ஒளிவீசும் ஒண்தமிழை ஓராதார் ஏங்கி இழிவர் இனைந்து - தமிழ், தருமதீபிகை 183

நேரிசை வெண்பா

வீரம் உயர்காதல் மேன்மை அருளீகை
ஈரம் இயல்நீதி எங்குமே - சாரமாய்
ஓங்கி ஒளிவீசும் ஒண்தமிழை ஓராதார்
ஏங்கி இழிவர் இனைந்து. 183

- தமிழ், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வீரம், காதல் முதலிய அரிய நலங்கள் பலவும் கனிந்து புனித நிலையில் பொங்கியுள்ள இனிய தமிழை உரிமையுடன் ஓதி யுணராதார் மறுமை நலம் குன்றி மறுகி வருந்துவர் என்கிறார் கவிராஜ பண்டிதர். ஈரம் - இரக்கம், அன்பு.

போரில் அஞ்சாது புகுந்து பகைவரை வெல்லும் நெஞ்சுறுதி வீரம் ஆகும். இது அரசனுக்கு உயிரினும் சிறந்த ஒண்குணம். கள்வர் பகைவர் முதலிய பொல்லாதவரால் அல்லல் நேராமல் தன் நாட்டையும் மக்களையும் நன்கு பாதுகாத்து மன்னனுக்கு மாட்சி மிகத் தருவது இவ்வீரமேயாம். தரும நலம் தழுவிச் சத்தியம் தோய்ந்த பொழுது வீரம் சீரிய வெற்றியில் சிறந்து திகழ்கின்றது.

இத்தகைய உத்தம வீரம் தமிழில் ஒளி வீசியுள்ளது. இதன் இயல் செயல் நிலைமை, தலைமை முதலிய வகைகளை எல்லாம் நயனுற விளக்கித் தமிழ்மொழி வியன் அமைந்து நிற்கின்றது.

விழித்தகண் வேல்கொண்(டு) எறிய அழித்திமைப்பின்
ஓட்டன்றோ வன்கண வர்க்கு. 775 படைச் செருக்கு

போர்க்களத்தில் உள்ள வீரன், எதிரி வீசிய வேல் நேரே பாய்ந்தாலும் அவனைச் சினந்து விழித்த கண்ணை இமையான். சிறிது இமைத்தாலும் அதனையும் ஒரு பெரிய தோல்வியாகக் கருதி நாணுவான் என்னும் இதனை நுணுகி ஆராயவேண்டும்.

உத்தம வீரனுடைய மனப்பான்மையைக் குறித்து உணர்த்தியுள்ள இது எத்துணை உய்த்துணர்வுடையது! எவ்வளவு அதிசயமானது!

சிறு தூசி எதிரே நேரினும் கண் இமைக்கும் இயல்பினது; அது கொடிய வேலின் எதிரேயும் இமையாது நின்று பகைவனை வென்று வெற்றியை விளைப்பது வீரரது அமைதியாம். இத்தகைய வீரர்கள் பலர் முன்னம் இங்கு இருந்துள்ளமையினாலேதான் இந்நாட்டு மொழியில் இப்படிப் பாட்டு எழுந்தது.

ஏற்றவர் இமைப்பினும் இகழ்ந்து எறிதல் செய்யார்? – சூளாமணி

வெல்வது விதியின் ஆகும் வேல்வரின் இமைப்பேன் ஆயின்
சொல்லிநீ நகவும் பெற்றாய்! – சீவகசிந்தாமணி

கண் இமைத்தாலும் போரில் புறங்கொடுத்தவராக எண்ணி அவர்மேல் அமர் தொடார் என்பது இவற்றால் அறியலாகும்.

ஆடவரேயன்றி மகளிரும் ஈங்குப் பெருவீரமுடையராய் மருவியிருந்தார். அவரது மான வீரம் மாட்சி மிக்கது.

பெற்ற தந்தையும் உற்ற கணவனும் முதலில் மூண்ட போரில் மாண்டு போயினர். வயது முதிர்ந்த அவளுக்கு ஒருமகன் இருந்தான். பகை அரசரால் மீண்டும் போர் மூண்டபோது, தனது அருமை மகனையும் போருக்கு அனுப்பினாள். அவன் பொருகளம் புகுந்து அருஞ்சமர் புரிந்து முடிவில் உடல் இருபிளவாய் இறந்துபட்டான். அவனது வீரத்திறலைக் கண்டு அனைவரும் வியந்தார்.

