இருட்டறையில் உள்ளதடா உலகம்

#இருட்டறையில் உள்ளதடா உலகம்..!

கருவறைதான் நமது கோட்டை
கண்மலரா போதினிலே
இருட்டறையாய் இருந்தபோதும்
இன்பந்தானே என்றுமென்றும் என்றும்..!

வந்து விழுந்த பூமியிலே
வளரும்போது இருளில்லை
வஞ்சனையால் வந்த இருட்டு
மரணம் வரை வந்து வந்து சூழும்..!

உழைத்திடவே ஒரு கூட்டம்
பிழைக்குது பார் கார்ப்பரேட்டும்
ஏழைக்கென்றும் இருள்தானே
இல்லையன்றோ வெளிச்சமது கொஞ்சம்..!

கட்டுக் கட்டாய்ப் பணமெல்லாம்
கைமாறிப் போனதிலே
சாலைக்கென பறிக்கிறாரே வயலை
போராடித் தடுப்போம் பேரிருளை..!

மை வைக்க மொய் வைப்பார்
கை நீட்டிப் பெற்று விட்டால்
காரிருள்தான் காலமெல்லாம்
வரம் கேட்டு வருமோ எத்துயரும்..?

வேட்பாளன் கொடுத்த வாக்கு
கோட்டை கண்டால் போச்சு
போட்ட வாக்கு வீணாகும்
பட்டபகல் ஒளிகூட பார்வை விலகும்..!

இப்படித்தான் காலந்தோறும்
எதிர்ப்போர்க்குக் கண்ணீரும்
இருட்டுக்குள்ளே வாழ்ந்து நாமும்
குருட்டுவழி பழகிவிட்டோம் உலகில்..!

நமக்கென்ன போடா போ
நாலு எட்டாய் பிரிந்து சென்றால்
பசு சிங்கம் கதைதானே என்றும்
வாழ்ந்திருக்கும் அரசு மனிதம் தின்றும்..!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
சொல்லில் உண்டு செயலில் இல்லை
திரண்டு ஒன்று கூடுமந்த நாளில்
இருட்டுக் கதவும் உடைத்திடலாம் உலகில்..!

#சொ.சாந்தி

நேற்று அருந்தமிழ் கலை இலக்கிய மன்றத்தில் வாசித்த கவிதை. கவி அரங்கத் தலைமை திரு தேனீ நரசிம்மன் அவர்கள். சிம்மக் குரல் கவிஞர். திரு மிகு கவிக்கோ துரை வசந்தராசன் அவர்களின் கவிதை பாவேந்தர் பாரதி தாசன் அவர்களின் கவிதையைப்போல் வெகு சிறப்பு.

திரு மிகு நிமோஷினி அவர்களின் பாவேந்தர் பற்றிய சொற்பொழிவு நகைச் சுவையுடன் வெகு நேர்த்தி.

திரு வாலிதாசன் அவர்கள் உட்பட பல கவிஞர்களின் கவிதைகளும் சிறப்பாக இருந்தது.

கவிதை, பாடல், சொற்பொழிவு, எக்ஸ்னோரா அவர்களின் திருக்குறள் விளக்கம் என்று நிகழ்ச்சி களை கட்டியது.

நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கியவர் “நம்ம ஊரு” கோபிநாத் அவர்கள்.

வெகு சிறப்பானதொரு நிகழ்ச்சியில் கவிதை வாசிக்கும் வாய்ப்பினை நல்கிய மன்ற நிறுவனர் திருமிகு கனல்மணி சார் மற்றும் திரு மிகு துருவன் சார் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.🙏🙏

எழுதியவர் : சொ.சாந்தி (8-May-19, 8:40 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 281

மேலே