மேலோர்கள் பேணுவரோ பொய்யுடம்பை வீணே புனைந்து - மேன்மை, தருமதீபிகை 297

நேரிசை வெண்பா

கண்ட ஒருபுறவைக் காக்கச் சிபிமன்னன்
கொண்ட உடம்பும் கொடுத்தானே - மண்டுபுகழ்
மெய்யுடம்பைப் பேணநின்ற மேலோர்கள் பேணுவரோ
பொய்யுடம்பை வீணே புனைந்து. 297

- மேன்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தான் பார்த்த புறாவுக்காக இரங்கிச் சிபி மன்னன் தனது மெய்யைக் கொய்து கொடுத்தான்; கீர்த்தியைப் பேணுகின்ற மேன்மக்கள் உடல் பொருள் ஆவி எதையும் பொருள் செய்யாது விடுவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

புகழின் பொருட்டுத் தம் உயிரையும் மேன்மக்கள் வீசத் துணிவர் என முன்னம் குறித்ததற்கு எடுத்துக் காட்டாகச் சரித்திர புருடன் ஒருவனை உரிமையுடன் இது உணர்த்துகின்றது.

சிபி என்பவன் சூரிய குலத்து மன்னன். நீதியும் தருமமும் நிறைந்த நெஞ்சினன். அருத்திறலாளன்; பெருந்தகைமை மிகுந்தவன். ஒரு நாள் மாலையில் அரண்மனை அருகே பூஞ்சோலையில் தனியே உலாவி வந்தான். அப்பொழுது ஒரு புறா பதறி வந்து இவன் எதிரே புகுந்தது. அடுத்து ஒரு வேடன் கடுத்து வந்தான். அவன் வேட்டையில் தப்பிவந்த அப்பறவையின் பதைப்பைக் கண்டு இம் மன்னன் இரங்கி அவ்வேடனை விலக்கினான். ’என் குறியில் தவறிய பறவையைக் கொடுத்தருளுங்கள்' என அவன் மறுகி வேண்டினான். மன்னன் மறுத்தான். 'நான் தின்னவுரியதை இன்னவாறு தடுப்பது நீதியா?' என்று.அவன் நொந்து தவித்தான். உனக்கு எவ்வளவு பொருள் வேண்டுமாயினும் தருகின்றேன்; வேண்டியதைக் கேள் என இவ் வேந்தன் கூறினான்.

வேடன்:- நான் பசி தீர உண்ண இப்பறவையே வேண்டும்; வேறு யாதொன்றும் எனக்கு வேண்டியதில்லை.

சிபி: உனக்கு நல்ல உணவுகள் தருகின்றேன்.

வேடன்: ஊன் உணவே நான் உண்பது; வான் அமுதமாயினும் வேண்டேன்; இதனையே என் கையில் கொடுத்து விடுங்கள்; தடுத்தல் தகாது.

சிபி:
நேரிசை வெண்பா

தன்உயிரைப் போலவே தானறிந்து மற்றுள்ள
மன்உயிரைப் பேணார் மனிதரோ? - புன்னுனிமேல்
நீரென்னத் தோன்றி நிலையாத நின்உடம்பின்
சீருன்னிப் பார்சிறிது தேர்ந்து.

வேடன்:- அந்தப் பார்வை எல்லாம் உங்கள் போன்ற பெரியவர்களுக்கே, என் போல்பவர்க்கு அது இயலாது.

சிபி: நான் சொல்லியபடியே செய்; இல்லையேல் நீ அல்லல் அடைவாய்.

வேடன்:- ஒரு பறவைக்கு இரங்கி அருள்கின்ற நீங்கள் மனிதனுக்கு இ்ரங்காமல் இப்படித் தொல்லைப்படுத்துவது நல்லதா?

சிபி:. உருவில் மனிதனாயினும் அருள் இலனாயின் அவன் கொடிய மிருகமே.

வேடன்:- புலால் புசிப்பது எங்கள் குல தருமம்; அதனை விலக்குவது பாவம். என் இரையைக் கொடுத்து விடுங்கள்.

சிபி:
நேரிசை வெண்பா

என்உயிரை ஈஎனினும் ஈந்திடுவேன்; இப்பறவை
தன்உயிரை ஈந்து தவியேன்காண் - உன்னுயிரை
ஓம்பஈ தன்றிவே(று) உண்டிவொன்றும் கண்டிலையோ
தேம்பல் எவனோ தெளி.

வேடன்: எப்படியாவது எனக்குப் புலால் உணவு தந்து விடுங்கள்.

புலையையே விரும்பி அக் கொலை வேடன் கூறவே அரசன் தன் தொடையிலிருந்து தசையை அறுத்து எடுத்து அப்புறாவின் எடைக்குத் துலையில் இட்டு நிறுத்துக் கொடுத்தான்.

ஒரு சிறிய பறவைக்காகத் தனது அரிய உயிரை உதவிய இப்பெரியவனை வானும் வையமும் என்றும் புகழ்ந்து வருகின்றன.

பிறந்தநாள் தொடங்கி யாரும் துலைபுக்க பெரியோன் பெற்றி,
மறந்த நாள் உண்டோ: - இராமாயணம்

என இராமனும் தான் பிறந்த குலத்தின் பெருமையை வியந்து இங்ஙனம் மகிழ்ந்திருக்கிறான்.
துலை - துலாக்கோல், தராசு.

இந்த அருள் வள்ளலுடைய மனநிலையை வியந்து புகழ்ந்து மேலோர் பலரும் உவந்து கூறியிருக்கின்றனர்.

'தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன். 43 புறநானூறு

உடல்கலக்கற அரிந்து தசைஇட்டும் ஒருவன்
ஒருதுலைப் புறவொ(டு) ஒக்க நிறைபுக்க புகழும். – கலிங்கத்துப்பரணி

காக்கும் சிறுபுறவுக் காகக் களிகூர்ந்து
தூக்கும் துலைபுக்க தூயோன். - விக்கிரம சோழன் உலா

யாவரும் இவ்வாறு வாயாரப் புகழ்ந்து போற்றச் சிபி உயர்ந்து திகழ்கின்றான். அரிய செயலால் பெரியனாயினான்.

என்றும் நிலையாக நின்று நிலவும் நிலைமை கருதி புகழை ’மெய் உடம்பு’ என்றது. புகழாகிய மெய்யுடம்பைப் பேணும் மேன்மையாளர் பொய்யுடம்பை ஒரு பொருளாகப் பேணார் என்பதை வையம் அறிய இவன் விளக்கி யருளினான்.

மனத் திண்மையும் வண்மையும் மனிதனை மகிமைப் படுத்தி வருகின்றன. அத்தன்மைகளை உடையராய் மக்கள் நன்மையுற வேண்டும். புன்மையை ஒழித்து யாண்டும் நன்மையை வளர்த்து வருக. அரிய செயலைச் செய்து பெரிய புகழைப் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jun-19, 7:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 85

மேலே