உற்ற உனையே உறுதியாய் நம்பிநிற்க - தன்னம்பிக்கை, தருமதீபிகை 271
‘ர்’ ழ்’ ஆசிடையிட்ட எதுகையமைந்த நேரிசை வெண்பா
உற்ற உனையே உறுதியாய் நம்பிநிற்க
மற்றவரை நம்பி மருளற்க; - மற்றவரைச்
சா’ர்’ந்துநீ வாழத் தலைப்பட்டாய் அப்பொழுதே
வீ’ழ்’ந்தாய் இழிவில் விரைந்து. 271
- தன்னம்பிக்கை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உன்னையே உறுதியாக நம்பி உயர்ந்து கொள்ளுக; பிறரை உரிமையாக எண்ணி மருளாதே; அயலாரைச் சார்ந்து வாழலாம் என்று தலைப்படின் அப்பொழுதே நீ இழிநிலையில் வீழ்த்து உழல நேர்ந்தாய் என்கிறார் கவிராஜ பண்டிதர். இது, மேன்மை மேவிவரும் பான்மை கூறுகின்றது.
உலக வாழ்க்கையில் மனிதர் பலவகையாகப் பரந்து விரிந்துள்ளனர். அவரவருடைய வாசனையின்படியே யோசனைகளும் செயல்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஒவ்வொரு மனிதனும் தனக்கு இதத்தை நாடியே தவித்து உழல்கின்றான். தன்னளவில் கருத்தூன்றி நிற்றல்போல் அன்னியத்தில் அவன் அவ்வளவு செவ்வையாய் அவாவி நில்லான்.
இந்த இயல்பு குலையாத நிலையில் சமுதாயம் சுமுகமாய் இயங்க நேர்கின்றது. தன்னலங் கருதியே மனித மரபு தழைத்து வருகின்றது, அத்தழைவில் விழைவு மீறி விளைகின்றது.
எவரினும் யாவினும் தன் உயிரே தனக்கு உரிமை மிகவுடையதாதலால் ’உற்ற’ என வந்தது. ஆண்மையாளனாய், அரிய மனிதனாய் மேவியுள்ள மேன்மையை விளக்கி மெய்ம்மையை உணர்த்தியது, உற்றது உயர்வாய் உய்தி அருள்கின்றது.
தான் முயன்ற பொழுதுதான் தன்னுடைய ஆற்றல்கள் வளர்ந்து வருகின்றன. அயர்ந்து நின்றால் அவை ஒழிந்து போகின்றன. ஒழியவே இழிவு நிலைகள் வெளி எழுகின்றன. அயலை நாட வழி புரிகின்றன.
பிறரை எதிர்பார்ப்பதில் தன் இயல்வலியும் உயர் மதிப்பும் இழிவுறுதலால் அது வழு என நேர்ந்தது. மருளல் – மயங்கல்,
பொருள் வரும் என்று கருதி இருள் வழியில் இறங்காதே; உன் இயல்பான தகுதியில் தெருளுடையனாய்ப் பொருள் செய்து கொள்க. அதுவே எவ் வழியும் உயர்வாய் இனிமை அருளும்.
தானாக முயன்று வாழ்பவன் தன் வேர் நேரே நிலத்தில் ஊன்றிய கனிமரம் போல் தழைத்துச் செழித்து நிலைத்து நிற்கின்றான்; ஒட்டி வாழப் புக்கவன் சட்டி தொட்டிகளில் வைத்து நீர் வார்க்கும் ஒட்டுச் செடிபோல் உள் அழிந்துள்ளான்.
ஆள்வந்து நீர் விட்டால் உண்டு; இல்லையாயின் அது பட்டுப் போகும்; பிறர் உவந்து இதம்புரியும் அளவே வாழ்வு; அன்றேல் வீழ்வாம். தட்டழிக்க அந்த வாழ்வில் மனிதன் பட்டழியலாகாது; அதனை விட்டொழிக்க வேண்டும்.
அயலாரை ஒருவன் சார்ந்து வாழ நேர்ந்தால் அவனது இயல்பான வன்மைகளும் தன்மைகளும் புன்மையடைய நேர்ந்து, நன்மைகளும் பேர்கின்றன.
அன்னியரை நச்சி நின்றால் தன்னுடைய உச்ச நிலை குன்றி உறுதி நலங்களும் குறையுமாதலால் ’அப்பொழுதே வீழ்ந்தாய்!' என அவ்வீழ்ச்சி விளக்கிக் காட்டப்பட்டது. உன் காலால் நட; பிறருடைய ஒக்கல் பிள்ளையாய்ப் பக்கம் சாராதே.
நேரிசை வெண்பா
உன்னுள் இருக்கும் ஒளியை விழிதிறந்து
பன்னிநீ பாராமல் பாழ்பட்டாய் – அன்னியத்தை
நச்சி யுழலும் வரையும் நலனுன்னைக்
கச்சி அழலும் கலுழ்ந்து.