மனசு பேசுகிறது அரியநாச்சியும் குருதி ஆட்டமும்

தென்னகத்து மக்களின் வாழ்க்கைக் கதைகளைப் பேசும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்களின் எழுத்துக்கு வாசிப்பவரை ஈர்க்கும் திறன் அதிகம். அதுவும் அந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள் என்றால் அந்த அடிதடியும், வெட்டுக் குத்தும் நிஜத்தைப் பிரதிபலிப்பதை உணரலாம்.



ரத்தம்... ரத்தம்... ரத்தம்... கொலை, பழிக்குப் பழி என்பதுதான் வாழ்க்கை... இன்னும் அப்படித்தான் இருக்கிறது அந்த மண்.



சென்ற வாரம் ராமநாதபுரத்தில் கடை வீதியில் வைத்துக் கொலை, நேற்று சிவகங்கையில் நடைப்பயிற்சிக்குச் சென்றவன் வெட்டிக் கொலை... இந்த மண்ணில் ஒவ்வொரு விடியலும் ரத்தம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.



அப்படியான ரத்தம் தோய்ந்த கதைகளை... அதன் களத்தை விட்டு விலகாமல் சொல்லி, நம்மையும் அவர்கள் பின்னே ஓட வைப்பதில் கில்லாடி ஐயா வேல ராமமூர்த்தி அவர்கள்.



அவரின் அரியநாச்சியும் குருதி ஆட்டமும் PDF - பாக வாசிக்கக் கிடைத்தது.



குற்றப்பரம்பரையிலும் பட்டத்துயானையிலும் ஈர்த்த எழுத்துக்காரர் என்பதால் வேகமாக வாசிக்க ஆரம்பித்தேன்.



அரியநாச்சியும் குருதி ஆட்டமும் அடித்து ஆடிப் போகும் போது அவசரமாய் முடிக்கப்பட்டு விடுகின்றன என்பது ஏமாற்றமே.



விரிவாகப் போக வேண்டிய கதைகள் விரைவாய் முடிக்கப்பட்டுள்ளன.



சினிமாவுக்கான நேர ஒதுக்கல் எழுத்தினைத் தின்றுவிட்டதை உணர முடிகிறது.



அரியநாச்சி



Image result for அரியநாச்சி



அரியநாச்சியின் அப்பா வெள்ளையத்தேவன் எதற்காகவோ கொலை செய்துவிட்டு தாயில்லாப் பிள்ளைகளைத் தன் சகோதரியிடம் விட்டுவிட்டு சிறை செல்கிறான். தனக்கு நிச்சயிக்கப்பட்டவன் மஞ்சுவிரட்டில் மாடு முட்டிச் சாக, கன்னித் தன்மையோடு திருமணம் செய்யாது விதவையாய் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் அயித்த வள்ளியிடம் வளர்கிறார்கள்.



நிறை சூழியான அரியநாச்சி ஜெயிலுக்கு அப்பாவைப் பார்க்க பூவாயி அத்தையுடன் வருவதில் ஆரம்பிக்கிறது கதை.



அரியநாச்சி திருமணம் முடித்து சென்ற வெள்ளாங்குளத்தில் அவளின் கணவன் சக்கரைத்தேவனுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம். அதே மரியாதை அரியநாச்சிக்கும் கிடைக்கிறது. கொழுந்தன் சோலை அவளைத் தன் தாயாக நினைக்கிறான்.



தான் பார்த்துப் பார்த்து வளர்த்த தங்கை மாயழகியை சோலைக்கே கட்டி வந்து, தன் பக்கத்தில் வைத்து தாயைப் போல பார்த்துக் கொள்ள நினைக்கிறாள். அதற்காகத்தான் அப்பாவைச் சந்தித்து ஒப்புதல் பெற வருகிறாள். கூட்டத்தில் அவள் சொல்வது அப்பாவுக்குக் கேட்கவில்லை.



இதையறிந்த அவளின் தம்பி பாண்டியின் மனைவி குமராயி, பெண் வழிச்சொத்தெல்லாம் வெள்ளாங்குளம் போயிருமேன்னு மாயழகியை தன் தம்பி கருப்பையாவுக்கு கட்டி வைக்க கணவனுக்குத் தூபம் போடுகிறாள். அவளின் தூபத்துக்கு பாண்டி ஆட ஆரம்பிக்கிறான்.



பாண்டி அப்பாவைப் பார்த்து மச்சினனுக்கு கட்டப் போவதாய்ச் சொல்கிறான். அவர் அக்காவிடம் பேசிக்கப்பா என்கிறார். அவன் பேச மறுக்கிறான்.



அக்காவையும் மச்சானையும் அழைக்காமலே நிச்சயம் பண்ணுகிறான்... குடும்பப் பிரிவு பகையை வளர்க்கிறது, பாண்டி ஊர் இளவட்டங்களைக் கொழுவி விடுகிறான்.



லோட்டா காலையில் டீக்கடை மாலையில் சாராயக்கடை நடத்துகிறான். அங்குதான் இளவட்டங்கள் கூடிப் பேசுகிறார்கள்.



அக்கா வந்தால்தான் கழுத்தை நீட்டுவேன் என்கிறாள் தங்கை.



வள்ளி அயித்தையின் அழைப்பின் பேரில் திருமணத்துக்கு கணவன், கொழுந்தனுடன் வருகிறாள் அரியநாச்சி.



மாயழகியைப் பார்த்த சோலை, இந்த அழகியை விட்டுட்டனே எனப் புலம்பி லோட்டா கடையில் போய் மூக்கு முட்டக் குடிக்கிறான்.



பொண்ணும் மாப்பிள்ளையும் அமர, தாலி எடுத்துக் கொடுக்கப் போன அரியநாச்சிக்கு வலி வருகிறது.



ஊர்க் கிழவிகள் மருத்துவத்தில் குழந்தை பிறக்கிறது.



அக்காவுக்கு குழந்தை பிறந்ததும் மணமேடையில் இருந்து பார்க்க ஓடுகிறாள் மாயழகி.



தாலி ஏறாமப் பொண்ணு மணமேடையில் இருந்து எழுந்து போறது நல்லதில்லயேப்பா என்கிறார் திருமணத்தை முன்னின்று நடத்தும் ஊர்ப்பெரியவர் கோவிந்தத்தேவர்.



வயிறு முட்டக் குடித்துவிட்டு வரும் கொழுந்தனால் பிரச்சினை ஆரம்பிக்கிறது.



ஒருத்தரை வெட்டிக் கொ(ல்)ள்கிறார்கள்...



மணமேடை காத்திருக்க, மாறிமாறி வாழவெட்டியாகிறார்கள்...



இதெல்லாம் தெரியாமல் மகள் திருமணத்துக்கு விடுப்புக் கேட்டு கிடைக்காமல் விரக்தியில் இருக்கும் வெள்ளையத்தேவன் நன்நடத்தையில் அடுத்த வாரம் விடுதலை என்ற நிலையில் அரசு முன்னதாகவே விடுவிக்க மகிழ்வோடு ஊருக்குக் கிளம்புகிறார்.



வீட்டில் நடந்த எழவுகள் தெரியாமல்.



இதுதான் அரியநாச்சியின் கதை... ஆனால் இதை அவ்வளவு உயிர்ப்போடு சொல்லியிருக்கிறார்.



அப்பா எதற்காக கொலை செய்தார் என்பதை மட்டும் இறுதிவரை சொல்லவில்லை.



குருதி ஆட்டம்



பட்டத்துயானையின் தொடர்ச்சியாய்...



பட்டத்துயானையில் நாடு கடத்தப்பட்ட அரியநாச்சியும் ரணசிங்கத்தின் மகன் துரைசிங்கமும் அந்தமான் தீவில் இருந்து மீண்டும் பெருநாழிக்கு வருகிறார்கள் அண்ணனை/ தகப்பனைக் கொன்றவர்களை பலிவாங்க.



ஊருக்குள் ரணசிங்கத்தின் சாவின் சாட்சியாய் இருக்கும் ஒரே ஒருவன் பூஜாரி தவசியாண்டி... ஊரை வெறுத்துக் காட்டுக்குள் மகள் செவ்வந்தியுடன் வாழ்கிறான்.



அவனின் உதவியுடந்தான் ரணசிங்கத்தை சூழ்ச்சியால் வீழ்த்தியவர்களை பழிவாங்கல் அரங்கேறுகிறது.



ரணசிங்கத்தை சூழ்ச்சியால் வீழ்த்திய உடையப்பனுக்கு ஆங்கில அரசாங்கம் அரண்மனையைக் கொடுத்திருக்கிறது.அந்த அரண்மனை வீட்டுக்குள் மற்றவர்கள் செல்வதென்பதும் அதைப் பற்றி பேசுதல் என்பதும் தடை செய்யப்பட்டு இருக்கிறது அல்லது மக்களே தங்களுக்குள் தடை போட்டு வைத்திருக்கிறார்கள்.



அதைப் பற்றி பேசப் போய் உடையப்பனிடம் வேலைக்காரனாய் மாட்டிக் கொல்லும் லோட்டா, படும்பாடு நகைச்சுவையாய்...



