நா காக்க
!
வாளால் மாய்ந்தவர்களைவிட
நாவால் நோயிலும் சாவிலும்
வீழ்ந்து கொண்டிருப்போரின் இருப்போ
நகரங்களில் காற்றின் மாசுக்களைப் போல...!
நஞ்சேற்றி வீசிய வார்த்தைகளோ சாகாமல்
உடனிருப்போரை சாகடிக்கும்; பல சமயம்
அவ்வார்த்தைகள் வீசியவரையும்
வாழவிடாமல் மாளவைக்கும்.
நஞ்சோ நா வீசும் வார்த்தையில் மட்டுமல்ல
நா(ம்) விழுங்கும் நாகரிக உணவிலுந்தான்;
சேர்ந்தாரைக் கொல்லும் கொடியோரைப் போல
உடல் சேர்ந்து சாகடிக்கும் அவ்வுணவும்.
'அமிழ்தால் செய்த நஞ்சு' அக்கால சீதையெனில்
'சுவையால் செய்த நஞ்சு' இக்கால உணவு;
சேரவிடாதவரை தயை காட்டாது கொன்றது முதல் ரகம்
சேர்ந்தோரை சுவையூட்டி சாகடித்தல் இரண்டாவது ரகம்.
அன்றோ உணவே மருந்தாம்- ஆம்
உணவே நோயறுக்கும் நோய் தடுக்கும்;
இன்றோ உணவோ நோய் கொடுக்கும் நோய் பெருக்கும்
அதனால் பலருக்கும் மருந்தே உணவாய்.
பச்சை சிவப்பு எனும் வார்த்தைகள்
நலமற்றதாகத் தெரியும் சில நேரங்களில்;
நல்(ம்) மண்ணில் விளையும் அவ்வண்ண
கனிகளும் காய்கறிகளும் என்றுமே நலம் பெருக்கும்!
வெள்ளை நிற உணவோடும் பளபளக்கும்
எண்ணெயுடனும் பட்டும் படாதிருத்தலே நலம்.
உடல் உழைப்பும் மட்டுமல்ல வெற்றுடம்பில் விழும்
சூரியக் கதிரும் உண்மையில் நம் உயிர் வளர்க்கும்!
எப்போதும் நா மட்டுமல்ல நம் மனமும்
அறிவோடு ஒட்ட நடந்து, நல் வெளியில்
தினமும் நடந்து வந்தால் நம் வாழ்வில்
எந்நாளும் கிட்டவே வராது கேடும் எந்த நோயும்!- .