அருளுடைமை - அரிய உயிரினங்களிடத்தெல்லாம் அன்பு செய்யுங்கள் - கலி விருத்தம் - வளையாபதி 19

கலி விருத்தம்
மா கூவிளம் கூவிளம் கூவிளம்

ஆற்று மின்,அருள் ஆருயிர் மாட்டெல்லாம்;
தூற்று மின்,அறம், தோம்நனி துன்னன்மின்;
மாற்று மின்கழி மாயமும் மானமும்;
போற்று மின்பொரு ளாஇவை கொண்டுநீர். 19 வளையாபதி

பொருளுரை:

நன்மக்களே! நீங்கள் அரிய உயிரினங்களிடத்தெல்லாம் அன்பு செய்யுங்கள்; நல்லறங்களை நாள்தோறும் மாந்தர்க்குக் கூறுங்கள்; தீவினைகளைச் சிறிதளவும் உறுதியாகச் செய்யாது ஒழியுங்கள்; வஞ்சகத்தையும், பண்பில்லாத செயல்களையும் விலக்குங்கள்; இவ்வறங்களை உறுதிப் பொருளாகக் கருதிப் பேணி வாழுங்கள் எனப்படுகிறது.

விளக்கம்:

எவ்வுயிர்க்கும் அருள் செய்க! அறங்களையே யாவர்க்கும் அறிவுறுத்துக! தீவினையை அஞ்சுக! வஞ்சகத்தையும் மாண்பிறந்த செயல்களையும் விலக்குக. இவ்வறங்களையே பொருளாகப் பேணி நல் வாழ்வு வாழ்வீராக! என்று அறிவுறுத்தப்படுகிறது.

அருள் – குறிப்பாகத் தனித்துச் சொல்லாமல், இயல்பாக எல்லா உயிர்களின் மீதும் செல்வதாகிய இரக்கம்.

மாயம் – வஞ்சம், பொய்யுமாம். கழிமானம் என மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்.

கழி மானம் – மாண்பில்லாத மானம், அஃதாவது அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தந்தை தாயரென்றிவரை வணங்காமை.

தூற்றுமின் என்றது, யாண்டும் யாவர்க்கும் அறிவுறுத்துமின் என்று பொருள்படும்.

தோம்-குற்றம்; தீவினை.

தீவினையை நயந்து செய்யற்க வென்பார் நனிதுன்னன்மின் தீவினை தீயவே பயத்தலான் அதனைக் துன்னாமையே உயிர்க்குறுதியாயிற்று என்றார்.

அருளுடைமையின் மாண்புகளைக் கீழேயுள்ள இரண்டு திருக்குறள்களில் திருவள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். குறள் 243 அருளுடைமை

அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை எனவும்,

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி. குறள் 245 அருளுடைமை

அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகத்தில் வாழும் அருளாளர்களே சான்று எனவும் கூறுகிறார்.

தீவினையை நயந்து செய்யற்க என்பதனை கீழேயுள்ள இரண்டு திருக்குறள்களில் திருவள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். – குறள் 202 தீவினையச்சம்

நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும் என்றும்,

தீயவை செய்தார் கெடுதல், நிழல்தன்னை
வீயா(து) அடியுறைந் தற்று. குறள் 208 தீவினையச்சம்

பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போல என்றும் கூறுகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jun-19, 8:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

மேலே