சுட்ட மணம்

விறகூட்டி அடுப்பெடுத்துக் கொஞ்சம் புகை புசித்து,
எங்கள் பசி நீக்க சுடு சோறாக்கி அம்மா கொஞ்சம் நகர,

காத்திருந்த கொக்காய்,
குலாவிக் களித்திருக்கும் அவ்வன்பர்களை கொஞ்சம் பதவினையில் பிரித்து,
அந்த அக்னி தேவனின் சினந்தணியுமட்டும் விசித்திருந்து,
தணிந்த அவன் தணலாய் தளர்ந்த பின்.,

கழனியின் கதிர் காதலி பன் அருவாவின் அழகு அலகில்,
பரம்பரை பந்தத்தின் சிருங்கார அழகிகள் கத்தரி முதலும் தக்காளி பிறகுமென சொருகி,
தணலனோடு உறவாகி உறைந்திருக்க,
பட் பட எனும் சின்ன சிணுங்கலோடு வியாபித்த அவர்களின் அன்பு மணம் காற்றில் கலந்து,
நாசி வழி நா வில் நீராக.,

சிரித்து கடன் கொண்ட பெட்டி கடை சன்ன வத்தல் மட்டும்
சூடு தழுவி சினமாயேறி இருமலாய் புரைத்திட,

அன்பில் குழைந்து கருத்திட்ட அவ்வழகியரோடு
சின்ன உப்போடு சிட்டிகை புளி கொண்டு,
ஒரு கை உள்ளியவள் தாய் சேர்த்து,

பவித்திர பாவத்தோடு பதனமாய் பிசைகையிலே.,,
பாதி விரல்கள் நா வோடு முத்தமிட்டிருக்கும்.

நீரிழைந்த சாதத்தின் துணையனாய் நின்ற இச் சுட்ட கறி எனும் புளி பிணைஞ்சான்
எம் நா வின் அணுக்களுக்கு விமோசனம் தர
அவள் சுவர்க்க நிலையில் நீண்டிட்டாள்.

அலங்கார பெருநகர வீதிகளின் நீள் வெளியில்,
ஏழு நட்சத்திர உணவாலைகளின் எவ்வொறு மஞ்சூரியன்களிலும்
அச் சுவையின் சுவர்க்கத்தை இன்னிலும் சுகித்ததேதில்லை.

மலடடைந்த என் நா மொட்டுக்கள் இன்று வரை மலரவேயில்லை.

எழுதியவர் : யாழுமகிழ் (9-Jun-19, 1:16 am)
சேர்த்தது : yazhu
பார்வை : 1224

மேலே