இபாவை வணங்குதல்---------------------------------அடையாள வேட்டை

அன்புள்ள சார்,

ஒரு பள்ளி ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றிக்கொண்டிருந்தவர், திருவள்ளுவர் ஏன் 1330 குறள்கள் எழுதினார் என்று ஒரு விளக்கம் அளித்தார். 1330 என்கிற எண்ணை ஒன்றுடன் ஒன்று கூட்டினால் 7 வருகிறது. திருக்குறளைப் படித்தவனுக்கு ஏழு பிறவிக்கும் கவலையில்லை என்று அதற்குப் பொருள் என விளக்கினார். அப்பொழுது நான் வாயை அனுமார் போல வைத்துக்கொண்டு ஒரு பதிவைத் தேடினேன். அது இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய இந்தப்பதிவு.
பெரியாழ்வார் பாடியிருப்பாரா?
சிறில் அண்ணன் இபா அவர்களின் நண்பர். அவரிடம் சில நேரங்களில் இபா வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கோரியிருக்கிறேன். சிறில் அண்ணனின் இலக்கியப்பணி மிகவும் அந்தரங்கமானது என்பதால் அதைப் பிறர் அறிய முடியாது. சமயங்களில் அவருமே கூட. ஆகவே சந்திப்பு நிகழவே இல்லை. சென்றவருடம் ஒருமுறை அவரை சுசீலாம்மா பாராட்டு விழா சமயத்தில் சந்தித்தோம். அப்பொழுதே மெலட்டூர் பாகவதமேளா,சுசீலாம்மாவை டெல்லியில் ஒருமுறை சந்தித்தது என அனைத்தையும் வருடக் கணக்குடன் கூறினார். அதற்குப் பின் சிறிலண்ணன் விக்கிரமாதித்தானாக காடாறு மாதம் சென்றுவிடுவதால் சந்திப்பு ஏதும் சாத்தியப்படவில்லை. நேற்று இபா அவர்களுக்கு தொண்ணூறாவது பிறந்தநாள் என்பதால் அவரைச் சந்திக்க அனுமதி வாங்கி, இன்று மாலை சென்றோம்.
சண்முகம் அண்ணனை அவருக்கு நினைவிருக்கிறது. சத்தமாக பேசினால், நிறுத்தி மெல்ல பேசுங்கள் அப்பொழுதே நன்றாக கேட்கும் என்று கூறினார்.
கிருஷ்ணா கிருஷ்ணா மற்றும் அவரது வலைப்பூ பதிவுகள் பற்றி சிறிது நேரம் பேசினோம். நாங்கள் சொன்ன நேரத்திற்கும் தாமதமாகச் சென்றோம். அவர் இரவு ஏழு மணிக்கு உணவுண்டு உறங்கச் சென்று விடுகிறார் என்பதால் சொற்ப நேரமே உரையாட இயன்றது. ஆன்திவே என்று செய்தி அனுப்பிய நண்பர்களையும் அப்படியே திருப்பி அனுப்பவேண்டியதாயிற்று. இதைக் கேட்டதும் ஒருநாள் பகலில் வாங்களேன் என்றார். சனி ஞாயிறு வரலாமா என்று கேட்டோம். எனக்கு எல்லா நாளும் ஒன்றுதான். உங்களுக்குத்தான் கிழமைல்லாம் என்று சொல்லி சிரித்தவர், அடுத்த சனிக்கிழமை வரச் சொல்லிக் கூறினார். நாங்களும் ஆசி பெற்றுக் கிளம்பினோம்
நம் நண்பர்கள் அவரைக் காண வர விரும்பினால் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். ஒரு நுட்பமான எழுத்தாளரைச் சந்திக்க அழைப்பதால் ஒரு பொறுப்புத்துறப்பாக, வருவதற்கு முன் அவர் இருவருடங்கள் முன் எழுதிய இந்தப் பதிவைப் படித்து வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
அடையாள வேட்டை


