கல்லூரி - நிறைவு நாள்

ஏலேய் எசமானா!
கடிகார உருக்காரா!
கண்ணாடித்தெறக் குள்ள
சுத்தி வரும் முள்ளு ராசா
கள்ளுந் தணிச்சிராத சோகத்த காட்டத்தான்
மூணு வருசமெங்கும் மும்முரமா போனியோ?

இனி
வரப்போற ஒரு வாழ்வ
பெறப்போற நான் சொல்ல
பஞ்சாங்கம் எதுக்கய்யா
பட்டறிவு இருக்கையில

சித்தெறும்பு கூட்டம் போல்
புத்தடஞ்சு போயிருந்து
பேசிச் சிரிச்சதெல்லாம்
பெறவெண்ணிப் பாக்கையிலே

காசு பணம் வேணான்னு
காத்துல விட்டெறிஞ்சு
வகுப்பறை வாசலுக்கு
வெரசா வரத்தோனும்

குட்டிக்கரணம் போட்டாலும்
கோடி ருவா கொடுத்தாலும்
வெட்டி போட்ட செலந்தி வல
ஒட்டு போட்டு சேராது
எட்டிப் போன இந்த சொந்தம்
தட்டிப் பாத்தும் வாராது

காதல் காய்ச்சல் வந்து
உள் நெஞ்சு நோகயில
வேல பாரத்தால உன்
சிரிப்புச் செத்து போகையில

முப்பத்தாறு மாசமும்
மாடாக மேஞ்செடுத்த
புகைப்பட புஷ்தகத்த
பொறுமையா பொறட்டிப் பாரு

உதட்டோரஞ் சிரிப்போட
கண்ணீரும் பொறந்து வரும்
இல்லாத ஒன்ன எண்ணி
எனம்புரியா அழுக வரும்

ஒத்த வடைக் காண்டி
ஒரு வாரம் பேசாம
ஒதுங்கி போன நேரம்
நெனச்சா என் மேல கோவம் வரும்

சேட்ட வேல செஞ்சு
ஏச்சு வாங்கி போனத
எண்ணிப் பாக்கும் போது
எனக்கு மட்டும் சிரிப்பு வரும்

பைய எடம் மாத்தி
பரீட்சையில தாள் மாத்தி
சுண்ணாம்புத்தூள் பூசி
மொகமெல்லாம் வெண் தூசி

வாத்தியாரு நடத்தையிலே
வீடியோ கால் பேசி
செஞ்சோமே குறுஞ்சேட்ட
கொரங்குல காவாசி

அத்தனையும் ஆட்டிவச்ச
காலக்கடவுள் கிட்ட
கேள்வியொன்னு கேட்டேனுங்க
வருத்தம் சொட்டச் சொட்ட

கடிகார மணி ராசா! கடிகார மணி ராசா!
ஒளிவேகம் ஒனக்கெதுக்கு மெதுவாகப் போ ராசா!

பாட வேளயிலே
படபடன்னு போகச் சொன்னா
முறிஞ்ச காலாட்டம்
மசமசன்னு கெடப்பியே

வெரப்பாக ஒருத்தர் நின்னு
வெளக்கமா நடத்தும் போது
செத்த ஒடலாட்டம்
அசையாம நிப்பியே

என்னய்யா உனக்காச்சு அண்டத்து ஆத்மாவே
பித்தனுங்க பிரிச்சுவச்ச எமதர்ம ராசாவே
நோவு பட்ட ஆத்தால பார்க்கப் போற புள்ள போல
இடியாட்டம் மணிவெட்டி எம்பாதை துள்ளி போறவரே

கேட்டு முடிச்சு கலங்கி நானு நிக்கயில
கலங்காம நின்னு கவிதயில சொன்னாக

நெல்லு முளச்சு நிக்கும்
வெள்ளாம காட்டுனுல
அறுவாலு வந்தாத்தான்
அடுத்த வேல சோறு வரும்

பாத தெளியவச்ச
வெள்ளாமக் காடுயிது
பிரிவால அறுக்கயில
புதுவானம் பாக்கப் போய்யா

கடிகாரம் உரைச்சகவி
காத தாண்டவில்ல
சித்தருங்க சொல்லயெல்லாம்
சிறுமூள கேட்கவில்ல

மூனாண்டும் நீந்தியாச்சு
முற்பகல் வாழ்க்கையில
இருதயமும் ஈரமாச்சு
பிரிவென்னும் நீரினுல

விழியெல்லாம் செவந்து போச்சு
வேஷங்கள் கலஞ்சு போச்சு
நிமிஷங்கள் சுருங்கி போக
நியூரான்கள் நசுங்கிப் போச்சு

பாரதிய படிச்ச நெஞ்சு
மொதமுறையா பயந்து போச்சு
இனிக்க இனிக்க பன்ன பேச்சு
இதிகாசம் ஆகி போச்சு

தங்கந் தந்தா திரும்பிடுமோ
எட்டுமணி எழும்பும் வீடு
அண்டத்துல ஏதுடா
இதுபோல குருவிக் கூடு

படுபாவி காலமிது பறந்து தான் போகுது
நடந்தது ஞாபகமா மாறுறத நெனச்சா
எடப்பக்கம் மாருயிது இறுகித்தான் போகுது

காலச்சு பதியாத எடமெங்க பாத்து சொல்லு – இனி
காலையில எட்டு மணி கூடுவோமா கேட்டு சொல்லு
உட்கார்ந்த மரப்பலகையில கைவச்சு தேத்தி சொல்லு
"பத்தாண்டு கழிச்சு நாங்க உட்கார வருவோம்
மூனாண்டும் நீ குடுத்த வத்தாத நினைவயெல்லாம்
பத்திரமா வச்சிரு எனக்காக காத்திரு"

எழுதியவர் : த.சே. சூர்யா (21-May-19, 7:26 pm)
சேர்த்தது : SURYA
பார்வை : 467

மேலே