உன்னுயிர்க்குட் சீலம் உறாமல் மன்னுயிர்க்குச் சொல்லநீ வாய்திறத்தல் - சீலம், தருமதீபிகை 316

நேரிசை வெண்பா

உன்னுயிர்க்குட் சீலம் உறாமல் உலகிலுள
மன்னுயிர்க்குச் சொல்லநீ வாய்திறத்தல் - இன்னுயிர்ப்பின்
நாதமிலா யாழை நலிந்திழுத்தல் போல்நகைக்கே
ஏதுவாய் ஏதம் எழும். 316

- சீலம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உனது உயிர்க்குள் ஒழுக்கம் இல்லாமல் உலகிலுள்ள உயிர்களுக்கு நீ உபதேசம் செய்யப் புகுதல் நாதம் இல்லாத வீணையை நலிந்து இழுப்பது போல் நகைப்புக்கே இடமாய் நவை உண்டாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

சீலம் உடையவன் சொல்லையே ஞாலம் நயந்து கேட்கும்; அவனே உறுதி நலங்களைச் சொல்ல உரியவன்; அல்லாதவன் பேச விழைவது பிழையாம் என இப்பாடல் உணர்த்துகின்றது.

ஒழுக்கத்தால் உள்ளம் திருந்தியுள்ளவன் சொல்லே உலகத்தைத் திருத்த வல்லதாதலால் அது யாண்டும் சீவ களையுடன் சிறந்து திகழ்கின்றது.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். 415 கேள்வி

உயர்ந்த கல்வியுளர் எனினும் ஒழுக்கம் இல்லார் வாய்ச்சொல் கேட்கப்படாது; எவ்வகையாயினும் ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்லே யாண்டும் கேட்கத்தக்கது; அதுவே உணர்வைத் தட்டி எழுப்பி உயிரை உயர்த்தியருளும் என வள்ளுவர் இதில் குறித்திருக்கும் நுட்பம் கூர்ந்து சிந்திக்கத் தக்கது. சொல்வன்மைக்குக் கல்வி அவசியமாயினும், அதனைச் சொல்லத்தக்க தகுதி சீலர்க்கே தனி உரிமையாகின்றது.

தான் சீலம் இல்லாமல் இருந்து கொண்டு, பிறர்க்குப் போதனை செய்யத் துணிவது பேதைமையாம். அதனைத் தெளிவாக விளக்க உவமை வந்தது.

நரம்பு இல்லாத வீணையை நாதம்இலா யாழ் என்றது. நரம்பு யாழுடன் இசைந்திருந்த பொழுதுதான் இனிய இசை எழும்; இசையாவழி யாதொரு கீதமும் எழாது. நரம்பு ஒழுக்கத்திற்கும், வீணை கல்விக்கும் ஒப்பாம்.

நரம்போடு பிணைந்து தோய்ந்து நன்றாக இணைந்துள்ள வீணையே இனிய கானம் உடையதாய் எவர்க்கும் இன்பம் தரும்; அதுபோல் ஒழுக்கத்தோடு கலந்த கல்வியே சிறந்த சொல்வன்மையுடையதாய் யாண்டும் உவகை சுரந்து அருளும். சீவநாதம் உள்ளமையால் அச்சொல்லைக் கேட்டவர் யாவரும் ஆனந்தம் அடைகின்றனர்.

சீலம் இல்லாதவன் பேசுகின்ற பேச்சு நரம்பு இல்லாத வீணையை வலிந்து இழுப்பதுபோல் சிரிப்புக்கே இடமாய்ப் பழிக்கப்படுகின்றது.

’நகைக்கே ஏதுவாய் ஏதம் எழும்’ என்றது அவ்வகைக்கே போகாதே என்று போதித்தபடியாம். அச்சொல்லால் நல்ல பயன் இல்லாமை கருதி உன் உள்ளம் திருந்தாமல் எதையும் சொல்ல விரும்பாதே என்றது

தாம் குற்றமுடையவராய் இருந்து கொண்டு மற்றவரைத் திருத்தப் புகுதல் முற்றும் பிழையாய் முடிந்து விடுகின்றது.

நேரிசை வெண்பா

தங்குற்றம் நீக்கலர் ஆகிப் பிறர்குற்றம்
எங்கேனும் தீர்த்தற்(கு) இடைப்புகுதல் - எங்கும்
வியனுலகில் வெள்ளாடு தன்வளி தீரா(து)
அயல்வளி தீர்த்து விடல். 124 பழமொழி நானூறு

தமது பிழையை முதலில் நீக்காமல் பிறருடைய பிழையை நீக்கும் பொருட்டு வெளியே தரும உபதேசம் செய்யப் போதல் வாதநோயுடைய வெள்ளாடு அயலார் வாதத்தைத் தீர்க்கப் போனது போலாம் என இப்பாடலில் பரிகாசம் செய்திருக்கிறது. வளி - காற்று. அது இங்கு வாத நோயைக் குறித்தது. பிறரது வாதநோயை அயல் வளி என்றது.

