அத்துவிட்ட பிற்பாடு

#அத்துவிட்ட பிற்பாடு..!

அவள்
கல்லையும் மண்ணையையும் சுமந்து பெற்ற
தினக் கூலிப் பணம்
சாப்பாட்டுச் செலவுக்குப் போக
நோட்டும் சில்லறையுமாய்
டப்பாவில் கடுகுடனோ
அல்லது பருப்புடனோ
குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கும்
பற்றாக்குறையின் போதெல்லாமும்
பக்கத் துணை அதுதான் அவளுக்கு..!

குடித்தனம் நடத்திக் கொண்டிருப்பதை
குடிகாரன் அறிந்து கொண்ட நாளாய்
கடுகும் பருப்பும்
காசு பார்ப்பதே இல்லை
அத்தனையும்
டாஸ்மாக்தான் பார்த்துக்கொண்டிருந்தது..!

கையிருப்பும் இல்லாமல்
வாய்க்குச் சோறும் இல்லாமல்
குளிர்க்காய்ச்சலில்
அனத்திக்கொண்டிருந்தாள்..!

“காச எங்கடி ஒளிச்சி வெச்சுருக்கே
சொல்லுடி… சொல்லுடி.”
ஏறி ஏறி மிதித்துக் கொண்டிருந்தான்
ரெட்டைக்கால் மிருகம்..!

அவள் அலறுவதைக் கேட்கச் சகியாமல்
பஞ்சாயத்துத் கூட்டி இருந்தார்கள்
ஊர் ஜனமும்..!

“ஏம்மா இந்த மனிஷனோட
சேர்ந்து வாழப் போறியா..?
இல்ல அத்து விட்றவா..!”

ஊர் பெரிசு ஒண்ணு கேட்க

“மிருகத்தோட வாழ முடியாது அய்யா
அத்து விட்ருங்க..’

குமுறி அழுதவளை
எகிறி வந்து மிதிக்க இருந்தவனை
ஊரே கூடி அடக்கியபோது

அறுத்து எறிந்திருந்தாள்
ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத
வெத்து மஞ்சள் கயிறை..!

அவளின் கழுத்து மட்டுமல்ல
மனமும்தான்
லேசாகிக் கிடந்தது..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (8-May-19, 8:54 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 45

மேலே