ஹேஷ்டேக் ஸ்பரிசன்_கவிதைகள்

அப்பா இன்னிக்கு என்ன பிளான்? மகள் வாட்ஸாப்பில் தினமும் தவறாது கேட்பாள்.

ஒரே பதில்தான்...

வெட்டியாத்தான் இருக்கேன்.

இன்று காமாட்சியும் அதைத்தான் கேட்டான். நானும் அதைத்தான் சொன்னேன். அவனும் அப்படித்தான் இருக்கிறான்.

ஹேஷ்டேக் நேசமணி பாத்தியாடா?

இல்ல...

லிங்க் அனுப்பி வைத்தான்.

கொஞ்ச நேரம் மேலும் கீழுமாக பார்த்து கொண்டிருந்த போது இந்த ஹேஷ்டேக் என்றால் என்ன எனும் கேள்வி துளைக்க ஆரம்பித்தது.

அவனிடமே கேட்டேன்.

உனக்கு டீவீட்டர் இருக்கா..

இல்லைடா...

அதுல அக்கவுண்ட் ஓபன் பண்ணிட்டு நீயும் ஹேஷ்டேக் போடலாம்.

போட்டா...?

ஒருநாள் இல்ல மூணு மணி நேரத்தில் நீ ட்ரெண்டிங்...லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்.

அது ஹிட் ஆனாத்தானே?

அப்படி உனக்கு எழுத வராதா...

வரும்...

அப்போ எழுது.

எனக்கு ஹேஷ்டேக் னா என்னன்னே தெரியலடா என்றதும் நான்கு பக்கத்தில் ஒரு ஆர்டிக்கிள் அனுப்பி வைத்தான்.

அடிக்கடி வாட்ஸாப்பில் வந்து கேள்விகள் கேட்டான்.

படிச்சியா? புரிஞ்சுதா? தெரிஞ்சதா?

இல்லை என்றேன்.

பின் அவனே தமிழில் ஓரளவுக்கு விளக்கியதும் கொஞ்சம் புரிந்தது.

டீவீட்டர் அக்கவுண்ட் மேற்கொண்டேன்.

டேய்... காமாட்சி...எல்லாம் ஆச்சுடா...

இப்போ நீ என்ன பண்றேனா, நாடே அதிரணும் அப்படி ஒன்னு தட்டிவிடு.

மிக உற்சாகமாய் மாறினேன். என்ன செய்தால் நம் மக்கள் திணறிபோவார்கள் என்பது குறித்து யோசித்தேன்.

காலையில் வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு சாயந்திரமே டீவிக்கு முன்னால் அமர்ந்து கொள்ளும் வெள்ளந்தி மக்கள். இவர்களை ஈர்க்க என்ன செய்யலாம்? ரூடால்ஃப் டீசலை விடவும் மூலிகை ராமரை வணங்கிய நாடு இது. யோசிக்க வேண்டும்.

தமிழன் யோசிக்க ஆரம்பித்தால் பின் யார் என்ன சொன்னாலும் நிறுத்தவே மாட்டான். நிறுத்தவும் தெரியாது.

நிறுத்த தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கும்போதுதான் வந்து சேர்ந்தான்.

ஆச்சா?

இல்லைடா. ஸ்டார்டிங் ட்ரபிள்.

என்ன ட்ரபிள்?

எந்த சப்ஜெக்ட் ல போட? கால்டுவெல் ஒப்பிலக்கணம் பற்றி போடவா?நம்மாளுங்க மறந்தே போய் இருப்பாங்க.? இல்லாட்டி என் கவிதையில்...

கொஞ்சம் மூடுறியா...*****

அவனுக்கு கோபம்.அதுதான் அந்த ஸ்டார்.

அப்போ நீயே சொல்லு.

ட்ரெண்ட் ஆகணும்னா ட்ரெண்டிங்ல இருக்கிற விஷயத்தை பேசணும்.

ஸோ?

சினிமா விட்டா அரசியல்...

ஒரு படம் வந்தது. அவள். நங்கை. ஒளியாய் ஒயிலாய் மயிலாய் இருந்தாள்.

யாருடா இவ...

ஹிந்தி நடிகை...

சரி...இதை வச்சு என்ன செய்ய?

இவளை வச்சிருக்கேன் னு ஒரே போடா போடு என்றதும் திக்கென்று ஆனது.

ஒருமுறை இவன் சொன்ன ஐடியாவை மனதில் நிலைநிறுத்தி அவளிடம் -கோகிலா என்று வைத்து கொள்ளுங்கள்- ஒரு எளிய முயற்சி செய்தபோது அவள் பொளிரென்று கன்னத்தில் விட்டாள். இதை அவனிடம் சொன்னதும் உடனே சொன்னான்..."நவ் யூ ஆர் ஷேம்லெஸ் பெல்லோ"சந்தானத்துக்குமுன்னாடியே ...கன்னத்தை தடவிக்கொண்டேன்.

அப்படி செய்ய மாட்டேன்.

அப்போ வேற செய்...முடியுமா?

சொல்லு பார்க்கிறேன்.

உங்க ஊர்க்காரர் டெல்லி வரை புகழ் வாய்ந்த பெருந்தலை இல்லையா?

எங்கு வருகிறான் என்று புரிந்தது.

ஆமா... அதுக்கு.?

ஒன்னுமில்ல. ஒரு போட்டோ மார்பிங் ல
ரெடி பண்ணி ஒரு அம்பது கோடி கை மாற்றினேன் னு சொல்லு. எலெக்ஷன் நேரம் உனக்கும் ட்ரெண்டிங் ஆகிடும்.

"அப்போ நீ என்னை முடிக்கணும்னு முடிவே பண்ணிட்டே அப்படித்தானே"

இல்லை.. புரியற மாதிரி சொல்றேன்.

