கோளன்வாய்ச் சொல்லில் கடுங்காளம் மிக்கிருக்கும் - குறளை, தருமதீபிகை 146

நேரிசை வெண்பா

கொடும்பாம்பின் பல்லினுமே கோளன்வாய்ச் சொல்லில்
கடுங்காளம் மிக்கிருக்கும் கண்டாய் - நெடுந்தூரம்
கண்ட பொழுதே கடிதகல்க கையணுகின்
மண்டும் துயரம் மதி. 146

- குறளை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கொடிய பாம்பின் பல்லினும் கோளன் வாய்ச்சொல் நஞ்சு மிகவுடையது; நெடுந்தூரத்தில் அவனைக் கண்ட பொழுதே அஞ்சி அகல வேண்டும்; அருகு நெருங்கின் அழி துயர் பெருகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இது, கோளனைக் கொடிய காளமாகக் கருதுக என்கின்றது. பல்லில் உள்ள விடம் கடிவாயில் புகுத்து கொல்லும்; கோளனின் சொல்லில் உள்ள விடம் ஒருமூலமும் தெரியாமலே நிர்மூலம் ஆக்கி விடும்.

காளம் = நஞ்சு. கருநிறம் உடைமையால் காளம் என வந்தது. ஒரு கொடியிலே பல குடிகளை அடியோடு கெடுக்கும் அதன் கொடுநிலை கருதி கடும் காளம் எனப்பட்டது.

கோளன் சொல் கொடுந்தீமையுடையது; அவனை ஒரு கொடிய பாம்பாகவே கருதி ஒதுங்க வேண்டும்; அவன் கண்ணில் படாமல் விரைந்து நீங்க வேண்டும் என்பதால் நெடுந்தூரத்தில் கண்ட பொழுதே கடிது அகல்க என்றது, கடிது நீங்காவிடில் கொடிய தீங்கு நெடிது ஓங்கும்.

கோளனை நெருங்க விடின், அவன் வாய்திறந்து ஏதாவது ஒரு கோளை இதமாகப் புனைந்து சொல்லுவான்; அச்சொல்லைக் கேட்டால் உள்ளம் கெடும்; கெடவே, பழியும் பாவமும் விளையும் ஆதலால் அப்பாதகனுடைய வாய் மொழி யாதும் காதில் படாதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

கை அணுகின் துயரம் மண்டும் என்றது, அவன் தீமையைக் கண்டு தெளிய வந்தது. கோளன் சொல்லை எவ்வழியும் யாண்டும் செவி புகாமல் செவ்விதாகப் பேணிக் கொள்ள அறிவுறுத்துகிறார் கவிராஜ பண்டிதர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Apr-19, 7:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே