கானல்கள் சோலைகளாய் உருபெறட்டும்

கானல்கள் சோலைகளாய் உருப்பெறட்டும்...!

உன்னைப் பற்றிய ஓயாத நினைவலைகள்
உணர்வுகள் ஊற்றெடுத்து பிரவாகமாகியது
அணைபோட முயன்று உள்வாங்கி அடங்கியதால்
சுனாமி எச்சரிக்கையை முகுளம் பிறப்பிக்க
உள்ளம் தனிமையை தேடி ஓடியது
உடலோ அனிச்சையாய் மஞ்சத்தை நாடி தஞ்சமானாது....

காலச்சக்கரம் பின்னோக்கி பலகாதம் சுழல
இதயம் சொன்ன என் கானல் கதைகளை
தலையணை கவனமாய் தணிக்கையின்றி கிரகித்தது....

தன்னை மறந்தநிலை...
இதயம் திறந்தநிலை....
என்றோ நிகழ்ந்த எதிர்பாரா முத்தத்தால்
இன்று முகம் நாணத்தில் சிவந்தது
இதழ்கள் புன்னகை உதிர்த்தது
மனமோ களிநடம் புரிந்தது...

மறுகணமே வசந்தம் வலிய வெளியேற
இலையுதிர் காலம் அத்துமீறி அரங்கேறியது
விரல் நுனியின் ஓரவுரசலில் நீ விடைபகர்ந்த
அந்த ஒருநொடி மீள் கொண்டு
இதயம் சுக்குநூறான வலியில் தவித்தது

துள்ளலும் துவண்டலும் மாறி மாறி
உள்ளத்தை நீரணை மதகாய் ஆட்டுவிக்க
உறக்கமற்ற விழிகள் இரக்கமற்ற விதியை எண்ணி
உதிர்த்த கண்ணீரை ஈர்த்தத் தலையணை
இதயக் கனத்தையும் தன்னுள் வார்த்தது....

இனி நினைவலைகள் விடைபெற்று
இமைக்குள் விழிகள் உறக்கம் கொள்ளட்டும்
கனவுகளிலேனும் கானல்கள் சோலைகளாய் உருப்பெறட்டும்

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (9-May-19, 10:25 am)
பார்வை : 51

மேலே