தாடிக்காரன்

முகவுரை
தாடி வைத்திருக்கும் எவரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலைமை இலங்கையில் இப்போது உருவாகி உள்ளது அண்மையில் இலங்கையில் நடந்த பயங்கரவாதிகளின் குண்டு தாக்குதலே அதற்குக் காரணம். இந்தக் கதை எனக்குக் கொழும்பில் தெரிந்த தாடி வைத்த ஒருவனைப் பற்றியது

****
அந்த மீசை வைத்த தாடிக்காரனை எப்போதும் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், ,கொட்டாஞ்சேனை முருகன் கோவில் முன்னிலும், பிரதான வீதியில் உள்ள மசூதி ஆகிய இடங்களுக்கு அருகே உள்ள பாதை ஓரத்தில் கண்டிருக்கிறேன் அந்த பிச்சைக்கரனுக்கு முகச் சவரம் செய்து, மீசை எடுக்க வருமானம் இல்லாததால் அவன் அதை இரண்டையும் வளர்க்கிறான் போலும் என்று என் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன், அவனின் தாடியைச் சவரம் செய்து, மீசையையும் எடுத்து விட்டுப் பார்த்தால் அவனின் மாநிறத்துக்கும், உயரத்துக்கும் ஒரு தமிழ் திரைப்படத்தில் வரும் கதாநாயகனைப் போல் இருப்பான் எனக் கற்பனை செய்து பார்த்தேன் அவனுக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கும் கண்களில் சாந்தமான தோற்றம் வருபவர்கள். அந்தோனியார் தேவாலயத்துக்கும், செட்டியார் தெரு கோவிலுக்கும் பிரதான வீதியில் உள்ள மசூதிக்கும் புத்த விரவுக்கு வரும் பக்தர்களின் மனதைக் கவரும் விதத்தில் அவர்களின் மதத்தின் பக்தி பாடல்களை அந்த தாடிக்காரன் தன் வாயில் வைத்து வாசிக்கும் மவுத் ஓர்கன் (Mouthorgan) இசைக்கருவி மூலம் இசைக்கும் பக்தி பாடல்கள் என்னைக் கவர்ந்தன. தன் இசை திறமை மூலம் கிடைக்கும் வருமானம் அவனுக்கு மூன்று நேர உணவுக்கு போதுமானது.

கொழும்பு புறக்கோட்டையில் உள்ள பிரதான வீதியின் பிளட்போர்மில் உள்ள ஒரு கடை ஓரத்தில் இரவில் அவன் தூங்குவான். சில உணவகங்கள் அவன் மேல் கருணை கொண்டு மிகுதி இருக்கும் உணவைக் கொடுப்பார்கள் பல தடவை நான் அந்தோனியார் தேவாலயத்துக்குப் போன நேரம் அவனின் இசையைக் கேட்டு இரசித்த பின் அவனுக்கு வாழைப்பழமும் பன்னும் கொடுப்பதுண்டு. என்னைக் கண்டவுடன் எனக்கு விருப்பமான பாடல்களான “எல்லாம் ஏசுவே”, “கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் ஆகிய பாடல்களை தன் இசைக் கருவியில் வாசித்து, என் முகத்தில் தெரியும் புன்சிரிப்பை கண்டு திருப்தி அடைவான் . ஒரு நாள் சிவப்பு மசூதிக்கு முன்னால், நாகூர் ஹனிபாவின் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடலை அவன் தன் கருவியில் இசைத்தது எனக்கு வியப்பைக் கொடுத்தது இன்னொரு நாள் முருகன் கோவிலுக்கு முன் அவன் இசைத்த காவடி சிந்துவின் இசை என் கால்களைத் தாளம் போட வைத்தது எனது நண்பன் ஜெயசேன அவனின் இசையைக் கொழும்பு துறை முக்கத்துக்கு அருகே உள்ள சம்போதி சைத்திய விஹராவுக்கு முன் ரசித்து எனக்கு சொல்லி அவனின் இசை திறமையைப் பாராட்டிப் பேசி இருக்கிறான். எல்லா மதப் பாடல்களும் தெரிந்த அவன் எந்த மதம் சார்ந்தவன் என்று நான் அறிய விரும்பினாலும் அவன் பெயரை நான் கேட்கவிரும்பவில்லை ஒரு வேளை அவனுக்கு எல்லா மதமும் சம்மதம் போல் எனக்குத் தோன்றியது . நான் அவனைக் காணும் போது அவனின் இசைக் கருவியின் இசையை ரசித்து பணம் கொடுத்து வீடு திரும்புவேன்.
****த
அன்று ஈஸ்டேர் ஏப்ரல் 21 தினம். அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன். சம்பவம் நடந்த இடத்தில் அனேகமாக இருந்து பிச்சை எடுக்கும் தாடிக்காரனுக்கு என்ன நடந்தது என்று அறிய நான் சென்ற போது அவனை எனக்கு தெரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வா இரண்டு போலீஸ்காரர்கள் புடை சூழ குறுக்கு விசாரணை செய்வதைக் கண்டேன். குறுக்கு விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வா எனக்கு நன்கு தெரிந்தவர். முற்கோபி. அவர் நான் போலீஸ் சேவையில் பிரதம இன்ஸ்பெக்டராக இருந்தபோது எனக்குக் கீழ் சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்தவர்.
அவரிடம் கேட்டேன் “என்ன இன்ஸ்பெக்டர் ஏன் இவனை விசாரிக்குறீர்? இவனை எனக்குத் தெரியும். இவன் அப்படி என்ன குற்றம் செய்தான்? தாடி மீசை வைத்த இவன் ஒரு பிச்சைக்காரன். மவுத் ஒர்கன் கருவி மூலம் தமிழ் கத்தோலிக்க இந்து முஸ்லீம் பாடல்கள் வாசித்துப் பிழைப்பவன் “:

