என்றும் தருவதே நன்று அதையே சார் - ஆண்மை, தருமதீபிகை 287

நேரிசை வெண்பா

மானம் அழியவரின் மன்னுயிரை முன்,ஈக;
தானம் எனினறிந்து தந்திடுக; - வானம்
வருவதே யானாலும் வாங்கற்க; என்றும்
தருவதே நன்(று)அதையே சார். 287

- ஆண்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மானம் அழிய நேர்ந்தால் உயிரை ஒழிய விடுக; யாரேனும் தானமென்று வந்தால் ஆனதை அறிந்து தருக; சிறந்த துறக்கமே ஆயினும் பிறரிடம் இரந்து வாங்காதே; என்றும் யார்க்கும் தருவதே நல்லது; அதனையே உரிமையாக உவந்து வாழ்க என்கிறார் கவிராஜ பண்டிதர் இப்பாடல், உத்தம நிலைமைகளை உணர்த்துகின்றது.

மானம் என்பது உயிரின் இயல்பான உயர்வு. மணிக்கு ஒளி, மலர்க்கு மணம், தேனுக்கு இனிமை, பாலுக்குச் சுவை, வாளுக்குக் கூர்மை போல் மனிதனுக்கு மானம் சீர்மையான நீர்மையாய்த் தேசு மிகுந்துள்ளது

மனநிலை மழுங்காது நிற்றல் மானம் ஆகின்றது; அதனைச் சிறந்த நிலையில் உடையவன் உயர்ந்த மானிடனாய் ஒளி வீசி நிற்கின்றான். மனிதனுக்குத் தனி மகிமையாய் இனிது அமைந்துள்ளமையால் அது உயிரினும் அருமையாயது.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

கூனொடு வெதிரே பங்கு
..குருடுபேர் ஊமை ஆனோர்
ஊனம(து) அடைந்த புன்மை
..யாக்கையோ(டு) ஒழியும் அம்மா!
மானம(து) அழிந்து தொல்லை
..வலியிழந்(து) உலகில் வைகும்
ஏனையர் வசையின் மாற்றம்
..எழுமையும் அகல்வ துண்டோ? - கந்த புராணம்

குருடு, ஊமை, செவிடு முதலிய வெளி ஊனங்கள் உடலோடு ஒழியும்; மானம் கெடின் அது உயிர் ஊனமாய் என்றும் அழியாத பழியாம் என இது அறிவுறுத்துகிறது. வெதிர் - செவிடு.

மானம் அழிந்து வாழ்தல் ஈனமாதலால் அது 'அழிய வரின் உயிர் ஈக' என வந்தது. இன்னுயிரினும் இனியதாக அதனைப் பேணுக எனப்பட்டது.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். 969 மானம்

உயிரினும் மதிக்கற்பால(து) உள்ளப்பேர் உறையின் உள்ள(து);
அயிறரும் பனிக்கும் திண்மை மானம். – சூளாமணி

மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே – இனியவை நாற்பது

"ஊனமே யான ஊனிடை யிருக்கும் உயிரினைத் துறந்துமொண் பூணாம்
மானமே புரப்ப தவனிமேல் எவர்க்கும் வரிசையும் தோற்றமும் மரபும். – பாரதம்

மானம் எவ்வளவு அருமைப் பொருள் என்பது இவற்றால் அறியலாகும். உயிர்க்கு உயிராய் அது ஒளி புரிகின்றது.

தானம் அறிந்து தந்திடுக என்றது நல்ல பாத்திரமாகப் பார்த்துத் தருதல் உத்தமமாகலான் அதனை உய்த்துணர வந்தது.

‘வானம் வருவதே ஆனாலும் வாங்கற்க’ என்றது விண்ணுலக போகமேயாயினும் தனது புண்ணியப் பயனால் பெற வேண்டுமேயன்றிப் பிறரிடம் இரவலாகக் கொள்ளலாகாது. எதையும் எவரிடமும் வாங்காதே; என்றும் எவர்க்கும் நீ தருவதே நல்லது.

தானம் என்பது தருமம் கருதிப் பொருள் பூமிகளைத் தாரை வார்த்துத் தருவது, ஈகையாவது யாதொரு பலனையும் எதிர் பாராமல் எவ்வுயிர்க்கும் இரங்கி யருள்வது எனவும், மானம் பேணுக, தானம் தருக; இரவு ஒழிக, என்றும் ஈக எனவும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jun-19, 7:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 456

மேலே