காதல்

அசைந்து அசைந்து
நடந்து வந்தாள் அன்னமவள்,
பூங்காற்று வந்து தொட,
புளகாங்கிதம் அடைந்தாள்
துள்ளி துள்ளி குதித்தாள் அவள்
துள்ளும் புள்ளி மான் ஆனாள்,
சோலைக்குயில் கூவும் இசைக்கு
மயங்கி தன்னை மறந்தே
அழகு மயிலாய் ஆடி வந்தாள் அவள்,
அப்படியே நதியோரம் வந்தாள் ,
அந்தி மயங்கும் வசந்த மாலையில்
இன்ப வேளையில் ஆதியும் உறங்க
சென்றபின்னே வானமும் சிவந்தது,
நதிக்கரையில் நின்றிருந்த எனக்கு
இயற்கை தந்தது பெருவிருந்து .

நதியோரம் வந்து நின்ற கண்ணியவள்
ஓடும் நதி நீரில் கால் வைக்க,
துள்ளியது கயலிரண்டு இவள் வெண்
தாமரை முகத்தை புது நீர் சுனை
என்று எண்ணியதோ அவள் கண்ணிரண்டை
அதில் நீந்தும் கயல்தானோ என்றெண்ணி
நதிநீர் கயல் இரண்டும் துள்ளி அவள் முகமடைய,
அங்கு நீர் ஒன்றும் காணாது, கயல் ஏதும் காணாது ,
ஒன்றும் புரியாது நதி நீருக்கு மீண்டும் திரும்ப,
கயலும் ரசித்த அவள் கண்ணழகைக் கண்டு
அவள் வரவிற்கு காத்திருந்த காதலன் நானும்
ரசித்தேன் அவள் கண்ணழகைக் கண்டு .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-May-19, 7:27 pm)
Tanglish : kaadhal
பார்வை : 162

மேலே