வறள் நில வண்ணத்துப்பூச்சி
இக்காலத்திலும் முடக்கப்படும் கைம்பெண்களுக்காக
(மிகு ஊர்ப்புறங்களிலும் சில நகர்ப்புறங்களிலும்)
எதை இழந்திருப்பீர் நீர்
எதைத்தான் இழந்திருப்பீர் நீர்
வித வித வண்ண உடைகளையா
வீரம் கொளும் விருமன்
மீசைகளையா
விரிந்தக் குழுமத்தின்
மகிழ்நிரல் தருணங்களையா
எதையுமே இழக்க மாட்டீர் நீர்
பெண்ணான துணை அவர்கள்
இல்லாது போனால்
வெளி வைய்யம் அறியும் வண்ணம்
எதையுமே இழக்க மாட்டீர் நீர்
அன்றில் இழக்க வைக்கப் பட மாட்டீர்
ஏ அழகு சமூகமே
உன் ஆழ் மனம் ஏன் இத்துணை அழுக்கு
அவள் பிறப்பிலேயே அவள்
கொணர்ந்த
வளை புருவ மண மொட்டுக்களை
பொறாமைக்கொள் அழகின் குழல் புணர்ந்த
கருங்காட்டின் நடு மொட்டுக்களை
சூட மறுத்திடும்
மனமகிழ் நிலமே- நீ
மரணித்துப் போ
சகுனம் உரைத்திடும்
சாக்கடை சமூகமே-நீ
சருகாய் நொறுங்கிப் போ
வண்ணமாய் நிலைப்பதும் -அதை
வாஞ்சையாய் தவிர்ப்பதும்
அவளது உரிமையடா
அவளது
வண்ணத்தை விழுங்கி
எண்ணத்தை மழுக்கி
மூலையில் அமர்த்தும்
மூடர் கூடமே
அவள் அன்பின் காதலுக்காய்
உயிரையும் துறப்பாள்-நீ
அடக்கி நுழைத்தால்
அக்கினியாய் எழுவாள்.
வண்ணம் பறிக்கும் - அவள்தன் விதியை செரிக்கும் பிரம்மாக்களே
நாடி நரம்பின் நாள பிதத்தில்
வக்கிரம் கொணர் வறட்சியின் நாயகர்களே
அவள் அக்கினியில்
மீண்டெழும் ஃபீனிக்ஸ் பறவையாள்
வண்ணம் பூசி அல்ல வண்ணமே வடிவான வண்ணத்துப்பூச்சியாள்
ஆயினும் அவள்
வனமெல்லாம் வறட்சியே
விழி நீளும் மிரட்சியே
ஆம் அவள் வறள் நில வண்ணத்துப்பூச்சி
இனி கானகம் தவிர்த்து வானகம் தொட விழையும் வண்ண லார்வாவாய்,,,,,,
ஓர் நாள் சிறகடிப்பாள் வான்கொள் வண்ணத்துப்பூச்சியாய்.