ஐயகோ தோமாக வீணே பிறர்மனையை வேட்டு விளிகின்றீர் - நெறி, தருமதீபிகை 336
நேரிசை வெண்பா
போமே பெருமை; புகுமே சிறுமையெலாம்;
ஆமே பழிபாவம்; ஐயகோ! - தோமாக
வீணே பிறர்மனையை வேட்டு விளிகின்றீர்!
ஆணேநீர் ஆய்மின் அகத்து. 336
- நெறி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
பிறர் மனைவியை விரும்பினால் பெருமை போகும்; சிறுமை புகும்; பழியும் பாவங்களும் விளையும்; அந்தோ! அந்த ஈனத் தீமையில் அழுந்தி அழிவது ஆண்மை ஆகாது; சிறிது கருதி ஆராய்ந்து உறுதியை ஓர்ந்து உணர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.
நிலை தவறாமல் நெறி முறையில் ஒழுகி வரும் அளவுதான் மனிதன் தலைமையுடையனாய் நிலவி நிற்கின்றான். நிலை தவறினால் தலையிலிருந்து விலகிய மயிர் போல் அவன் புலையுறுகின்றான். பெருமை என்பது அருமை மிகவுடையது.
பிறர் மனைவியை விழைந்து விழுவது இழிவாதலால் அந்த இழிவுடையானிடம் உயர் நலங்கள் உறாமல் ஒழிகின்றன.
போமே பெருமை; புகுமே சிறுமை; ஆமே பழிபாவம். என்பன பரிதாப நிலைகளை ஒலி செய்துள்ளன. பிற தார விழைவால் நேரும் அழிவுகளும் இழிவுகளும் அவலங்களும் எளிது தெளிவுற பெருமை போம் என்றதோடு அமையாமல் சிறுமை புகும்; பழி பாவங்கள் ஆம் என்றது,
பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல் இறப்பான் கண். 146 பிறனில் விழையாமை
நேரிசை வெண்பா
அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென்(று)
அச்சத்தோ டிந்நாற் பொருள். 82 பிறர்மனை நயவாமை, நாலடியார்
அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
பகையே பழியே பாவமே
..பயமே நான்கும் தினம்கொடுக்கும்:
தகையார் பெருமை முழுதழிக்கும்
.. சார்ந்த பிறனில் விழைவொழிந்தோர்
தொகையார் அறமே பொருளின்பம்
..தோலாப் பெருமை யுடன்வாழ்வர்
நகையால் அதனைக் கனவிடத்தும்
நவிற்றி யிடினும் தீங்காமே, - விநாயக புராணம்
நேரிசை வெண்பா
அறனும் அறனறிந்த செய்கையும் சான்றோர்
திறனுடைய னென்றுரைக்கும் தேசும் - பிறனில்
பிழைத்தா னெனப்பிறரால் பேசப் படுமேல்
இழுக்காம் ஒருங்கே யிவை. 89 அறநெறிச்சாம்
பிறர் மனைவியரை விழைந்தவர் அடையும் பிழைபாடுகளை இவை தொகுத்து உணர்த்தியுள்ளன.
புகழ் புண்ணியங்களை இழந்து பழி பாவங்களை அடைந்து படுதுயர்கள் உறுவரெனவே அவரது பரிதாப நிலைமைகள் வெளியாகி நின்றன. நெறி வழுவ நெடிய துன்பங்கள் கடிது விளைகின்றன.
இவ்வாறு வெய்ய துயரங்கள் விளைந்து வருதலை அறிந்தும் மையலால் மதி மருண்டு வீணே மயங்கி உழல்கின்றனர்.
ஐயகோ! என்றது அவரது அறியாமைக்கு இரங்கிப் பரிவு மீதூர்ந்து வந்தது. பிழைகள் பல துழைய விழைவு கொள்வது அழிவு கொள்வதாம். பாழான அதில் வீழாது விலகுக.
’வேட்டு விளிகின்றீர்’ என்றது மேலோருடைய நெறி முறைகளைக் கேட்டுத் தெளியாமலும், கெடுநிலை உணராமலும், மாட்டு மதியாய் மடிந்து படுதலை நினைந்து இரங்கியது.
பிறர்மனை விழைவால் நாணம் இழந்து நவையுறுதலால் ஆணே நீர்? என வினவ நேர்ந்தது. தலையில் முக்காடிட்டு அஞ்சி ஒதுங்கிப் பஞ்சையாய்ப் பதுங்கிப் படுபழிகளில் இழிந்து உழலுதலால் ஆண்மை மேன்மைகள் அவரை அணுகாது போயின.
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
பெரியவாட் டடங்கட் செவ்வாய்ப்
..பிறர்மனை பிழைக்கு மாந்தர்
மரீஇயவாய்ப் புறஞ்சொற் கூர்முள்
..மத்திகைப் புடையும்.அன்றி
ஒருவர்வாய் உமிழப் பட்ட
..தம்பலம் ஒருவர் வாய்க்கொண்(டு)
அரியவை செய்ப வையத்(து)
..ஆண்பிறந் தார்கள் அன்றே. 2821 சீலம், முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி
அயல் மனையாளை அவாவி அலைபவருடைய இயல்பையும் இளிவையும் விளக்கி அவரது பிறப்பை இது பழித்திருத்தலறிக. நெறிகேடான இச்சையால் நாணம் அழிகிறது; ஆண்மை ஒழிகிறது; அவமானம் விளைகிறது.
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
* 2,3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
இச்சைத் தன்மை யினில்பிறர் இல்லினை
நச்சி, நாளும் நகைஉற, நாண்இலன்,
பச்சை மேனி புலர்ந்து, பழிபடூஉம்
கொச்சை ஆண்மையும், சீர்மையில் கூடுமோ? 99 பிணி வீட்டு படலம், சுந்தர காண்டம், இராமாயணம்
இராவணனை நோக்கி அனுமான் இவ்வாறு கூறியிருக்கிறான். பிறர் இல்லினை நச்சி நிற்பவன் இலச்சை கெட்டவன்; ஆண்மையும் மேன்மையும் இலனாய் அவன் அவமதிப்புறுவன்; அவனுடைய பிறப்பு ஈனமாம் என இடித்து அறிவுறுத்தி எதிரி தேற உரைத்துள்ள அனுமனின் சீரிய உரைகள் வீரியம் மிகவுடையன.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. 148 பிறனில் விழையாமை
பேராண்மையாளன், புண்ணிய சீலன் இன்னவனே என வள்ளுவர் இதில் உணர்த்தியிருக்கிறார்.
நேரிசை வெண்பா
செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை
வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே, இம்மை
அலியாகி ஆடிஉண் பார். 85 பிறர்மனை நயவாமை, நாலடியார்
முற்பிறப்பில் பிறர் மனைவியை விரும்பினவன் பிற்பிறப்பில் அலியாய் இழிந்து உழலுவன் என இது குறித்துள்ளது. நெறி கடந்து கொழுத்துத் திரிந்தமையால் இழி பிறவியை அடைந்து பழியுற நேர்ந்தான். விளைவதை விழி அறிய வெளி செய்துள்ளனர்.
அயல்மனை விழைவால் பழி துயரங்கள் பல விளைந்து இழி பிறவிகள் உறுகின்றன; அப் படுபழியில் விழுந்து பாழாகாமல் நெறியோடு திருந்தி ஒழுக வேண்டும்.
அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)
பண்டோராண் பெண்ணமைத்தவ் விருவருக்கு மணமியற்றிப்
..பரனி ரக்கங்
கொண்டளித்த முறைகடந்து கள்ளவழிப் புணர்ச்சிசெயுங்
..கொடியோர் தம்மை
மண்டலமே வாய்பிளந்து விழுங்காயோ அவர்தலைமேல்
..வானு லாவுங்
கொண்டலே பேரிடியை வீழ்த்தாயோ இதுசெய்யில்
..குற்ற முண்டோ. 1 – பரத்தமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
நெறிகடந்து பிறன்இல் விழைவது எவ்வளவு பெரிய பாவம் என்பது இதனால் அறியலாகும்.
நேரிசை வெண்பா
ஆண்டகையார் என்பார் அயல்மனையை நோக்காரே
நாண்டகைந்து நோக்கி நயந்திடினோ - .தூண்டிலிரை
நன்றென்று கவ்விமீன் நாசமுறல் போலந்தோ
பொன்றி ஒழிவர் பொரிந்து.
என்பதை ஒன்றி உணர்ந்து உய்தி பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.