வெயில் நாய்கள்
இன்றோடு அல்லது
மாலையோ நாளையோ
விரைவில் முடியலாம்
மனங்கனிந்த குளிர்காலம்.
நேற்றே பார்த்தேன்...
தொங்கிய நாக்குடன்
நாயோடு நாயாய் அலைகின்ற
மதியவெயில்_ தீராத தாகத்துடன்.
இந்தப்பனியிலாவது அவளை
கண்டறிந்து விடுவோமென்ற
நம்பிக்கையும் பொய்த்தது.
நான் கடந்த அவள்கள்
இந்தக்குளிரில் எவளும்
எனக்குரியவள் இல்லையென்றாலும்
வந்துபோன வீரதீர கனவுகளில்
அவள்களை காப்பாற்றியதும்
அதற்காக முத்தம் பெற்றதும்
அடுத்த குளிர் வரையிலும்
நினைவில் நிற்கும்...அல்லது
நிறுத்திக்கொள்ளலாம்.
முகூர்த்தம் என்பது
தப்பினாலும் தவறினாலும்
வெயில் விழுங்கியபடி
கவலையற்ற மதியநாய்கள்.