்சொல், தருமதீபிகை 156

நேரிசை வெண்பா

மன்றில் ஒருவன் மறுகி மனமுளைய
நன்றில் உரையை நவிலுநா - என்றுமே
ஈனநா வாகி இழிந்துபின் பேசாத
ஊனம் அடையும் உணர். 156

- கொடுஞ்சொல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பலர் குழுமிய சபையில் ஒருவன் உளம் மறுகி உளைய இழிவுரை கூறுகின்ற இன்னொருவன் நா, பின் மொழி வழக்கு அற்று ஈனமான பிறப்பில் இழிந்து படும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மன்று - பலர் கூடியிருக்கும் இடம்.

நன்று இல் உரை – நன்மை பயக்காத சொற்கள், மனிதனுடைய மானம் கெடும்படியான ஈன மொழிகள். நவிலல் - சொல்லல்.

தனியே இருக்கும் பொழுது இகழ்ந்து பேசுவதினும், பலர் நடுவே ஒருவனைப் பழித்துக் கூறின், அவன் உள்ளம் மிகவும் கொதிக்குமாதலால் அக்கொடிய நிலைமை உணர வந்தது.

மறுகி உளைய என்றதனால் அந்த உயிரின் பரிதவிப்பை அறியலாகும். அவையில் இகழப்படுதல் மிகவும் துயரமாகும்.

நேரிசை வெண்பா

எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை; - வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின். 325 புல்லறிவாண்மை, நாலடியார்

சபையில் ஒருவனை எள்ளி இகழ, அவன் உள்ளம் பொறுத்திருப்பானாயின், இகழ்ந்து பேசினவன் அந்த இடத்திலேயே துள்ளித் துடித்து இறந்து படாமல் நின்றால் அது ஒரு அதிசயமாம் என இது குறித்திருக்கும் குறிப்பைக் கூர்ந்து பார்க்க வேண்டும். மன்றில் பழிப்பது மா பாவம். அப் படுபாவி உடனே பொன்றி ஒழிய வேண்டும். ஒழியானாயின் தெய்வம் ஒளிந்திருக்கின்றதே! என்று உலகம் வருந்தும் என்பதாம்.

இதனால் பலர் முன் இகழும் பழிக் கொடுமை தெளிவாம்.

’ஈன நாவாகி இழிந்து பின் பேசாத ஊனம் அடையும்’ என்றது கொடிய பழிமொழி கூறினவன் அப்பாவத்தால் பன்றி நாய் முதலிய இழி பிறவிகளில் விழுந்து பேச முடியாத ஈன நாவுடையனாய் நீசமுறுவன் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அரிய மனிதப் பிறவியை அடைந்து இனிது பேசத்தக்க உயர்ந்த நாவைப் பெற்றுள்ளாய்! பழி மொழியாடி அதனைப் பாழ் படுத்தாதே என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Apr-19, 7:59 pm)
பார்வை : 39

மேலே