சொல்வனம்-----------கவிதைகள்

அவர்கள்

தலை குனிந்தே
வரவேற்கப்பட்டார்கள்
தலை குனிந்தே
சிரித்துக்கொண்டார்கள்
தலை குனிந்தே
நலம் விசாரித்துக்கொண்டார்கள்
தலை குனிந்தே
வியாபாரம் பேசப்பட்டது
தலை குனிந்தே
தட்டு மாற்றப்பட்டது
தலை குனிந்தே
நாள் குறிக்கப்பட்டது
தலை குனிந்தே
விருந்து நடைபெற்றது
தலை குனிந்தே
அலைபேசி எண்கள் பரிமாற்றம் பெற்றன.
அந்தத் திருமண வைபோகம்
தலைகுனிந்தே
ஆசீர்வதிக்கப்பட்டது
அவர்கள் அலைபேசிவாசிகள்..!

- கவிஜி

வாசனை

கடுங்கோடையின் வெம்மையில் உதிர்ந்த
பவளமல்லிகளைக் கோத்த விரல்கள்
உன்னுடையதாகவே இருக்க வேண்டும்.
வெண்ணிற இதழ்களின் வனப்பையும்
செம்பவளக் காம்புகளின்
உலர் பிசுபிசுப்பையும் மீறி
உள்மனதை வருடுகின்றன,
உன் விரல்களின் மருதாணி வாசனை

- வே .முத்துக்குமார்

தனிமை

மீண்டும் இந்தப் பாதையில்
திரும்பப்போவதில்லை
என்றானபின் விட்டுச் செல்லும்
வழித்தடத்தின் மீது உங்களுக்கென்ன
அக்கறை வேண்டிக்கிடக்கிறது...
அது ஊர் கூடும் சந்தையின்
ஏதோ ஒரு மூலையில்
தாய்க்காக ஏங்கிக்கிடக்கும்
நாய்க்குட்டிகள்போல்
கேட்பாரற்றுக் கிடக்கும்...

- ஹரிசரன்

பூனைகள்

தொலைந்துபோன பூனைகள்
நம் நினைவுகளிலிருந்து
எப்பொழுதும் தொலைந்துபோவதில்லை
காணாமல் ஆக்கப்பட்ட போராளிகள்போல

தொலைந்துபோன பூனைகள்
கால்களை உரசுவது போன்ற
காட்சிப் பிழைகளைத் தருகின்றன.

தொலைந்துபோன பூனைகளின்
மீசை முடிகள் இன்னமும்
உடல் கூசச் செய்கின்றன.

தொலைந்துபோன பூனைகளின்
மூத்திர வாசம் இன்னமும்
மூக்கடைக்கச் செய்கின்றன.

தொலைந்துபோன பூனைகள்
பால் குடித்த பாத்திரங்கள்
அழுக்கடைந்து கிடக்கின்றன.

தொலைந்துபோன பூனைகளின்
மியாவ்கள் அறையெங்கும்
நிறைந்து கிடக்கின்றன.

தொலைந்துபோன பூனைகளின்
‘காணவில்லை’ சுவரொட்டிகளை
யாரும் கண்டுகொள்வதில்லை.

தொலைந்துபோன பூனைகள்
அதிகாரவர்க்கத்தின் அலட்சிய மனோபாவத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றன.

தொலைந்துபோன பூனைகளைக்
கண்டுபிடிக்க
தேன்கூட்டைக் கலைக்க
ஆட்டோவுக்குத் தீ வைக்கும் காவல்துறை
சிறிதும் மெனக்கெடுவதில்லை.

தொலைந்துபோன பூனைகள்
நம் நினைவுகளிலிருந்து
எப்பொழுதும் தொலைந்துபோவதில்லை.

- முத்துக்குமார் இருளப்பன்

எழுதியவர் : (19-May-19, 9:12 pm)
பார்வை : 39

மேலே