அக்குலமகனை அனுப்பிய தாயின் மனநிலையைச் சோதிக்கக் கருதி ’உன் மகன் போரில் புறங்காட்டி ஓடிப் போனான்' எனச் சிலர் மாறுபாடாக வந்து சொன்னார். அதனைக் கேட்டவுடன் அவள் முகம் சிவந்தது. பிள்ளை பிழைத்தான் என்று எண்ணி மகிழாமல் உள்ளம் கொதித்தாள். நீங்கள் சொல்லுகின்றபடி என் மகன் உண்மையாகவே போருக்கு அஞ்சிப் புறங்கொடுத்திருப்பானாயின், அவனைப் பால் ஊட்டி வளர்த்த என் மார்பை அடியோடு அறுத்து எறிவேன்' என்று நெடிய வாள் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு போர்க் களத்துக்கு நேரே ஓடினாள். தன் அருமை மகன் உடல் சிதைந்து கிடப்பதைக் கண்டாள். பிடித்த வாளைத் தூர வீசினாள்.

இ்ரண்டு கைகளாலும் பிள்ளை உடம்பைச் சேர்த்து மீதுார்ந்து பார்த்தாள். உள்ளப் பாசத்தால் கண்ணீர் வெள்ளம் என வெளி வந்தது; ஆயினும் அமரில் இறந்ததை நினைந்து மிகவும் மகிழ்ந்தாள். அவளது குலவீரத்தை வியந்து உலகம் புகழ்ந்து நின்றது.

நேரிசை ஆசிரியப்பா

நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறின னென்றுபலர் கூற
மாண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென்
முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக் 5
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே. 278 புறநானூறு

இது காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் சங்கப் புலவர் பாடியது.
வீரக்கிழவியின் தீரச்சரிதம் இதில் பாராட்டப்பட்டுள்ளது.

இந்நாட்டு வீரம் மிகவும் பெருந்தன்மையுடையது. எதிரி தளர்ந்தால் உடனே அமரை நிறுத்தி அவனை ஆற்றித் தேற்றி அயல் அகலவிடுவது தமிழ் வீரத்தின் இயல்பாம்.

பேராண்மை என்ப தறுகண்;ஒன்(று) உற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு. 773 படைச் செருக்கு

உத்தம வீரத்தின் இலக்கணம் இங்ஙனம் உதித்திருக்கிறது.

முதல்நாள் போரில் வலியிழந்து நின்ற இராவணனை நோக்கி, ’இன்று போய் நாளை வா’ என்று இராமன் அருள் புரிந்து விட்ட அற்புத வீரம் இந்நாட்டிலிருந்து விளைந்தது. தமிழ் இலக்கியத்தில் வீரம் தலை சிறந்து மிளிர்தலால் அந்நிலைமை தெரிய இங்கு அது முதலில் நின்றது.

காதல் என்பது ஆடவரும் மகளிரும் உள்ளம் கலந்து உயிர்க்கேண்மை கொண்டு உவந்து நிற்கும் பேரன்பு. ஆண்மையின் தனி நிலையமாயுள்ள வீரம் முன்னுற வந்தது. இருபாலும் ஒருமையுடன் மருவி மகிழும் காதல் அதன் பின் வைக்கப்பட் டது. இதன் தன்மையும் தகைமையும் பலவகைத் துறைகளாய்ப் பரந்து விரிந்து இன்பச்சுவை சுரந்துள்ளன.

வீரமும் காதலும் தமிழ்மொழியில் விளங்கி நிற்றல்போல் வேறு எம் மொழியிலும் இத்தகைய விழுமிய நிலையில் விளங்கவில்லை. அருள் ஈகை முதலியனவும் அவ்வாறேயாம்.

இவ்வண்ணம் உயர்நலங்கள் பல சுரந்துள்ள தமிழை ஊன்றி உணராமல் ஊனமுற்றிருத்தல் ஈனமாகும். உயிர்க்கு உறுதி நலம் தருகின்ற தெய்வத்தமிழை உய்திபெற உணர்ந்து கொள்ளுக என அறிவுறுத்துகிறார் இப்பாடலாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Apr-19, 8:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே