புயல் எனப் புறப்படு பெண்ணே
புயல் எனப் புறப்படு பெண்ணே…
உதித்ததம்மா ஓர் புலரி உனக்கெனவே கீழ் வானத்தே….
விரித்ததம்மா தன் பொன் மடியை பூபாள ராகத்தே…
அடுப்பறையோ நின் உலகின் முடக்கறையாய்ப் போனதம்மா..
நீ சொரிந்த பெரு மூச்சோ கரும்புகை என ஆனதம்மா….
மனச்சிறையில் விலங்கிட்ட நின் கனவு கைதி அன்றோ…அது
ஈட்டிடா சுதந்திரமோ பெண்மைக்கே சதி அன்றோ….
அலங்காரப் பதுமை அல்ல நீ ஆறறிவின் திருவுருவம்…இதைச்
செப்பிடுதே சிலந்தி வலை தனில் சிக்குண்ட சிற்றுயிரும்….
இல்லத்தின் அச்சாணி நீ போற்றும் பொறுமை அன்றோ…
நினதருமை பேணாக்கால் தடமெங்கும் வறுமை அன்றோ….
கருவில் உதித்து உருவாய் எழுமுன் கள்ளிப் பால் ருசித்த நின் சமூகம்
அறிவுப் பசி மீறி கரை மீறும் கங்கை ஆகி எடுக்கட்டும் புதுப்பிரவாகம்…
குன்றத்து விளக்கெனவே பெறுவாய் கல்வி குலமகளே…அது
யுகம் பல தாண்டியும் கொழிக்கும் நின் வம்சத்தின் விதை நெல்லே…
கல்விப் பயிர் வளர்க்க படி தாண்டிடுவாய் ஏடெடுத்து…
தடுப்போரை முகம் உமிழ்ந்து பாராதே ஏறெடுத்து….
பந்தயச் சாலைகளில் பயணப்படும் பரிகளா பாவைகள்….
கடிவாளத்தை களைந்திடுங்கள் மூன்றாம் சிறகை விரித்திடுங்கள்…
தலை தாழ்த்தி நிலம் நோக்கும் கோலப் பார்வையினலே
வண்ணதை வளைத்திட்ட வானவில்லை முகவரியாக்கு நின் வழிதனிலே…
திங்களொப்ப குறுநகை தனை செவ்வாயில் ஏந்தி ஞாயிறாய்
எழுந்திடுவாய் பெண்ணே…
நின் ஞானச் செருக்கதனில் பூமிப் பந்தை ஊறவைத்து
புத்துயிரூட்டிடுவாய் கண்ணே…
தறித்திரத்தை துடைத்தெறிய புடமிறங்கு பொன் எனவே…..
சரித்திரமே நினைப் பாட புறப்படுவாய் புயல் எனவே…
சு.உமா தேவி