அன்புடன்,
R.காளிப்ரஸாத்
----------------------------------------------------------------
அடையாள வேட்டை
================
சில தினங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக் கிழமை. வாசல் மணி ஒலித்தது. திறந்தேன் இரண்டு இளைஞர்கள். முப்பதுகளின் தலை வாசலில்.
‘தொந்தரவு படுத்துகிறமோ?’
இதற்குப் பதில் தேவையில்லை என்று எனக்குப் பட்டது.
‘உள்ளே வாங்க. என்ன வேணும்?’
‘கொஞ்சம் பேசலாமே உங்ககிட்டே/’
‘உட்காருங்க.’
இவ்வாறு கேட்கின்றவர்கள், இளம் எழுத்தாளர்களாக இருப்பார்கள், அல்லது, இலக்கிய ரசிகர்களாக இருப்பார்கள். நன்கொடை வாங்க வந்திருப்பவர்களாகவுமிருக்கலாம்.
உட்கார்ந்தார்கள். வெளியே மழைத் தூறல். மழைக்கு ஒதுங்கியவர்களாகவுமிருக்கலாம்.
ஒருவன் மற்றவன் தோளைத் தட்டி, ‘இவன் இப்பொத்தான் எழுத ஆரம்பிச் சிருக்கான்.. நான் ரசிகன் மட்டுந்தான். இருந்தாலும் எங்க ரெண்டு பேருக்குமே எப்பொதும் அசாத்திய தாகம்’. என்றான்..
நான் ‘டைனிங் டேபிளை’ச் சுட்டிக் காட்டினேன்.
அவன் ஒன்றும் புரியாமல் ‘என்ன?’ என்றான்.
‘வாட்டர் பாட்டில். பக்கத்திலேயே தம்ளரும் இருக்கு”
‘நான் அந்தத் தாகத்தைச் சொல்லலே. இலக்கியத் தாகத்தைச் சொல்றேன்.’ என்றான் புன்னகையுடன்.
‘ஐ ஆம் ஸாரி. ‘இலக்கியப் பசி’ என்பதைக் காட்டிலும் ‘இலக்கியத் தாகங்’கிற வழக்குதான் அதிகம். ஏன் அப்படி?’ என்றேன்.கொள்ளும் நான் என்க்கு நானே கேட்டுக் கொள்ளும் குரலில்
.‘பசியைப் பொறுத்துக்கலாம். தாகம் எடுத்த பொறுத்துக்க முடியாது’ என்றான் எழுத்தாள இளைஞன்.
‘செவிக்கு உணவிலாத போது’ ன்னு குறள் சொல்லறது. ஆகவே ‘இலக்கியப் பசி’ன்னும் சொல்லலாம். சரி, நீங்க எதைப் பத்திப் பேச வந்தீங்க?’ என்று கேட்டேன்.
‘முதல்லே உங்களைப் பத்தி ஒரு கேள்வி கேட்கலாமா?’ என்றான் எழுத்தாளன் அல்லாத ரசிகன்.மட்டும்.
‘கேளுங்க.’
‘உங்களுக்கு எழுதணும்னு எப்போ தோணிச்சு, ஏன் தோணிச்சு?’
‘ நான் சின்னவனா இருந்தப்பொ, எங்க வீட்டிலே ரெண்டு சைக்கிள் இருந்த து. இருந்தும் என்னாலே சைக்கிள் விடக் கத்துக்க முடியலே. எனக்குக் கைவேலை, கால் வேலை எதுவுமே வராதுன்னு எங்கப்பா முடிவுக்கட்டிட்டார். அப்பொ எழுத ஆரம்பிச்சேன். பிடிச்சிருந்தது.’
‘அப்போ எழுததுங்கிறதும் சைக்கிள் விடக் கத்துக்கிறதும் ஒண்ணுன்னு சொல்றீங்களா?’ என்றான் ரசிகன்.
‘ பிடிச்சுச் செய்யறது எதுவுமே கலைதான். நாம் யாருன்னு நாமே தேடிக்கிற விவகாரம். நான் கதை எழுதறேன், அவன் கல்லுடைக்கிறான், அவனைவிட நான் உயர்வுன்னா அது தப்பு. செய்யற தொழில் எதிலியுமே உயர்வு, தாழ்வுங்கிறது கிடையாது,அதை நாம் பிடிச்சுச் செஞ்சா.’’
எழுத்தாளன் எழுந்து நின்றான்.
‘என்ன வேணும்?’
அவன் ‘டைனிங்-டேபிள்’ அருகே சென்று தண்ணீர் ‘பாட்டிலை’ எடுத்தான். தம்ளரில் தண்ணீர் ஊற்றிக் கொண்டான்.
‘ நிஜத்தாகம். இலக்கியத் தாகமில்லே’ என்றேன் நான். புன்னகைக்கவில்லை.
அவன் தண்ணீரைக் குடித்து முடித்து விட்டுக் கேட்டான்:’ நாம யாருன்னு நாமே தேடறதுன்னு சொன்னீங்களே, விளக்கிச் சொல்ல முடியுமா?’
‘ நீங்க படிக்கிறீங்களா, வேலையிலே இருக்கீங்களா?’
‘வேலையிலேருக்கேன். ஐ.டி.’
‘எதுக்காக எழுதணும்னு உங்களுக்குத் தோணித்து?’
