எள்ளல் உறுமிரவை ஏன்றலைதல் நம்பியொரு பேயடைந்த தாமே பிழை - இரப்பு, தருமதீபிகை 261
நேரிசை வெண்பா
உள்ள தொழில்கள் உலகில் பலஇருப்ப
எள்ளல் உறுமிரவை ஏன்றலைதல் - தள்ளரிய
தாயடைந்து நில்லாமல் தாங்குமென நம்பியொரு
பேயடைந்த தாமே பிழை. 261
- இரப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
இந்நிலவுலகில் பல தொழில்கள் பரந்து விரிந்திருக்கின்றன. அவற்றுள் எதையாவது ஒன்றைக் கைக்கொள்ளாமல் இரப்பை மேற்கொண்டு ஒருவன் அலைதல் உரிய தாயினை அடையாமல் கொடிய பேயினை அடைந்தது போல் பெரிய தவறாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
இப்பாடல் ‘இரப்பது தீது’ என அறிவு கூறுகின்றது. வரவு நலம் உடையனவாய் மருவியுள்ள கருமங்களை ’உள்ள தொழில்’ என்றது. உண்மை அவற்றின் தன்மை உணர வந்தது. தொழில் என்னும் சொல் அவயவங்களால் செய்வது என்னும் பொருளினது.
’தெய்வம் தொழுதல்’ போல் செய்தொழில் உய்தி நலம் உடையது. கருமம் செய்வதே தருமம் செய்த படியாம். அளவிடலரியன ஆதலின் தொழில்கள் பல என வந்தன.
உழுதல், நெய்தல், பண்டமாற்றல், கொண்டு விற்றல், உலோகங்களை உருப்படுத்தல், சித்திரம் வரைதல், சிற்பம் புனைதல் முதலாகக் கண்ணுக்குத் தெரிந்தனவேயன்றி எண்ணிறந்தன எவ்வளவோ இருக்கின்றன. மனிதனுடைய எண்ணங்களின் அளவே தொழில்கள் வண்ணங்களாய் வருகின்றன.
செல்வமும் சீர்மையும் யாண்டும் நல்கி வருதலால் சன சமுதாயத்துக்குத் தொழில்கள் உய்தி புரிந்து உறுதி சுரந்தருள்கின்றன. உலகம் அவற்றால் ஒளி மிகுந்து திகழ்கின்றது. .
இத்தகைய கருமங்களைக் கைக்கொண்டவர் பெருமை பெறுகின்றார்; கொள்ளாதவர் சிறுமை அடைகின்றார்.
எவரும் என்றும் இகழ்ந்து வெறுக்கும் இயல்பினது ஆகலான் எள்ளல் உறுமென இரவின் இளிவு தெரிய வந்தது. ஏன்றல் – பொருந்தல், அலைதல் - இழிந்து திரிதல்
எல்லா நலங்களையும் இனிது உதவி யாண்டும் இதம் புரிந்தருளும் உரிமை கருதி தொழிலைத் தாய் என்றது.
பெற்றதாய் பிள்ளைகளைப் பேணி வருதல் போல் உற்ற தொழில் மக்களை ஆதரித்து வருகின்றது; அந்த.அருமை மாதாவை அகலாமல் உள்ளவர் இருமையும் பெருமையாளராய் இசை மிகுந்து நிற்கின்றார். தொழிலைக் கைவிட்டவர் தாயிழந்த பிள்ளை போல் நோயுழந்து படுகின்றார்; அப்பாடு தெரிந்து பீடு பெறுக.
அல்லலும் இழிவும் அழிவும் தருதலால் இரவு பேய் என நேர்ந்தது. உயிர்க்கேடாவதை உணர்ந்து ஒதுங்குக.
பசித்த பிள்ளை தாயை அடையின் பால் குடித்து மகிழும்; பேயிடம் போனால் செத்துத் தொலையும். இதனை உய்த்துணர்ந்து உண்மை தெரிக. இருவகை நிலைகளையும் கருதி ஆராய்ந்து உறுதி நலனை ஓர்ந்து கொள்ள தொழில் தாய், இரவு பேய் என உருவக நிலையில் உணர்த்தியது.
அருமைத் தாய் போல் உரிமை சுரந்தருளும் கருமநலனை மருவிப் பெருமை அடைக; சிறுமைத் தீமையான இரப்பினில் இறங்கி இழிந்து படாதே.
தன் தொழிலால் வருவது நேரே உலையிலிருந்து வடித்து வந்த இனிய உணவு போல் புனிதம் மிகவுடையது; இரவினால் உறுவது எச்சில் இலையின் மிச்சில் போல்வது. மானம் உடைய மனிதன் அந்த ஈனத்தை எவ்வழியிலும் இச்சிக்கலாகாது என்கிறார் கவிராஜ பண்டிதர்.
நேரிசை வெண்பா
எழிலி பொழியும் இனியநீர் போலத்
தொழில்வழி வந்தது துாய்தாம் - இழிவான
யாசகத்தால் ஆனதுதான் அங்கணநீர் என்னவே
நீசமே யாகும் நினை.
யாசகத்தின் இளிவு இதனால் எளிது தெளியலாம். எழிலி - மேகம். தொழில் தாய், இரவு பேய் என உருவக நிலையில் உணர்த்தியது இடையறாது சுரந்து வரும் தகைமையும், தூய்மையும், இனிமையும் கருதி தொழில் தாய், இரவு பேய் என உருவக நிலையில் உணர்த்தியது.
இரவின் இளிவரவு விழி தெரியக் கழிவுநீர் வந்தது. பிறர் இளித்துக் கழித்து விட்டது இழிக்கப்பட்டது.
யாசகம் மிகவும் ஈனமானது; இடர் நிறைந்தது; நீசமான அந்த நாசத்தை யாதும் நணுகாதே என்பது கருத்து.