பயணத்தின் நடுவிலே - நீ

கண்மை எடுத்து அழகாய் தீட்டி வைத்தாற் போல்
நீண்டு கொண்டே செல்லும் சாலை..
தண்ணீர் கிரகிக்கும் சூரியன் கானல் நீரை சாலை
எங்கும் கொட்டி கொண்டிருக்கும் உச்சி வேளை..
கண்சிமிட்டாமல் அருகே செல்ல செல்ல கட்டணமே
வாங்காமல் மாயாஜாலம் செய்து மறைந்து சென்றது கானல் நீர்...
அனுமதி ஏதும் இன்றி ஜன்னல் வழி வந்த வெப்ப காற்று
என்னை சற்று சூடாக்கி சென்றது!
அவ்வவ்போது வரும் வேகத்தடைகளால் கொஞ்சம் தூங்காமல்
பேருந்தை ஓட்டினார் அந்த அழகான கருப்பு மனிதர்..
வேகத்தடை என்ற பெயர் தவறானது என்று மனதில் பட்டது..!
ஆம். அது ஓட்டுனர்களின் தூக்க தடை தானே!! - சிந்திக்கையில்
திடீரென பேருந்து நிற்க எதிரில் ஆட்டு மந்தை சாலை கடக்க
அதை காண பயணிகளின் தலை ஜன்னல் வழியே தொங்கின..
இந்த மனித மந்தைகளை காண தான் தெரிந்ததே இந்த ஆடுகள்
கூட்டமாய் சாலை கடக்க வந்ததோ என எண்ணினேன்.
மீண்டும் பேருந்து பயணப்பட என் இதயமோ என்னோடு நீ இல்லாத
இந்த பயணத்தை நினைத்து கண்ணீர் சிந்திட அதுவும் கானல் நீரோடு கலந்தது!

எழுதியவர் : அமர்நாத் (25-Apr-19, 1:24 pm)
சேர்த்தது : அமர்நாத்
பார்வை : 635

மேலே