முத்தி அருளும் முதன்மைத் திருவான பத்தியருள் - நீர்மை, தருமதீபிகை 326

நேரிசை வெண்பா

முத்தி அருளும் முதன்மைத் திருவான
பத்தியருள் அன்பென்னும் பான்மையெலாம் - சித்தம்
உருகி இறையை உணர்ந்து கரைந்து
வருகை தெரிக வரவு. 326

- நீர்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

முத்தி இன்பத்தை அருளவல்ல தலைமைத் திருவான அன்பு, அருள், பத்தி என்பன எல்லாம் இறைவனை நினைந்து உள்ளம் கரைந்து உருகிவரும் இயல்புகளே என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், ஆன்ம உருக்கத்தின் மேன்மை கூறுகின்றது.

அன்பு - ஒத்த மனிதரிடம் உரிமை புரியும் உள்ளக் கனிவு.
அருள் - எளிய பிராணிகளிடம் இரங்கி நிற்கும் தயை.
பத்தி - கடவுளை நினைந்து உருகும் உயர் நீர்மை.

இந்த உயிர் உருக்கங்கள் பேரின்ப நிலையங்களாய்ப் பெருகியிருக்கின்றன; உள்ளம் கனிய உணர்வு கனிந்து உயிர் ஒளி பெறுகின்றது. அவ்வொளி பர வெளியில் எளிது கலந்து முழுதும் ஆனந்தம் ஆகின்றது. சீவ தயை சிவ மயமாய்த் திகழ்கின்றது.

மனம் கனியக் கனிய மனிதன் புனிதனாய் இனிய தெய்வத்தன்மையை அடைகின்றான்; கனியாமல் கடிதாயிருந்தால் கல், இரும்பு, மரம், மண் என இழிந்து வறிதே ஒழிந்து போகின்றான்.

எண்சீர் விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

வெள்ளம்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
..பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்
பள்ளம்தாழ் உறுபுனலில் கீழ்மே லாகப்
..பதைத்துருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்(கு)
உள்ளந்தாள் நின்றுச்சி அளவும் நெஞ்சாய்
..உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா!
வெள்ளந்தான் பாயாதால்; நெஞ்சம் கல்ஆம்;
..கண்ணிணையும் மரம்ஆம்,தீ வினையி னேற்கே. - திருவாசகம்

பத்தியின் பரவச நிலைகளை இது உணர்த்தியுள்ளது. பள்ளம் பாயும் வெள்ளம் போலப் பரமனை நோக்கி உள்ளம் உருகிக் கரையும் அனுபவத்தைத் தாம் அடைந்திருத்தும் ஆற்றாமையால் மாணிக்கவாசகர் இங்ஙனம் அலறியிருக்கிறார்.

நெஞ்சம் கல்லா? கன் மரமா? என்றது உள்ளம் உருகா நிலையில் உள்ள தன்மைகளை உணர்த்தி நின்றது. கல்லும் மரமுமாயிருப்பவர் இன்னார் என்பதைச் சொல்லாமல் சொல்லினார்.

இரும்புதரு மனத்தேனை ஈர்த்(து)ஈர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலிணைகள்;

அன்பு நலனில் விளையும் ஆனந்த நிலையை இதனால் அறிந்து கொள்கிறோம். உயர்ந்த பொருளை நினைந்துள்ளம் உருகவே உயிர் அதன் மயமாய் விரிந்து உயர் பரமாகின்றது.

பத்தி அருள் அன்புகளை ’முத்தி அருளும் முதன்மைத் திரு’ என்றது அவற்றின் உத்தம நிலைகளை உய்த்துணர வந்தது.