“ஜோசப் சேர் இவன் எந்த மதம் என்று எனக்குதெரியாது . இவனது தேசீய அடையாளக் கார்டை கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் திரு திரு வென்று முழித்தான் அவனிடம் அடையாள அட்டை இல்லை என்று எனக்குத் தெரிந்தது . அவன் பெயரைக் கேட்டேன் அவன் அதக்கும் பதில் சொலவில்லை.. இவன் ஒரு முஸ்லீமாக இருக்கலாம் என்ன நினைத்தேன் அவன் வைத்திருந்த இவன் வைத்திருந்த ஒரு பழைய பையை பிரித்துப் பார்த்தேன் அதுக்குள் ஒரு கிழிந்த சாரமும் போர்வையும் . ஒரு பெனியனும், ஒரு கோப்பையும் பிலேட்டும் இருந்தது இவனை அந்தோனியார் தேவாலயத்துக்கு அருகே அடிக்கடி தான் டியூட்டியில் போன போது தான் கண்டதாக சார்ஜன்ட் சொயிசா சொன்னதால் இவனுக்கும் தேவாலயத்துக்குக் குண்டு வைத்த தாடி வைத்த முஸ்லீமுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரிக்கிறேன்”என்றார் சில்வா,
எனக்கு அவர் தந்த பதில் சிரிப்பைத் தந்தது.

“இன்ஸ்பெக்டர் சில்வா , தாடியை வைத்து இவன் எப்படி முஸ்லீம் தீவீரவாதி என்று தீர்மானிக்க முடியும்? . இவன் எல்லா மத பாடல்களையும் அவன் வைத்திருக்கும் கருவியில் இசைக்கிறானே இவன் என்ன மதம் சார்ந்தவன் என்று எனக்கே தெரியாது”

“நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுகிறான் இல்லை. முழிக்கிறான். அது தான் இவனுக்குத் தெரியும் குண்டு வைத்தவர்கள் யார் என்று. பயத்தில் சொல்லுகிறான் இல்லை. இவனை நிலையத்துக்குக் கொண்டுபோய் விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தால் உண்மை வெளிவரும்” சில்வா சொன்னார்
எனக்குத் தெரியும் விசாரணையின் போது சில்வா எப்படி சந்தேக நபரை நடத்துவார் என்று

என்னை கண்டதும் தாடிக்காரன் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து. என்னைப் பார்த்து கை கூப்பி கும்பிட்டான் இன்ஸ்பெக்டர் சொன்னது அவனுக்கு புரிந்து விட்டது. தாடிக்காரன் தன் கிழிந்த சேர்ட்டுக்குள் கை விட்டு ஒரு கறுத்த நூலில் தொங்கிய சிறு சிலுவை பதக்கத்தை வெளியே எடுத்து விட்டான், அவன் தான் பேச முடியாத ஊமை என்று சைகை மொழி மூலம் எனக்குக் காட்டினான். அந்த தாடிக்காரன் வாய் பேச முடியாத கத்தோலிக்கன் என்று இன்ஸ்பெக்டர் சில்வாவுக்கு தெரிந்ததும் அவர் என்னைப் பார்த்து” ஐ ஆம் சொரி ஜோசப் சேர்” என்று சொல்லிப் பேசாமல் அந்த இடத்தில் இருந்து தன் உதவி போலீஸ்காரர்களோடு நகர்ந்தார்.

*****

( யாவும் புனைவு)

எழுதியவர் : Pon Kulendiren (11-May-19, 8:15 am)
பார்வை : 123

மேலே