சிறு தெய்வங்கள் அகல் கட்டுரை

கிராமங்களில் காணலாம் இவர்களை... பெரும்பாலும் கல், பிடித்து வைத்த மண், மரங்களே இவர்களாய் நம் கண் முன்னே. சில இடங்களில் உருவத்துடனும் பல இடங்களில் உருவமற்றும் இருப்பார்கள். கிராமத்தை ஒட்டிய பெரிய கோவில்களிலும் இவர்களைக் காணலாம்... அதிகமாய் யாராலும் கும்பிடப்படாமல் தனித்து இருப்பார்கள்.



இந்தத் தெய்வங்களுக்கு பூசாரி என்றெல்லாம் ஒருவர் இருப்பதில்லை... ஊருக்குள் யாரேனும் ஒருவர் அந்தப் பணியைச் செய்வார். முனீஸ்வரன், அம்மன், கருப்பர் போன்றவர்களுக்கு வேளார் என்று சொல்லக் கூடியவர்கள் முக்கிய தினங்களில் பூஜை செய்வார்கள். மற்ற நாட்களில் எல்லாம் உள்ளூர் ஆட்கள்தான்.



பெரிய கோவில்களில் தெய்வத்தைக்காண காசு கொடுத்துக் காத்திருந்தாலும் மக்கள் கூட்டத்தின் அளவைப் பொறுத்துத்தான் தரிசனத்தின் நிமிடங்கள் அமையும். இங்கு அப்படியில்லை... நம் எதிரே சிறு தெய்வம் இருக்கும்... நாம் அதனருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம்.



பெரும்பாலான கிராமங்களில் அம்மன் கோவில்கள் முதலில் மண் மேடையில்தான் உருவாகியிருக்கின்றன. ஒரு மண் மேடையின் மீது சின்னதாய் மண் பீடம் என்பதே ஆதி உருவாய்... அதன் பின்னான வருடங்களில் ஊர் மக்களின் முன்னெடுப்பில் ஒரு சிறிய ஒட்டுக் கொட்டகைக்குள் அம்மன் பீடமாய்.. அதற்குப் பெயர் அம்மாமடை (அம்மன் மேடை) என்பதாய்...



எங்கள் ஊரில் கூட அம்மன் கோவில் அப்படித்தான் உருவாகியிருக்கிறது. எங்க அண்ணன் வயதொத்தவர்கள் சிறிய மேடை அமைத்து சாமி கும்பிட்டிருக்கிறார்கள். அதுவே பல வருடங்களுக்குப் பிறகு ஒரு ஓட்டுக் கொட்டகையாய்... சுற்றிலும் கம்பி அடைத்து.. அதற்குள் அம்மன் பீடம் வைத்து... முன்பக்கம் சிறிய கொட்டையும் கட்டப்பட்டிருக்கிறது.



கோவிலுக்கு அருகே வீடு என்பதால் கோவில் சாவி எங்க வீட்டில்தான் இருக்கும். செவ்வாய், வெள்ளி எங்க அண்ணன் சாம்பிராணி போடுவார்,.. பின்னர் அக்கா... அதன் பின் நான்... தம்பி எனத் தொடர்ந்தது. இப்போது நாங்கள் யாரும் அங்கில்லை என்பதால் வேறொருவர் செவ்வாய், வெள்ளி சாம்பிராணி போடுகிறார். சாம்பிராணி போடுவதில் பால் வேறுபாடெல்லாம் பார்க்கவில்லை அம்மன்... பொங்கல் என்றால் முதல்நாள் இரவு வயது வந்த பெண்கள்தான் உள்ளே ஏறிக் கோலம் போடுவார்கள்.



ஊராரின் முன்னெடுப்பில் பிள்ளையார், முருகன் இணைய, ஓட்டுக் கொட்டகை சில வருடங்களுக்கு முன்னர் சிறிய கோபுரத்துடன் கூடிய கோயிலாக மாறியது. கிராமத்துக் கோவில்களில் அம்மன்கள் பெரும்பாலும் உருவமாய் இருப்பதில்லை. பீடமாய்த்தான் இருக்கும். பீடத்தின் வடிவங்கள் மாறும்... அதன் அமைப்பு பெரும்பாலும் ஒரே மாதிரித்தான் இருக்கும். எங்க ஊரில் கருப்பர்கள் (பெரிய கருப்பன், சின்னக் கருப்பன்) இருவரும் ஒரு கோவிலுக்குள் பீடமாய்த்தான் இருக்கிறார்கள்.