தன் உள்ளம் கரைந்து உருகிய பொழுதுதான் மனிதன் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி மகிழும் உரிமையைப் பெறுகின்றான். வேறு வழியில் அதனைப் பெறுதல் அரிது.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போ(டு) உருகி அகம்குழை வார்க்கன்றி
என்போன் மணியினை எய்தவொண் ணாதே. – திருமந்திரம்

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;

2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே. 9 பொது, திருநாவுக்கரசர் தேவாரம், ஐந்தாம் திருமுறை

3054
நீர்மையில் நூற்றுவர் வீய ஐவர்க்(கு) அருள்செய்து நின்று
பார்மல்கு சேனைய வித்த பரஞ்சுட ரைநினைந் தாடி
நீர்மல்கு கண்ணின ராகி நெஞ்சம் குழைந்து நையாதே
ஊர்மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்(கு) என்செய்வாரே? 7, திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும், நம்மாழ்வார் திருவாய்மொழி, நான்காம் ஆயிரம், நாலாயிர திவ்ய பிரபந்தம்

அன்பினால் நெஞ்சம் உருகி நின்றவரே இன்ப மூர்த்தியான இறைவனை எய்துகின்றார், அல்லாதவர் அயலாராய் மயலார்கின்றார் என இவை குறித்து நிற்கும் இயல்பினைக் கூர்ந்து நோக்குக. இனிய நீர்மை பிறவி தீர்கின்ற சீர்மை ஆகின்றது.

மாடு, ஆடு முதலிய இழி பிறவிகளில் வீழாமல் அறிவுடைய இந்த உயர் பிறவியை அடைந்துள்ளோம்; பல படிகள் ஏறி மனிதராய் உச்ச நிலையை எய்தி வந்துள்ள நாம் நன்றியறிவுடன் இறைவனைக் கருதி வணங்கும் கடப்பாடுடையராய் மருவியிருக்கிறோம்; அறிவு மயமான பரமனை உரிமையுடன் நினைக்கவில்லையானால் இந்த அறிவுப் பிறப்பால் யாதும் பயன் இல்லை. உரிய கடமையை மறந்து நன்றி கொன்றவராய்க் குன்றி நிற்றலால் தெய்வம் கருதாப் பிறவி வெய்யது என வையம் வைய நேர்ந்தது.

எண்சீர் விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

அருள்பழுக்கும் கற்பகமே! அரசே! முக்கண்
ஆரமுதே! நினைப்புகழேன்; அந்தோ வஞ்ச
மருள்பழுக்கும் நெஞ்சகத்தேன்; வாளா நாளை
வாதமிட்டுக் கழிக்கின்றேன்; மதியி லேனை
வெருள்பழுக்கும் கடுங்காட்டில் விடினும், ஆற்று
வெள்ளத்தில் அடித்தேக விடினும், பொல்லா
இருள்பழுக்கும் பிலம்சேர விடினும் அன்றி
என்செயினும் போதாதே எந்தாய்! எந்தாய்! 1

பெருங்கருணைக் கடலே!என் குருவே முக்கட்
பெருமானே! நினைப்புகழேன் பேயேன் அந்தோ
கருங்கல்மனக் குரங்காட்டி வாளா நாளைக்
கழிக்கின்றேன்; பயனறியாக் கடைய னேனை
ஒருங்குருள உடல்பதைப்ப உறுங்குன்(று) ஏற்றி
உருட்டுகினும் உயிர்நடுங்க உள்ளம் ஏங்க
இருங்கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும்
என்செயினும் போதாதே எந்தாய்! எந்தாய்! 2 அருட்பா

எப்பொழுதும் தெய்வ சிந்தனையுடையராய் உள்ளமும் உயிரும் உருகி யாண்டும் பரவசராயிருந்தும் இராமலிங்கர் இவ்வாறு மறுகியிருக்கிறார்.

சித்த சுத்தி வாய்ந்த பரிசுத்த ஆத்மாக்கள் பரமாத்துமாவைப் பலவகையாகக் கருதிப் போற்றி மருவி மகிழ்கின்றன.

சித்தம் உருகி வருகை என்றது பத்தியின் பான்மை தெரிய வந்தது. பத்தியும் அருளும் நேரே முத்தி நிலையில் உய்த்தருளுதலால் இவை உத்தம சீர்மைகளாய் ஒளி சிறந்துள்ளன. இவ் விழுமிய பண்புகளை மேவி எழுமையும் இன்புறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jul-19, 3:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே