கண்ணில் தெரிவது பெண்ணா

கண்ணில் தெரிவது பெண்ணா - இல்லை
பாலில் செய்திட்ட பொன்னா
கருமை சொல்வது கண்ணா - அது
கார்முகில் வானின் பண்ணா

பேரெழில் கண்ணோடு எந்தன் முன்னே
இப்பாவலன் கண்டிட செல்லும் பெண்ணே
மாதுவின் பார்வை பட்டால் கூட
மதுவென்றெண்ணி மயங்குகின்றேனே

நடந்து செல்வது ஓர் நங்கை என்று
இறுதிவரை நான் நம்பவில்லை
பறந்து செல்லும் வான் மங்கை என்று
பதித்துவிட்டேன் அதில் மாற்றமில்லை

வைரத் துகள்கள் தேர்ந்தெடுத்து
மஞ்சள் நிலவும் சேர்த்தெடுத்து
நாணம் ஊற்றி குலைத்தெடுத்து
மங்கை என்றே பிறந்தவளே


மஞ்சள் பூத்த நிறத்தாலே
என் மஞ்சம் வரை வென்றவளே
திங்கள் தூங்கும் இருவிழியால்
பல இம்சை மூட்டிச் சென்றவளே

வன்காற்று பட்டாலே
வளையும் இடை கொண்டவளே
வண்ணங்கள் வாழுகின்ற
வஞ்சியவள் என்னவளே

அழகுச் சொற்கள் குலைத்தெடுத்த
அழகான வார்த்தையவள்
நிலவுக் கறைகள் நீக்கி வைத்த
நடமாடும் பாவையவள்

பகலின் நிறத்தை சேர்த்தெடுத்து
பண்ணி மைத்த பருவமவள்
இரவும் பகலும் ஒன்றாக
பார்க்கவைத்த பெண்ணுமவள்

வந்தால் நடந்து
தொலைவில் சற்றே
வேகம் சென்றது
தூரம் உற்றே

அங்கம் எங்கும்
கதிர் வீச
தங்கம் போலது
ஒளி வீச

அவள் செய்கையெல்லாம்
மொழி பேச
அதை சங்கம் வைத்து
கவி பேச

சின்னச் சின்ன
இதழ் பேச
அதை பார்க்கு மெந்தன்
உயிர் கூச

அழகுக் குயிலோ
அதை கேட்டு
உயிர் விட்டுச் சென்றதடி
நீயோ பெண்ணிசை என்றதடி

காரெழில் குழலெழில்
காரிகை நீ எழிலடி
ஆடையில் வளைந்தாடையில்
அழகுப் பெண்மயிலடி

காலையில் நாளும் கண்களும் தேடும்
கார்த்திகை பேரொளியடி
காலமும் வேண்டும் காதலும் வேண்டும்
ஒரு வார்த்தை சொல்லிச் செல்லடி

எழுதியவர் : த.சே. சூர்யா (21-May-19, 6:56 pm)
சேர்த்தது : SURYA
பார்வை : 97

மேலே