ஓயாமல் சுற்றும் பூமி

மனம் கனத்த பொழுதினில்
ஜன்னல்வழி தெரியும் மரக்கிளையினில்
கீச்சென்று கிளை தாவும் அணில் குஞ்சொன்று

புழுக்கமான ஒரு நேரம்
சட்டென்று வந்து மோதி செல்லும்
ஏதோ ஒரு திசையிலிருந்து தென்றல் காற்று

ஒரு கொண்டாட்டத்தின் பந்தியில் என்
எச்சில் இலை எடுத்து போகிறாள்
அறிமுகமில்லா பெண்ணொருத்தி

துட்டுகளின் கணம் சேர்ந்த பாத்திரத்தை
கவிழ்த்துபோட்டு பெரும் பணம் கொடுத்த
முகத்தை தேடிப்பார்க்கிறான் பிச்சைகாரன்

முகநூல் பார்க்கையில் ஏதொவொரு
எண்ணை குறித்து கொண்டு
அவசரமாக ஓடுகிறான் குருதி கொடுக்க

அலையடித்து சென்றவன் உயிரை
அள்ளி கொண்டு வருகிறார்
அடுத்த கணம் நீரில் குதித்த மனித கடவுள்

காரணம் தெரியா விசையோடு
காற்றையும் நீரையும் சுமந்து கொண்டு
ஓயாமல் சுற்றுகிறது பூமி

எழுதியவர் : சிவா. அமுதன் (10-May-19, 9:38 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 124

மேலே