மிச்ச உருவம்

கதை சுருக்கம்:
இந்த கதையை நூறு பேர் படித்தால் நூற்றி இருபது முடிவுகள் கிடைக்கும்.

             _______________________

இனி கதை....

கதை என்று சொல்லிவிட்டால் உடனே ஏதேனும் வர்ணனையில் ஆரம்பிக்கவோ அல்லது ஒரு பாத்திரத்தை சொல்லவோ வேண்டும் அல்லவா? என்னால் அது முடியாது.

நான் எழுதும் எல்லா படைப்புக்கும் எத்தனை கருத்துக்கள் வந்தாலும் அதில் நுட்பமான விமரிசனம் என்று தேறுவது இரண்டு அல்லது மூன்றுதான். அதில் முக்கியமானவர் கவின்.

கவின் வேறொரு தளத்தில் இயங்குபவர்.
விடாப்பிடியாக...ஆர்வமாக...அன்பாக...

என் படைப்புகளில் அவரின் கோணம் வேறு மாதிரியான ஒன்று. கதைக்கு அப்பால் மட்டுமே பார்க்க கூடியவர்.

முன்னுரை முடிவுரை பதமாக பாந்தமாக அவருக்கு முடிய வேண்டும். நானோ இதற்கு முழு எதிரி.

எழுதிட்டேன். படி. இல்லாட்டி போய்க்கினே இரு. ஒண்ணும் நட்டமில்லை. இது நான்.

இம்முறை கவின் தள்ளாட வேண்டும்.

அப்படி ஒரு வாகான கதை எழுத வேண்டும். இல்லை எழுதி விட்டேன்.

இந்த கதைக்கு முடிவு என்ன என்பதை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளவும் முடியும்.

ஒரு அரசியல்வாதி பற்றியது.

கதையாகவே சொல்லி விடுகிறேன்.

சரியாய் சொல்ல வேண்டுமென்றால் அந்த அரசியல்வாதி....பெயரா? வேண்டாமே விட்டு விடுங்கள்... அந்த அரசியல்வாதி தன் பதவி பறிபோகலாம் என்ற பயத்தில் ஒரு கொலை செய்கிறார்.

அவர் மனைவியைத்தான்...இது மணிவண்ணன் மற்றும் பல இயக்குநர்களின் சினிமாவில் வரும் காட்சி என்றாலும் அதுதான் நடந்தது. ஆனால் அது பற்றாமல் போனது நமது அந்த அ.வாதிக்கு.

இம்முறை தன் மகனையும் மகளையும் பலி கொடுக்க முடிவு செய்கிறார். இது பாவம் என்று எனக்கு தோன்றினாலும் செய்யட்டும் என்றும் தோன்றுகிறது.

வேறெப்படி அந்த அ.வாதியை நான் கீழ்மை செய்வது? இன்னும் கூட இப்படி பல காட்சிகளை சேர்க்க வேண்டும்.

மொத்தத்தில் அந்த அ.வாதி என் கற்பனைகள் தாண்டி பல சதிகளை புரிந்து கொண்டே வருகிறார்.

இந்த சதிகள் என்பதுதான் இக்கதையின் முக்கிய பல திருப்பங்களை உருவாக்கும்.

ஏனெனில் வாசகராகிய நீங்களும் அதில் ஒரு பாத்திரமாக வருவீர்கள். ஓட்டு போட்டதுடன் ஆயிற்றா...? உங்கள் தினசரியில் அவர் மறைமுகமாக பற்பல சூதாட்டம் புரிவதை உங்களை தவிர வேறு யாரால் தடுக்க முடியும்?

இப்போது கதைக்குள் உங்களை நீங்கள் ஒரு பாத்திரமாக்கி கொள்ள வேண்டும்.
போலீஸ்? சாட்சி? பொதுமக்கள்? வக்கீல்?
பேட்டியாளர்? என்னவோ உள்ளே வந்து விடுங்கள்.

நீங்கள் உங்கள் வேலையை செய்து கொண்டு இருங்கள். கவின் கூர்ந்து வாசிப்பவர். ஏதேனும் பழைய ஆங்கில படம் அவர் நினைவுக்கு சட்டென்று வந்து விடும். அதையும் இந்த கதையையும் ஒப்பிட்டு அவர் விமரிசனம் செய்தால் நீங்கள் தோற்று உங்கள் பாத்திரத்தில் இருந்து விலக நேரிடும்.

கச்சிதமாக கதையை நகர்த்த வேண்டும்.

புரிந்ததா?

இப்போ அ.வாதி தன் குடும்பத்தை கொலை செய்து மக்களை குழப்பி தன் பதவியை தக்க வைத்து கொள்கிறார்.

போலீஸ் தன் துப்பறிதலை வெகு அற்புதமாக செய்கிறது. காரணம் எதிர்க்கட்சியின் பரவலான கவனிப்பு.

எதிர்கட்சியை இப்படி தூண்டிவிடுவது வேறு யாரும் அல்ல அமெரிக்கா...என்ன
அமெரிக்கா வேண்டாமா அப்போது இலுமிநாட்டிகள் என்று சொல்வோம்.

காதில் எட்டணா ப்ளாஸ்டிக் தோடுடைய செவியர் பிடரியில் செம்பட்டை மயிரை நீவித்திரியும் சிலரை பார்த்து உள்ளேன்.

அவர்கள் இந்த இலுமிநாட்டிகள் கோஷ்டி கானத்தில் மெய்மறந்து எலும்பும் தோலுமாய் சீரழிந்து இருக்கும் வெங்காய கலாச்சார பண்பாடுகளை காப்பாற்ற போவதாய் பிதற்றிக்கொண்டு அலையும் விந்தை காட்சிகள் பலவும் கண்டுள்ளேன்.

இந்த விஸில் குஞ்சுகளுக்கு இந்த இலுமிநாட்டிகள் பற்றி குறை சொன்னால் இனிக்க ஆரம்பித்து விடும்.

வாசகர் அன்பில் திளைப்பதை விட்டு கொடுக்கவே கூடாது. அதுவும் முக்கியம்.

கதையும் நன்கு நகரும்.

அ.வாதியின் எதிர் சாட்சிகள் கோர்ட்டில் ஆவலுடன் சாட்சி மேல் சாட்சி அளித்தனர். ஆளுங்கட்சி திணறிக்கொண்டே வர நாட்களை கடந்து இறுதியில் சாட்சியும் சம்பவங்களும் அ.வாதியை திறம்பட சிக்க வைக்க கைதாகிறார்.

அவருக்கு வெளியில் வரவும் தெரியும்.

கதையை முடித்து கொண்டேன்.

இதில் பல விஷயங்கள் விட்டு விட்டு தொடர்பு அறுந்து குழப்புகிறதா?
எழுதும்போது சரி செய்து கொள்ள  வேண்டும். கம்ப்யூட்டரில் அமர்ந்தால் போதும்...எழுத எழுத சம்பவமும் சாட்சிகளும் திரண்டு வந்துவிடும்.

இப்பொழுதே எழுத ஆரம்பிக்க வேண்டும்.
சூட்டுடன் எழுதியே விட வேண்டும்.

கம்ப்யூட்டரில் ஸ்விட்ச் போடும்போதே
அட என்ன இப்படி உடல் பதறுகிறது? பாருங்கள்...என் கைகள் உழன்று தடுமாறுகிறது..கால் குலைகிறது. நண்பரே என்னை பிடியுங்கள். பிடித்து கொள்ளுங்கள்.

*******************************

டாக்டர்...டாக்டர் அந்த பேஷண்ட்....சீக்கிரம் வாங்க...

(என் காதில் அந்த பெண்ணின் குரல் நன்றாக கேட்கிறது)

சார்...சார்...

யாரோ என் தோள் பற்றி குலுக்கி ஆட்டும் உணர்வு.

சார்...கவின்...முழிச்சு பாருங்க

என்னால் குரல்கள் கேட்க முடிகிறதே தவிர விழிக்க முடியவில்லை.

நான்...நான்...ஸ்பரிசன்...

ஸ்பரிசனா? ஹலோ சார் கவின்...ஓகே
விழித்து கொள்ளுங்கள் ஸ்பரிசன்...

இப்போது விழிப்பு வந்தது.

சிறிய சுத்தமான அழகான அறை.
ஒரு வரையறை செய்யப்பட்ட மருத்துவமனையின் லட்சணம் பொருந்தி இருந்தது.

சுற்றிலும் நால்வர் இருந்தனர்.

டாக்டர் போல் இருந்தவர் கைகளை பற்றி பேச ஆரம்பித்தார்.

கவின்...

இல்லை.. நான் ஸ்பரிசன்...ஒரு கதையை எழுத தீர்மானித்து இருந்தேன்.

சொல்லுங்கள் என்பது போல் பார்த்தார்.

அந்த கதை ஒரு அரசியல்வாதி பற்றியது. இப்போது நான் என் கம்ப்யூட்டரில் டைப் செய்ய வேண்டும்.

எழுதலாம்...புன்னகைத்தார்.

நல்லது ஸ்பரிசன். கொஞ்சம் அமைதியாக கேளுங்கள். உங்கள் பெயர் கவின். நீங்கள் சாலையில் நடக்கும்போது மயக்கம் கொண்டு விழுந்து விட்டிர்கள்.
உங்களை உங்கள் குடும்பத்தினர் இங்கு சேர்க்கும்போது அது ஷார்ட் டைம் மெமரி லாஸ் ஆக இருந்தது. நீங்கள் ஏதேனும் கடைசியில் படித்த பார்த்த ஒரு விஷயம் மெல்ல இப்போது நினைவுக்கு வரலாம்.
அதுதான் ஸ்பரிசன் எனும் பாத்திரம்.
இப்போது ஓய்வு கொள்ளுங்கள்.
முழுவதும் ஓரிரு நாட்களில் குணம் ஆகி விடும்.

நர்ஸ் அவரை பார்த்தபோது செடஷன் போடப்பட்டு தூங்க வைக்கப்படுவேன் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

கதை மனதில் அப்படியே இருந்தது.

அ.வாதி. கொலை.தோடு. அமெரிக்கா.

ஊசியை துளைக்க அனுமதித்தேன். வலிக்கவேயில்லை. வெண்மேகம் கலைவது போல் அவர்கள் கலைந்தனர். சுஜாதா இப்போது இருந்திருந்தால் இந்த நர்ஸின் முன் வடிவை தீற்றாமல் போய் இருக்க மாட்டார்.

போய் விட்டார்கள். ஊசி ஏன் வலிக்கவேயில்லை? அடி பட்டு மரத்து போய் இருக்கலாம். அவள் குனிந்த போது தெரிந்ததை கதையில் ஏதேனும் ஒரு இடத்திலாவது சேர்த்து விட வேண்டும்.

ஃபேன் இல்லை. ஏசி அறை. சுமாரான குளிர். நான் கவினா? ஸ்பரிசன் இல்லையா...? என் முகம் எனக்கு நினைவில் இருக்கிறது. என் முன்னே ஆள் உயர கண்ணாடி இருக்கிறது. நிற்க வேண்டாம் கட்டிலில் உட்கார்ந்து பார்த்தாலே போதும் தெரிந்து விடும்.

நான் ஸ்பரிசனாக இருக்கவே ஆசை. இந்த கதையை கவின் எழுத அனுமதிக்க மாட்டேன்.

கால்களால் எந்த உதவியும் இல்லை என்பது போல் மரத்து கிடந்தது. ஏன் அசைக்க முடியவில்லை? மருந்து வேலை செய்கிறதா? முகம் பார்த்தால் மட்டும் கூட போதுமே.

ஹாஸ்பிடலில் துளி ஓசை கூடவா இருக்காது. இங்கு இல்லை. ஐசியு வில் இருக்கலாம்.

அளவற்ற பேரமைதி.

யாரோ என் வேண்டுதல் புரிந்து முதுகை பற்றி உயர்த்தி கண்ணாடியை நோக்கி தூக்கி விடுவதை உணர்ந்தேன்.

யாரும் இல்லை. இப்போது கண்ணாடி சற்று முன் வருவது போல் அந்த அறையின் சுவர் நெருங்கி வருவது போல் தெரிந்தது.


இப்படியும் நடக்குமா?


எப்படியோ இன்னும் சற்று உயர்ந்தால் தெரிந்துவிடும். நான் யார் என்பது...

உயர்த்தப்பட்டு உயர்ந்தேன்.

கண்ணாடியில் எந்த உருவமும் தெரியவில்லை.

அளவற்ற பேரமைதி.

எழுதியவர் : ஸ்பரிசன் (9-Jun-19, 7:55 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : mitcha uruvam
பார்வை : 168

மேலே