உடையப்பனின் மனைவியும் ரணசிங்கத்தின் அத்தை மகளுமான பொம்மி, ரணசிங்கத்தின் மரணத்தன்று பிள்ளையைப் பெற்றுவிட்டு இறந்துவிட, அவளின் மகன் கஜேந்திரனை கொலைகாரனின் காத்துப் படாமல் வளர்க்க பாட்டி வெள்ளையம்மா சென்னைக்கு கூட்டிப் போய்விடுகிறாள். பின் பெருநாழி வருவேயில்லை.



கப்பலில் வரும்போதே தன் அண்ணனைக் கொன்ற வெள்ளைக்காரன் ஸ்காட்டை கொன்று மீனுக்கு இரையாக்கும் அரியநாச்சி, இரை மாறிடுச்சுன்னு வருத்தப்படாதே உனக்கான இரை கரையில் இருக்கு என்கிறாள்.



ஸ்காட்டை கட்டித் தழுவிய அத்தையைத் தவறாக நினைத்த துரைசிங்கம், ஸ்காட்டை கடலுக்கு இரையாகக் கொடுத்ததைப் பார்த்து மண்டியிட்டு வணங்குகிறான்.



ஊர்த் திருவிழா என்னும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள் எல்லாரும்.... ஆனால் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.



வைக்கோல் பிரி சுற்றி ஆடும் ஆட்டத்தில் யாரையும் வெட்டலாம்... கேசு இல்லை என்பதால் பழி வாங்க வைக்கோல் பிரி சுற்றப்படுகிறது.



பழியும் கொடுக்கப்படுகிறது,



அவ்வளவு தூரம் விறுவிறுப்பாய் பயணித்த கதை பழி வாங்கலை ஏனோ அவசரத்தில் அள்ளியெறியும் சோறு போல சிதறவிட்டுவிட்டார் வேலா.



கஜேந்திரனும் வேண்டும் என்று சொல்லும் அரியநாச்சி....



செவ்வந்தியை காதல் பார்வை பார்க்கும் கஜேந்திரன்....



செவ்வந்தி மீதான அரியநாச்சியின் பார்வையின் பின்னே இருக்கும் துரைசிங்கத்துக்கு மனைவியாக்கும் எண்ணம்...



நல்லாண்டி மகள் வனலெட்சுமி மீதான வெள்ளையம்மாவின் பார்வையின் பின்னே இருக்கும் கஜேந்திரனுக்கு மனைவியாக்கும் எண்ணம்...



தவசியாண்டியைக் கொல்ல உடையப்பன் ஏற்பாடு செய்த மனிதர்...



நல்லாண்டி வீட்டில் தங்கியிருக்கும் மாமியாரைப் பார்க்காத உடையப்பன்...



வெள்ளையம்மாளை நேருக்கு நேர் சந்திக்காத அரியநாச்சி...



அவசர கோலமாய் பழி வாங்கி தன் பசி தீர்த்துக் கொள்ளும் துரை சிங்கம்...



இப்படி இறுதியில் எல்லாமே சிதறிக்கிடக்கு... ஒன்றுக்கு ஒன்று இணையாமல்...



கதையை 'உச்சி ராத்திரி, உள்ளங்கை தெரியாத இருட்டு' என ஆரம்பித்திருப்பார். இந்த வரிகளே நம்மை கதைக்குள் இழுத்துச் செல்லும் அல்லவா..?



சினிமாவால் அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை... விரைந்து முடிக்க வேண்டிய சூழல் என்பதையும் ஆசிரியர் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்.



இருந்தாலும் அதிரடியாக ஆடி வரும்போது கட்டை போட்டு ஆட்டையக் கலைக்கும் சிஎஸ்கே வீரர்கள் போல் முடிவு ஆகிவிட்டது வருத்தமே... வைக்கோல் பிரி காட்சிகளை இன்னும் கொஞ்சம் விரிவு படுத்தியிருக்கலாம்.



ஒரு நல்ல எழுத்தாளனை... மண் வாசனையைக் கொண்டாடுபவனை படைப்புலகம் விட்டுவிட்டது... சினிமா எடுத்துக் கொண்டுவிட்டது என்பதுதான் உண்மை.



இன்னும் நிறையப் படைப்பார் என்ற நம்பிக்கை இருந்தாலும் சினிமா விடுமா என்பதுதான் கேள்வியே.



இரண்டுமே வாசிக்க வேண்டிய நாவல்கள்தான்.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (3-Jul-19, 7:00 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 57

மேலே