இந்த சிறு தெய்வ வழிபாட்டிலும் சண்டைகள் இருக்கத்தான் செய்யும். சில கிராமங்கள் சேர்ந்து ஒரு தெய்வத்தைக் கும்பிடுவார்கள். வருடம் ஒருமுறை திருவிழா... அதன் தொடர்ச்சியாய் கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், எருது கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என திருவிழா களைகட்டும். இதற்குள்ளும் எங்க ஊருக்குத்தான் முதல் மரியாதை தரணும் என வீண் பிடிவாதங்கள் எழுந்து அதுவே சண்டையாகி திருவிழாவே காணாமல் பூட்டிக்கிடக்கும் கோவில்களையும் காணலாம். எடுத்துச் செலுத்த ஆளில்லாமல் சிதைந்த கிடக்கும் கோவில்களையும் காணலாம்.



எங்க ஊர் ஐய்யனார் கோவிலில் எருதுகட்டு வருடா வருடம் சிறப்பாக நடக்குமாம்... எங்களுக்கு விவரம் தெரிந்தது முதல் நடப்பதில்லை. மேலே சொன்னது போல் இரு ஊர் மரியாதைப் பிரச்சினைதான் காரணம். அதேபோல் கருப்பர் கோவிலில் அவரைக் குலதெய்வமாக வழிபடும் பல ஊர்ப் பங்காளிகள் சேர்ந்து கிடா வெட்டு சிறப்பாக நடத்துவார்களாம். எங்களுக்குத் தெரிய கிடா வெட்டு இல்லை என்றாலும் வருடம் ஒருமுறை கூடி சாமியாவது கும்பிட்டார்கள். அதிலும் பிரச்சினை என்றாக அவரவர் ஊரில் கருப்பனுக்கு கோவில் கட்டி சாமி கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள். இப்படித்தான் சிறு தெய்வங்கள் வழிபாடுகளில் சிக்கல்கள் வழிவழி தொடர்கின்றன... தீர்க்கப்படாமலே.



பங்காளிகளுக்கென்று குலதெய்வம் போக சிறுதெய்வம் அதாவது வீட்டுச்சாமி என்று ஒன்று இருக்கும். இது பெரும்பாலும் உருவமற்ற பெண் தெய்வமாக இருக்கும். அந்தப் பங்காளிகள் வகையில் சில தலைமுறைக்கு முன்னர் பிறந்து மரித்ததாகவோ அல்லது வழிவழியாக கும்பிட்டு வருவதாகவோ இருக்கும்.



இந்தத் தெய்வங்களுக்கு வருடம் ஒருமுறை கோழிப்பூஜை, படையல், கருப்பட்டி பணியாரம், பால்சோறு என சிறப்பாக பூஜை போடுவார்கள். இந்த வீட்டுச்சாமிகள் வழிபாட்டில் பெரும்பாலான இடங்களில் பெண்களே பூஜை செய்வார்கள்... சில இடங்களில் வாயைக் கட்டிக் கொண்டு செய்வதையும் காணலாம்.



இந்த வீட்டுச்சாமி கும்பிடுவதிலும் பங்காளிச் சண்டையால் குழப்பம் வருவதுண்டு. எங்க வீட்டுச்சாமியான உமையவள் (உமையரம்மத்தா சொல் வழக்கு) கூட இப்போது அவரவர் இல்லத்தில் வைத்துத்தான் கும்பிடுகிறோம். பெரும்பாலான வீட்டுச்சாமிகளுக்குப் படைக்கப்படுபவை அவர்கள் தவிர் மற்றவர்கள் சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடு கொண்டவைதான். மிச்சமிருந்தாலும் நாய், நரி சாப்பிடாமல் மண்ணுக்குள் புதைக்க வேண்டும்.



மரங்களில் வைத்துக் கும்பிடப்படும் சிறுதெய்வங்களின் கதை சுவராஸ்யமானவை. பெரும்பாலும் அது ஏதோ ஒரு வகையில் காவல் தெய்வமாக இருக்கும். மரத்தில் ஆணி அடித்தோ அல்லது குங்குமம் மட்டும் வைத்தோ கும்பிடப்படும் தெய்வங்கள் இவை. மரம் பட்டுப் போதல் அல்லது ஏதாவது ஒரு வகையில் சாய்ந்து போதல் நிகழும் பட்சத்தில் அருகிருக்கும் மரம் சாமியைத் தாங்கும். அரிதாக அந்த மரத்துடன் காணாமல் போன தெய்வங்களும் உண்டு. மக்கள் செல்ல வழியில்லாத கருவைகள் நிறைந்து மறந்து போன தெய்வங்களும் உண்டு. எங்கோ இருக்கும் தெய்வத்துக்கு ரோட்டில் சிதறு தேங்காய் உடைத்துக் கும்பிடும் நிகழ்வும் உண்டு.



இன்று பரபரப்பாக இருக்கும் பெரிய தெய்வங்களின் கோவில்களில் நின்று மனசார வேண்டிக்கொள்ள அவகாசம் கிடைப்பதில்லை. வரிசையில் வருபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே கும்பிடும் கால நேரத்தின் அளவிருக்கும் அதுவும் 'போ.. போ...' என்று விரட்டும் காவலர் இல்லாத பட்சத்தில் மட்டுமே நிகழும். அதுபோக சாமியைப் பார்க்க பணம் என்ற முறைக்குள் கோவில்கள் வந்த பிறகு சாமிகளுடனான நெருக்கம் குறைந்து போய்விட்டது என்பதே உண்மை. பெரிய கோவில்களில் பரபரப்பில்லாத கோவில்களில் காசு வாங்காத கோவில்களில் நீண்ட் நேர சாமி தரிசனம் கிடைக்கும்.



சிறுதெய்வங்களுடன் நாம் 'நம் கஷ்டத்தைச் சொல்லி அழலாம்... 'நீ என்னைக் காப்பாத்திட்டேடா என சந்தோஷத்தில் கட்டி அணைக்கலாம்... 'இப்படி ஏமாத்திட்டியே' எனத் திட்டலாம்... தொட்டுக் கழுவலாம்... மேல் துண்டால் துடைக்கலாம்... குளித்து ஈரத்துண்டோடு கரையிலிருக்கும் தெய்வத்தை வேண்டலாம்... நினைத்த நேரத்தில் கும்பிடலாம்.. நீண்ட நேரம் அங்கிருக்கலாம்... மனநிறைவோடு திரும்பலாம்.



கிராமங்களில் காவல் தெய்வங்களாய் இந்த சிறுதெய்வங்கள்தான் காத்து நிற்கும். முனியய்யாவும் கருப்பரும் காவல் தெய்வமாய் எல்லாக் கிராமத்திலும் இரு வேறு திசைகளில் எழுந்தருளியிருக்கும். பல கிராமங்களில் கல்லில் மஞ்சளும் குங்குமமும் கொட்டி வைத்து ஏதோ ஒரு பெயரில் சாமி கும்பிடுவதைப் பார்க்கலாம்.

'

'அந்தப் பக்கம் போகதே அங்கிட்டு வனப்பேச்சி இருக்கா...', இந்தா இந்த பனங்காட்டுக்குள்ளதான் வில்லுக்கம்பு வெள்ளச்சாமி இருக்காரு... ராத்திரியில வானத்துக்கும் பூமிக்கும் வெள்ள உருவமா நிப்பாரு...', 'கம்மாக்கரை ஒரம்பா மரத்துல நாகரை வச்சிக் கும்பிடுறாக...' என உருவமற்ற தெய்வங்களுக்கு எல்லாம் உயிரூட்டி வைத்திருக்கும் கிராமங்களில் கருப்பர், அய்யனார், முனியய்யா தவிர பல பெயர் தெரிய சிறு தெய்வங்கள் காணாமலே போய்க் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை. இன்னும் இரண்டு தலைமுறைகளில் பெரும்பாலான சிறுதெய்வங்கள் பற்றித் தெரியாமலே போகக்கூடும் என்பதும் உண்மையே.

-'பரிவை' சே. குமார்.

எழுதியவர் : சே.குமார் (3-Jul-19, 6:58 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 197

மேலே