பேர் வாங்கணும்னா நல்லா உழைச்சு கஷ்டப்பட்டு முன்னுக்கு வரணும். அது உனக்கு பிடிக்காது. வராது. ஸோ, நீ இப்போ இந்த ரூட்டுக்குதான் வரணும்.

மாட்டிக்கிட்டா?

கேக்காதே...கண்டிப்பா மாட்டிப்பே.. ஆனா தலை போய்டாது...

தூக்கி உள்ள வச்சிட்டா..?

உள்ளேயே வச்சிட மாட்டாங்க..நீ வெளிய இருந்துதான் என்ன பண்ண போறே?

அதானே...வெட்டியாத்தான்...

அப்போ இது ரெண்டுல ஒண்ணை பண்ணிடு. சினிமா அல்லது அரசியல்.
இதுதான் ரீச் ஆகும்.

அந்த நடிகையை பார்த்தேன். மங்களகரமாய் புடவையில் பொட்டு வைத்து பாந்தமாய் தரையை நோக்கி கொண்டிருந்தாள். இவரை போய்...

முடியாதுடா இந்த பொண்ணை...

கொஞ்சம் இரு...

இப்போது அதே நடிகையின் வேறு இரண்டு போட்டோக்கள்...

இப்போ என்ன சொல்றே?

இந்த ரெண்டும் எங்கடா கிடைச்சது..வேற இருக்கா..?

இப்போ என்ன சொல்றே? மீண்டும் கேட்டான்.

மறுப்பு எதிர்ப்பின்றி சரி என்றேன்.

என்னடா எழுத...நெத்தியடியா இவளை வச்சிருக்கேன் னு எழுதிரவா?

கைய முறிப்பானுங்க...
ரொம்ப ரொம்ப நாகரீகமா எழுதணும்..

அப்பறம்...

அது ஹிட் ஆகிடுச்சுனா நீ யார்னு பாப்பாங்க. டீவிக்காரன் தூக்கிட்டு வந்ததுடுவான். முடிஞ்சது..நீ பாப்புலர்.

அப்போ நான் கவிஞன்...கதாசிரியர் னு பேசுவாங்களா?

நிச்சயம்..இப்போ எத்தனை பேர் படிக்கறாங்க

பதினஞ்சு பேர்.

க்ரேட். இந்த பதினஞ்சாயிரமும் நாளைக்கே பதினஞ்சு கோடி ஆகிரும்.

காமாட்சி...

என்ன?

இதுவரைக்கும் வெறும் பதினஞ்சு பேர் மட்டும்தான் படிக்கறாங்கடா...

இதை சொல்லியதும் அவன் வாட்சப் முனை அறுந்து போனது.

வருவான். வரட்டும்.

புடவையை விட்டுவிட்டு பிகினியை பார்த்து கொண்டிருந்தேன். எத்தனை அழகு. புடவையில் கூட இன்னும் அவள் அழகாகவே இருந்தாள்.

இப்படி ஒரு நடிகை அல்ல எத்தனையோ நடிகைகள் நடிகர்கள் வருவதும் போவதுமாய் இருக்கிறார்கள். யாருக்கு என்ன பாவம் செய்தார்கள்? பணம்.
மனிதனுக்கு மனிதனே தூண்டில் விரித்து சிக்க வைத்து பின் சிக்கி கொள்கிறான்.

மொபைல் போனில் இன்டர்நெட்டை முடக்கியபோது என் வால்பேப்பரில் கூட ஒரு பெண் படம். நடிகையின் படம்.

கொஞ்ச நேரம் அவளையே பார்த்து கொண்டு இருந்தேன்.

கால் வந்தது.

காமாட்சிதான்.

நாளைக்கு ஊருக்கு போறேன். நீ நைட்டே போட்டுடு. வாசகம் ஒவ்வொண்ணும் நங் னு இருக்கணும். அவளே கதறிட்டு ஸ்டேட்மெண்ட் விடணும். விடட்டும். எத்தனை கோடி வாங்கறா...

அது எப்படிடா நாடு முழுக்க போகும் உடனே...

போகும்...உன் மெயில் பாரு...அதுல ஹேக் பத்தி ஒண்ணு அனுப்பி இருக்கேன். அது படி செஞ்சுட்டே வா..ரெண்டே நாள்...நீ உள்ளே போய்டுவே.. அப்பறம் வேர்ல்ட் பேமஸ்...அப்பறம் உன் கவிதை கொடி கட்டி பறக்கும்...

இப்படித்தான் நான் தமிழை வளர்க்க வேண்டுமென்றால் செய்யலாம்.

பண்ணிடறேன் காமாட்சி...

ஓகேடா... அப்பறம் பேசறேன். என்னை மட்டும் சிக்க வச்சிடாதே.குடும்பஸ்தன்.

போனை வைத்து விட்டான். என் போன் விழித்து படம் மலர்ந்து அணைந்தது.

இரவு இரண்டு மணிக்கு ஹேஷ்டேக் போட சொல்லி இருந்தான்.

அதிகாலை ஐந்து மணிக்கே அவனிடம் அழைப்பு வந்தது.

ஹேஷ்டேக் போட்டுட்டியா..?

இல்லைடா

பயம் வந்துருச்சா.?

இல்ல..

அப்பறம்...வேற நடிகை வேணுமா?

இல்ல. மனசாட்சி உறுத்துது.

பாவம் பண்றோம்னா?

இல்ல..துரோகம் பண்றேன் னு

யாருக்கு? பாம்பேக்காரிக்கா...

இல்ல..காஜல் அகர்வாலுக்கு.

போன் அணைந்தது.

எழுதியவர் : ஸ்பரிசன் (31-May-19, 10:45 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 71

மேலே