சிறிது யோஜித்தான்.
’சின்ன வயசிலேந்து அவன் நிறையப் ‘புக்ஸ்’ படிப்பான், சார்.’ என்றான் ரசிகன்.
‘நீங்க படிக்கிறதில்லையா, ரசிகனாச்சே?’
‘ நானும் படிப்பேன். ஆனா அவன் மாதிரியில்லே. எல்லாரும் எழுத ஆரம்பிச்சாச்சுன்னா, படிக்கிறதுக்கு ஆளே இருக்கமாட்டாங்க..’ என்றான் சிரித்துக் கொண்டே.
‘ எழுத்தாளர்கள் ஒருவர் எழுதறதை மத்த எழுத்தாளர்கள் படிக்க மாட்டார்கள் என்று சொல்றீங்களா? ’ என்று கேட்டேன்.
‘ எனக்குத் தெரியாது, நீங்கதான் சொல்லணும்’ என்றான் புன்னகையுடன்.
கொஞ்சம் ஆழமானவன்தான் என்று தோன்றிற்று.
‘ அந்தக் காலத்திலே, ஐ மீன், ரொம்ப பழைய காலத்திலே தமிழ் இலக்கிய நூல்கள் ஏட்டுச் சுவடிகள்லே தான் எழுதினாங்க, பிரதிகள் அதிகமா இருந்திருக்காதே, எப்படி, சார், படிப்புத் தொடர்ச்சி இருந்திருக்க முடியும்?’ என்றான் எழுத்தாள இளைஞன்.
‘படிப்புத் தொடர்ச்சி’ ன்னா?’ என்றேன்.
‘ சிலப்பதிகாரத்திலே திருக்குறள் வரிகள் வருது அந்த மாதிரி ..’
‘ அந்தக்காலத்திலே ஏட்டுப் பிரதிகளை மட்டும் நம்பிப் படிக்கலே.. கர்ணப்பரம்பரையா கேள்வி ஞானம். கண்ணாலே புத்தகத்தைப் பார்த்துப் படிக்கிறதைக் காட்டிலும் காதாலே கேட்டுப் படிக்கிறது மனசிலே உறுதியா நிக்கும்.. அதான் ‘கற்றலில் கேட்டல் நன்று’ன்னு சொல்வாங்க. ’சுருதி’ ன்னா அதுதான்..நூல்களைப் பொறுத்தவரைக்கும் சமய வேறுபாடு இருந்ததாகவும் தெரியலே.. பழுத்த சைவர் நச்சினார்க்கினியர் பழுத்த சமண நூல் ‘சீவகசிந்தாமணி’க்கு உரை எழுதியிருக்கார். காஞ்சிபுரம் வைணவர் பரிமேலழகர், மதம் கடந்த திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கார். அப்போ, சமய வேறுபாடு இல்லாமே,வழி வழியா பாடம் கேட்டிருக்காங்கன்னு தானே அர்த்தம்?’ என்றேன்.
சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது.
எழுத்தாளன் எழுந்து சென்று இன்னும் சிறிது தண்ணீர் குடித்தான்.
‘ரொம்பத் தாகமோ/’ என்று கேட்டேன். பதில் எதிர்பார்க்கவில்லை.
கைக் குட்டையினால் வாயைத் துடைத்துக் கொண்டே கேட்டான்’’ அப்பொ நீங்க, ‘நம்மை நாம் யாருன்னு தேடிக்கிறது’ன்னு சொன்னீங்களே, இதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலே, இதை, ‘அடையாள வேட்டை’ ன்னு சொல்லலாமா? ஐ மீன், ‘எழுதறதுங்கிறது அடிப்படையிலே அடையாள வேட்டையா?’
’ ஆமாம். ஆனா, கொஞ்சம் எச்சரிக்கை தேவை. தன் அடையாளத்தை எழுத்தில் தேடறப்போ, அது விசுவரூபமா தெரியக் கூடிய சாத்தியமும் உண்டு. இது அவரவர்களுடைய உளவியல், மரபணுவியல் கட்டமைப்பு விவகாரம். அதனாலே மற்றைய எழுத்தளர்களைப் பத்தித் தீர்ப்பு சொல்ற மாதிரி அபிப்பிராயம் சொல்லக் கூடிய ஆபத்தும் இருக்கு. அவனுடைய தீவிர வாசகர்களுக்கும், ‘Daniel has come to judgement’ ங்கிறமாதிரி ஒரு பிரமையும் ஏற்படறது சகஜம். அதிலேந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமும் ஒரு பண்புடைய எழுத்தாளனுக்குத் தேவை’ என்றேன்.
அப்பொழுது என் தொலைபேசி ஒலித்தது..
இருவரும் எழுந்தார்கள்.
மழைத் தூறல் நின்றுவிட்டது.





Save
Share

எழுதியவர் : காளிப்ரஸாத்-------இந்திரா பா (12-Jul-19, 5:33 am)
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே