அறிவின்பம் என்றும் அறமாய் இன்கவியுள் வந்தருளும் வளர்ந்து - கவி, தருமதீபிகை 203

நேரிசை வெண்பா

பொறியின்பம் எல்லாம் புலையாய் ஒழிய
அறிவின்பம் என்றும் அறமாய் - நெறியின்பம்.
தந்தருளும் அந்தத் தனிநலங்கள் இன்கவியுள்
வந்தருளும் நன்கு வளர்ந்து. 203

- கவி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொறிகளால் நுகர்கின்ற போகங்கள் யாவும் ஈனமாய் இழிந்து போகின்றன; அறிவின்பம் என்றும் புண்ணிய நிலையமாய்ப் பொலிந்து விளங்குகின்றது; அந்தப் பேரின்பங்கள் கவிகளில் விளைந்து வருகின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மெய், வாய், கண் முதலிய கருவிகளைப் பொறி என்றது. போகங்களை நுகர்தற்கு உரிமையாய் அமைந்துள்ள இவை இந்திரியங்கள் எனப்படும்.

ஐந்து பொறிகளாலும் அருந்தல் முதலியனவற்றை உயிரினங்கள் நுகர்ந்து வருகின்றன. இப்பொறி நுகர்ச்சிகள் உடல் அளவில் நின்று இளிவாய் ஒழிந்து போகின்றன. இவை உடம்பின் புறத்தே உள்ளன. அகத்தில் அமர்ந்துள்ள அறிவின் நுகர்வு அதிமேன்மையானது.

இனிய உணவு, இன்னிசை, அரிய காட்சி முதலியன யாதும் இல்லாமலே அறிவு தனி நிலையில் இன்பம் நுகர்கின்றது. அந்த இன்பம் புனிதம் மிகவுடையது. புண்ணியம் நிறைந்தது. உன்னதமான உயிர்நிலையிலேயே உலாவி ஒளி சிறந்து வருதலால் அதில் என்றும் தெளிவான பேரின்ப விளைவே பெருகி எழுகின்றது.

தரும நலம் கனிந்த அத்தகைய அரிய அறிவின்சுவை கவிதையிலேயே கனிந்திருக்கின்றது.

அவியினும் இனியதான கவியின் சுவையைக் கலைஞன் நுணுகி நுகருங்கால் புலையான உலக நிலையை மறந்துவிடுகின்றான். உள்ளம் உருகி உணர்வு பெருகி உயிர் பரவசமாகின்றான்.

தரவு கொச்சகக் கலிப்பா

தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
நான்படிக்கும் போதென்னை நான்அறியேன்; நாஒன்றோ,
ஊன்படிக்கும்; உளம்படிக்கும்; உயிர்படிக்கும்; உயிர்க்குயிரும்
தான்படிக்கும்; அநுபவம்காண் தனிக்கருணைப் பெருந்தகையே. 1

வான்கலந்த மாணிக்க வாசக,நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்(து) உயிர்கலந்(து) உவட்டாமல் இனிப்பதுவே. 2

தேவார, திருவாசகங்களிலுள்ள பாடல்களின் இன்ப நலங்களை நுகர்ந்து மகிழ்ந்த இராமலிங்க சுவாமிகள் இங்ஙனம் அன்பு ததும்பத் தமது அனுபவத்தை வெளியிட்டிருக்கிறார்.

கவிச்சுவை அமுதினும் இனியது; உயிரைப் பரவசமாக்கி உயர் பேரின்பம் தருவது என்றதனால் அதன் அருமைப் பண்புகள் அறியலாகும்.

தெய்வத் திருவருள் தோய்ந்த சிறந்த மேதைகளிடமிருந்து பிறந்து வந்தனவாதலால் கவிகள் உயிர்களுக்கு உயர்ந்த இன்ப நலங்களை உதவியருள்கின்றன.

அறிவமுதமான இனிய கவிச்சுவைகளை நுகர்ந்த போதே மனிதன் பிறந்த பெரும் பயனைப் பெற்றவன் ஆகின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-May-19, 1:07 pm)
பார்வை : 29

சிறந்த கட்டுரைகள்

மேலே