வெள்ளாட்டுப் பால் வாத நோயைப் போக்க வல்லது.

'வெள்ளாட்டுப் பாலுக்கு மேவியநற் றீபனமாம்
தள்ளாடு வாதபித்தம் சாந்தமாம். 96 அற்புதசிந்தாமணி, என்றதனால் அதன் தன்மையும் நன்மையும் அறியலாகும்.

நோய்க்கு மருந்தாயுள்ள இப்பால் நல்ல ஆட்டிலிருந்து கறந்துவரின் நலமாம்; வாத நோயுடைய வெள்ளாட்டிலிருந்து வரின் அந்த நோயை மேலும் அதிகப்படுத்தி அல்லலையே விளைத்து அழிவை உண்டாக்கிவிடும்.

மனப் புன்மையை நீக்கி நன்மை செய்யவுரிய நீதி உபதேசம் நல்ல ஒழுக்கமுடையவர் வாயிலிருந்து வரின் உயிர்கட்கு உயர்ந்த பயனாம்; அல்லாதார் சொல்லின் அவலமே விளையும்.

தாம் கற்றபடி ஒழுக்க நெறியில் நில்லாதார் நல்லதைச் சொல்லினும் அது பொல்லாததாய் முடிகின்றது.

நேரிசை வெண்பா

கற்றுப் பிறர்க்குரைத்துத் தாம்நில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக்(கு) உண்டோர் வலியுடைமை - சொற்றநீர்
நில்லாத தென்னென்று நாணுறைப்ப நேர்ந்தொருவன்
சொல்லாமே சூழ்ந்து சொலல். 21 நீதிநெறி விளக்கம்

நெறியில்லார் சொல்லைப் பிறர் மதித்துக் கேளார்; எதிர்த்து இகழுவர் என இதில் குறித்திருக்கும் அழகைக் கூர்ந்து பார்க்க வேண்டும்.

ஓதி உணர்ந்தபடி தாமடங்கி நடவாதார் நீதி நலங்களைச் சொல்லச் செல்வது பேதைமையோடு பிழையாய் முடிதலால் அது ஏதம் என வந்தது. ஏதம் - குற்றம், கேடு.

ஒதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல். 834 பேதைமை

பல நூல்களையும் கற்று அதிமேதையாய் இருந்தாலும் ஒழுக்கம் இல்லையாயின் அவன் பெரும் பேதையே என இதில் இழிக்கப்பட்டிருக்கிறது.

கட்டளைக் கலித்துறை

விரிந்தநல் வேத புராணங்கள் ஆகமம் மிக்ககலை
தெரிந்து படித்துப் பொருள்செப்பித் தாம்நிலை சேர்ந்துநில்லா(து)
இருந்தசண் டாளரின் ஏற்றம் கழுதை எழிற்குங்குமம்
பரிந்து சுமந்துபின் வஞ்சம்பண் ணாத பயன்எழிலே. - அறிவானந்த சித்தியார்

கல்வி கற்றும் ஒழுக்கம் இல்லாதவர் குங்குமம் சுமந்த கழுதையினும் இழிதகையர் என இதில் பழித்திருக்கும் பழி நிலையை விழியூன்றி நோக்கி ஒழுக்க நலனை ஓர்ந்து கொள்க.

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

வேதமா கமங்கள் மிருதிநூல் புராணம்
மிக்கயெக் கலைகளும் பயின்று
போதமே சொல்லிப் போதமங்(கு) உணராப்
புலையரும் கழுதையும் நிகராம்:
கோதிலா ஆரம் குங்குமம் பளிதம்
குலவிய புழுகடை பாணி
ஏதமே சுமந்த கழுதையீங்(கு) இவரின்
ஏற்றமாம் வஞ்சமின் மையினால். - சிவஞானசாரம்

தாம் கற்றபடி ஒழுகாதவர் கழுதையினும் கடையர் என்றது என்னை? எனின், தான் சுமந்து வந்த குங்குமத்தைப் பிறர் உவந்து கொள்ளக் கொடுத்தோம் என்னும் செருக்கும் வஞ்சமும் அதனிடம் இல்லை; கல்விச் செருக்கும், பலரும் வியந்து புகழ நாம பிரசங்கம் செய்கின்றோம் என்ற வீண் கருவமும், உயர்வு தாழ்வு கூறும் சிறுமையும் புன்மையும் நெஞ்சிடங் கொண்டுள்ளமையால் இக்குறைபாடுகள் யாதும் இல்லாத அக்கழுதையினும் கோதுகள் நிறைந்த தீதுடைய இவர் கடையர் என நேர்ந்தார்.

சிறந்த கல்வியும் சீலம் இல்வழி இவ்வாறு இழிந்துபடுகின்றது; இங்ஙனம்_பழிபட்டு ஒழியாமல் எவ்வழியும் நல்ல ஒழுக்கத்தை நயந்து பேணி உயர்ந்த புகழுடன் உய்தி பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jul-19, 3:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 102

மேலே