குடிகாரக் கணவன்

ரோயல் மெரிடியன் (Royal Meridian) ஹோட்டலுக்கு வெளியே உள்ள மதிலில் இருந்த “குடி குடியைக் கெடுக்கும்” என்ற வாசகத்தை வாசித்துச் சிரித்த படி தள்ளாடித் தள்ளாடி நடந்து போய் பாஸ்கர் டாக்ஸியை நிறுத்தினான் .
குடி வெறியில் டாக்ஸியை நிறுத்திய பாஸ்கரை டாக்ஸி டிரைவர் சண்முகத்துக்கு நன்கு தெரியும். பாஸ்கரின் நிலை அறிந்து டாக்ஸியில் இருந்து இறங்கி வந்து கை கொடுத்து டாக்ஸியின் பின் சீட்டில் பாஸ்கரை ஏற்றி, எங்கே போக வேணும் என்று கேட்காமல் டாக்ஸியை பாஸ்கரின் வீட்டை நோக்கி ஓட்டினான்.

டக்ஸி டிரைவர் சண்முகத்துக்குத் தன் டடக்ஸியில் ஏற்றிய பாஸ்கர் குடும்பத்தை நன்கு தெரியும் . பாஸ்கரின் தந்தை சண்முகத்துக்கு டக்ஸி வாங்க பணங்கொடுத்து உதவினவர் . பாஸ்கர் குடிகாரனாக மாற முன் அவரை பல தடவைகள் பாஸ்கரை அவர்வீட்டில் இருந்து அவரின் அலுவலகத்துக்கு ஏற்றிச் சென்றவன் . பாஸ்கரின் மனைவி வனிதாவை அவனுக்குத் தெரியும் இப்போது பாஸ்கரின் நிலை கண்டு வனிதா மேல் சண்முகம் பரிதாபப் பட்டான்.

பல தடவைகள் சண்முகம் குடிகார பாஸ்கரை ஹோட்டலில் இருந்து ஏற்றி, அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாஸ்கரின் மனைவி வனிதா கையில் பாரம் கொடுத்த அனுபவம் டக்ஸி டிரைவர சண்முகத்துக்கு உண்டு . நடக்க முடியாமல் தள்ளாடி கீழே விழும் நிலையில்இருந்த தன் கணவனை கை பிடித்துக் கூட்டி வந்து சண்முகம், வனிதா கையில் பாரம் கொடுத்து, “ அம்மா ஐயாவைக் கொண்டுபோய் படுக்க வையுங்கள். பணத்தை பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன்” என்று சொன்னான் .

“ சண்முகம் உன் உதவிக்கு நன்றி. “ என்றாள் வனிதா கண் கலங்க . இது அவள் பல தடவைகள் சண்முகத்துக்குத் தன் கணவனை அந்த நிலையில் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு வந்து சேர்த்ததுக்குச் சொல்லிய பல நன்றிகளில் ஒன்று.

பாஸ்கர் குடிவெறியில் நா தழும்ப “ தங்கி யூ சண்முகம்” என்றான் . வனிதா ஒன்றுமே பேசாது கணவனைப் படுக்கை அறைக்கு அணைத்த படி கொண்டு போய் படுக்கையில் படுக்க வைத்தாள். படுக்க முன் அவன் எடுத்த வாந்தியை தன் கையில் ஏந்தி, அறையில் இருந்த வோஷ் பேசனில் கழுவினாள் . வழக்கம்போல் தேசிக்காய் சாறு தண்ணீரில் கலந்து வந்து அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். பின் பேட்சீட்டால் அவனைப் போர்த்தி விட்டு அறை விளக்கை அணைத்து விட்டுச் சென்றாள்.


****
பாஸ்கர் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவன். பெற்றோருக்கு ஒரே மகன். அவனுக்கு இரு தங்கைமார். படித்து படம் பெற்று தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி மனேஜர் பதவியில் பாஸ்கர் இருந்தவன் . பாஸ்கரின் தந்தை சிவராமன் ஒரு பிரபல தொழிலதிபர் . செல்வத்துக்கு குறைவில்லாதவர் .பிறருக்கு உதவுவதில் பின் தங்க மாட்டார் . குணத்தில் தங்கக் கம்பி. தன் மூன்று பிள்ளைகளையும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார்.
பாஸ்கர் வேலை செய்யும் இடத்தில் தனக்கு செக்கரட்டரியாக இருந்த வனிதாவை அவனுக்குப் பிடித்துக் கொண்டது. அவள் மேல் அவனோடு வேலை செய்யும் வசீகரனுக்கும் அவளை பிடித்துக் கொண்டது. பாஸ்கருக்கும் வசீகரனுக்கும் காதலில் போட்டி. இருவரிலும் பாஸ்கரின் மேல் வனிதாவுக்கு நம்பிக்கையும் பற்றுதலும் அதிகம் . காரணம் அவன் சிகரட் ,மது குடிப்பதில்லை. பெண்களை மதித்து நடப்பவன் . படித்தவன். தானும் தன் வேலையும் என்று இருப்பவன். பாஸ்கருக்கு முற்றிலும் எதிர்மாறானவன் வசீகரன். தான் நினைத்ததை சாதிப்பவன் வசீகரன். நல்லவன் போல் பழகிக் கழுத்தறுப்பவன். ஒரு நாள் வசீகரன் தன காதலை வெளிப்படையாக வானதிக்கு சொன்னான் .
“ வசீகரன் உங்கள் குணமும், போக்கும் எனக்குப் பிடிக்கவில்லை . என் மனதை நல்ல குணம் உள்ள ஒருவருக்குக் கொடுத்து விட்டேன் . அவரும் என் காதலை ஏற்றுக் கொணடு விட்டார் .வெகு விரைவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்யப் போகிறோம். நீர் என்னை மறந்து விடும். உமது குணத்துக்குப் பொருத்தமான வேறு ஒருத்தியைப் பார்த்து திருமணம் செய்யும்” என்றாள் வானதி .


“வானதி எனக்குத் தெரியும் உனக்கு பாஸ்கர் மேல் அவனின் நல்ல குணத்தால் காதல் என்று . ஒரு நாள் உன் தவறை நீ உணர்ந்து கவலைப் படுவாய் .” கோபத்தோடு பதில் சொன்னான் வசீகரன். அவன் மனதில் தன்னை பழி வாங்கும் திட்டம் இருக்கிறது என்பது வானதிக்குத் தெரியாது

பாஸ்கர் , வானதி இருவரினது திருமணம் பெற்றோரின் ஆசிகளோடு கோவிலில் நடந்தேறியது. திருமணம் நடந்து ஒரு வருடத்துக்குள் பாஸ்கருக்கு அவன் வேலைசெய்யும் அலுவலகத்தில் மார்கடிங் மனேஜராக பதவி உயர்வு கிடைத்தது. தன எதிர்பார்த்து இருந்த பதவி பாஸ்கருக்குப் போனது வசீகரனுக்கு மேலும் வானதியையும் பாஸ்கரனையும் பழி வாங்கும் எண்ணம் அவன் மனதில் வலுவாக வேரூண்டியது.
பாஸ்கரனும் வானதியும் தனிக் குடித்தனம் போனார்கள்.
ஒரு தடவை பாஸ்கரனுக்கு வேலை நிமித்தம் வசீகரனோடு திருச்சி போக வேண்டி வந்தது. பாஸ்கரனின் நிறுவனம், நீலத் தாமரை என்ற ஏற்றுமதி நிறுவனத் தோடு செய்த பிஸ்னஸ் ஒப்பந்தம் வெற்றியாக முடிந்ததால் அந்த நிறுவனம் ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி வைத்தது. அந்த பார்ட்டியில் வசீகரன் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்து பாஸ்கரனை முதன் முதலில் குடிக்க வைத்தான் . முதலில் மது அருந்த மறுத்த பாஸ்கரனைப் பார்த்து வசீகரன்:

“ பாஸ்கி நீர் ஒரு போதும் குடிக்கப் போவதில்லை என்று எனக்குத் தெரியும். ஒரு தடவை ஷிவாஸ் ரீகல் விஸ்கியை சுவைத்துப் பார்த்தால் என்ன? நீ என்ன குடிகாரனாகவா மாறப் போகிறாய் ? இன்று இவர்கள் தரும் விருந்தில் நீ குடிக்க மறுத்தால் அது அவர்களை அவமானப் படுத்துவது போலாகும்” என்று சொல்லி பாஸ்கரரை வற்புறுத்திக் குடிக்க வைத்தான். தானே பாஸ்கருக்கு கிளாசில் சிவாஸ் ரீகல் விஸ்கியை ஊற்றிக் கொடுத்தான் .அதுவே முதல் தடவை விஸ்கியை பாஸ்கர் சுவைக்க வேண்டி வந்தது. பாஸ்கருக்கு அது புது அனுபவம் . அந்த விஸ்கியின் சுவை அவனுக்கு பிடித்துக் கொண்டது. தொடர்ந்து மூன்று கிளாஸ் விஸ்கியை வசீகரன் பாஸ்கரைக் குடிக்க வைத்தான் தன் நிலை மறந்து பாஸ்கர் குடித்தான் . தனது திட்டம் வெற்றி பெற்றதைக் கண்டு வசீகரனின் மனம் பூரித்தது. பல தடவை பாஸ்கரும் வசீகரனும் பிஸ்னஸ் வேலையாக பல ஊர்களுக்குப் போகும் போது வசீகரன் பாஸ்கராய் குடிக்க வைத்தான் . மதுவின் சுவையை பிடித்த பாஸ்கர் தினமும் குடிக்கத் தொடங்கினான்.

வேலையில் இருந்து வீடு திரும்பும் பொது தன் கணவனில் மது வாசனை தினமும் வீசுவதை உணர்ந்த வானதி மிகவும் கவலை பட்டாள்
“என்ன அத்தான் நீங்கள் இப்போது தினமும் குடிக்க ஆரம்பித்து விட்டீர்களா? என்ன இது ஒரு போதும் உங்களுக்கு இல்லாத புதுப் பழக்கம்”

“ நான் என்ன செய்ய.? நான் உயர் பதவியில் இருப்பதால் பிஸ்னஸ் விசயமாகப் போகும் போது அவர்கள் பார்ட்டி வைத்து எனக்கு குடிக்கத் தந்தால் என்னால் குடிக்க மறுக்க முடியாது அதனால் சில சமயம் குடிக்கிறேன்” பாஸ்கர் தான்குடிப்பதுக்கு வானதிக்கு விளக்கம் சொன்னான் .
“ வேண்டாம் அத்தான் உங்களுக்கு இந்த புதிய பழக்கம்.உங்களை இப்படிக் குடிக்க வைத்தது யார் என்று எனக்குத் தெரியும்”

“என்ன நீ சொல்லுகிறாய் வானதி’?

“உங்கள் நண்பன் வசீகரன் எங்கள் இருவர் மேல் உள்ள வஞ்சம் தீர்க்க எங்கள் இருவரையும் பிரிக்கப் போடும் சதித் திட்டம் அத்தான் இது” வானதி கவலையோடு சொன்னாள் .

"இங்கை பார் வானதி வீணாக என் என் நம்பிக்கைக்குப் பாத்திரமான என் அசிஸ்டெனெட் மேல் வீண் பழி போடாதே . வசீகரனின் உதவியால் எனக்குப் பல பிசினஸ் ஒப்பந்தங்களில் கைசாத்திடமுடிந்தது “. வானதி வசீகரனின் மேல் சொன்ன குற்றச் சாட்டை பாஸ்கர் ஏற்கவில்லை.

காலப்போக்கில் பாஸ்கர் வீட்டில் வைத்துக் குடிக்க ஆரம்பித்தான். வானதியால் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“எவ்வளவு நல்ல மனிதனாக இருந்த என் கணவனை அந்த அயோக்கியன் வசீகரன் என் மேல் உள்ள கோபத்தால் கெடுத்துவிட்டான்” என்று தன் மாமனுக்கும் மாமிக்கும் சொல்லி வானதி மனம் வருந்தினாள்.


ஒரு நாள் வசீகரனின் பிறந்த நாள் அன்று அவனின் அழைப்பை ஏற்று ஹோட்டலுக்கு போய் குடித்து விட்டு வீடு திரும்பிய பாஸ்கரனுக்கு வானதி கண்டித்து கோபமாய் பேசியது பிடிக்கவில்லை. குடி போதையில் இருந்த அவன் தன் நிலை மறந்து அவளை முதன் முதலில் கை நீட்டி அடித்தான். அவள் பொறுமை காத்து நடந்தாள் . அதன் பின் அடிக்கடி குடித்து விட்டு வந்து வானதியை பாஸ்கர் அடிக்கத்தொடங்கினான் . அவளின் மாமன், மாமி, மைத்துனியாரால் பாஸ்கரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“என் சொந்த பணத்தில் நான் குடிக்கிறேன் இது என் உரிமை . என் விருப்பப் படி நான் செய்வேன் ஒருவரும் என்னைக் கட்டுப்படுத்துவது எனக்கு பிடியாது” என்று பாஸ்கர் வானதிக்குக் கண்டிப்புடன் சொன்னான் .

குடிகாரனாக மாறிய தன் அன்புக் கணவனின் நிலை கண்டு தினமும் வானதி தினமும் கண்ணீர் விட்டு அழுதாள்.

அவளின் கவலைக்கு ஒரு நாள் கடவுளாகப் பார்த்து முடிவு வந்தது. ஒரு நாள் மோசமாகக் குடித்துப் போட்டு வந்த பாஸ்கர் இரத்த வாந்தி
எடுத்து மயங்கி கீழே வீட்டில் விழுந்தான் . அம்புலன்சில் அவனை வானதியும், மாமனும், மாமியும் மைத்துனிகள் இருவரும் வைத்தியசாலைக்குக் கூட்டி சென்றனர்
. பல பரிசோதனைகளுக்குப் பின் வானதியையும் பாஸ்கரின் தந்தை சிவராமனையும் டாக்டர் தன் அறைக்குள் அழைத்துச் சொன்னது” மிஸ்டர் சிவராம் உங்கள் மகனக்கு சிரோசிஸ் வியாதி இவரின் ஈரலைக் குடி வேகுவாக பாதித்து விட்டது . இது மாற்றம் சத்திர சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும். இல்லாவிடில் இவரின் உயிருக்கு ஆபத்து . என்ன சொல்லுகிறீர்கள் “?
“டாக்டர் இதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் “?சிவராமன் கேட்டார்.
“ ஒரு பகுதி ஈரல் தானம் யாரவது உடனடியாக செய்ய வேண்டும் அதோடு பொருத்தமான ஈரலாக இருக்க வேண்டும். தானம் கொடுக்க முன் வருபவராய் பரிசோதித்த பின் முடிவு சொல்லுவேன் . ஈரல் தானம் மஞ்சள் காமாலை என்ற ஹெப்டைட்டிஸ் நோய் வந்திருக்கக் கூடாது என்றார் டாக்டர். எல்லோரும் பேசாமல் இருந்தார்கள்.
வானதி அமைதியாக” டாக்டர் நான் பாஸ்கரரைக் காதலித்து திருமணம் செய்தனான். அவரை நான் உயரிலும் மேலாக நேசிக்கிறேன். அவரின் உயிருக்கு ஒன்றேன்றால் என்னால் வாழமுடியாது. நான் என் ஈரலில் ஒரு பகுதியை அவருக்கு தானம் செய்யத் தயார். எனக்கு ஒரு போதும் ஹெப்பட்டைட்டிஸ் Aஅல்லது B வருத்தம் வரவில்லை “ என்றாள். எல்லோரும்
வாயடைத்துப் போய் இருந்தனர்.

வானதியின் ஈரலின் ஒரு பகுதி பாஸ்கருக்கு பொருத்தப்பட்டு அவன் உயர் தப்பியது வானதியின் மாங்கல்ய பாக்கியம்.
உடல் நலம் தேறிய பாஸ்கருக்குத் தனது உயிரைக் காப்பாற்றியது தன மனைவி வானதி என்று டாக்டர் சொல்லி அறிந்ததும் அவன் அவளின் கைகளைப் பிடித்து கண்களில் கண்ணீர் வழிய “ வானதி என்னை மன்னித்து விடு. உன் கருணை உள்ளத்தை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன் இனி நான் ஒரு நாளும் குடிக்க மாட்டேன். இது உன் மேல் சத்தியம்” என்றான் பாஸ்கர் . அவனின் கண்ணீர்த் துளிகள் வானதியின் கைகளில் விழுந்தன.

****
(யாவும் புனைவு )

எழுதியவர் : Pon Kulendiren (5-Apr-19, 3:39 am)
பார்வை : 369

மேலே