நிலா காயும் இரவினிலே - 6

பாகம் - 6 :

என்ன அரவிந்தன்... எல்லாரையும் அந்த வீட்டுலேயே தங்க வச்சிருக்கலாமே, அங்கயும் இங்கயும்னு தேவையில்லாம அலைச்சல் வந்திருக்காதுல என்றாள் ஏஞ்சல். என்ன பண்ணுறது... ரெண்டு வீட்டுப் பெரியவங்களும் ஒத்துக்கிறலயே என்றாள் அமுதா. ஏன்?... என்று மீண்டும் கேட்டாள் ஏஞ்சல். அதுவா... கல்யாணம் நடக்குற வரைக்கும் ஒரே வீட்டுல இருக்கக் கூடாதுனு தான் என்றாள் மகிழினி. இப்படி இருக்கும் போதே... ரெண்டு பேரும் அடிக்கடி தனியா பேசிட்டு இருக்காங்க, ஒரே வீடுன்னா சொல்லவா வேணும் என்று சொல்லி சிரித்தாள் மலர்விழி. ஏ... மலரு என்று பொய்க் கோவத்தோடு காயத்திரி பார்த்தாள். பெரியவங்க சரியாத்தான் முடிவு எடுத்திருக்காங்க, ஆனாலும் பலனில்லையே என்று கேசவன் சொன்னான்.

என்ன எல்லாரும் சேர்ந்து எங்களையே கிண்டல் பண்றீங்க, ம்.. நடக்கட்டும் நடக்கட்டும் என்று அரவிந்தன் சொல்ல, எங்க இடத்துல நீங்க, உங்க இடத்துல நாங்க.. நிக்கிற காலம் வராமலா போயிடும் அப்ப பாத்துக்கிறோம் என்று காயத்திரி சொன்னாள். அடடா... ரெண்டு பேருக்கும் என்ன ஒரு காதலு என்று நீலவேணி சொல்லி சிரித்தாள். கல்யாண வீட்டுல உங்கள விட்டா நாங்க யார கிண்டல் பண்ணுறது என்று மணி சொல்ல, மற்றவர்கள் சிரித்தனர்.

ஏன் எங்கள விட்டா கிண்டல் பண்ண வேற ஆளில்லையா என்று காயத்திரி கேட்டாள். இப்ப இவங்களையே கிண்டல் பண்றேனு வச்சிக்கங்களே சிலநேரம் கிறுக்கச்..சி என்று கேசவன் முடிப்பதற்குள் பக்கத்தில் நின்ற நீலவேணி சட்டென்று அவன் கால வேகமா மிதிக்க, ஆ..வென்று கத்தினான். ஏ.. எதுக்கு இவ்வளவு வேகத்துல கால மிதிக்குற என்று கேசவன் கேட்டான். கிறுக்கச்சினு சொன்னா ஏஞ்சலுக்குப் பிடிக்காது, அப்பறம் அவ சாமியாடிடுவா... என்று அவன் காதில் மெல்ல நீலவேணி சொன்னாள். அய்யோ..! அப்படியா.. என்றான், ஆமாம்.. கொஞ்சம் அவ முகம் மாறியிருக்குப் பாரு என்றாள் நீலவேணி. அதை இப்படி மிதிக்காம கூட சொல்லி இருக்கலாம் என்று கேசவன் சொல்ல, அவ்வளவு வேகமாவா... மிதிச்சேன் என்றாள் நீலவேணி. மிதிச்சுக் காமிக்கவா... என்றான், சரி சரி ஆளவிடு என்றாள் நீலவேணி.

கேசவன் மற்றும் நீலவேணிய பார்த்து நீங்க ரெண்டு பேரும் பேசுறத எங்களுக்கும் சொல்லலாமே என்று கேட்டாள் காயத்திரி. நான் என்ன சொல்ல வந்தேனா... இப்ப இவங்கள கிண்டல் பண்றேனு வச்சிக்கிருங்க, சிலநேரம் நெருப்பா கொதிச்சுடுவாங்க.. ஆனா உங்கள கிண்டல் பண்ணும் போது உதட்டுல சின்னதா ஒரு சிரிப்பும் முகத்துல வெட்கத்தையும் மட்டுமே காட்டுவீங்க... அதான் காரணம் என்றான் கேசவன். இது மாதிரி பல ஆராய்ச்சியில முனைவர் பட்டம் வாங்கி இருப்பிங்க போல என்று சிரித்துக் கொண்டே மலர்விழி கேட்க, மற்றவர்களும் சிரித்தனர். அவமானம்... அவமானம்... என்று மணி கிண்டலாய்ச் சொல்ல, எங்க அவன்... இப்ப ஐயா சொல்வாரு கேளுங்க என்றான் கேசவன். இப்படி திடீருனு கேட்டா எப்படி சொல்றது, வேணும்னா நாளைக்கு யோசிச்சு சொல்லவா என்றான் மணி. நீங்க ஒண்ணும்... வேண்டாம் என்றான் கேசவன்.

முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுச் சிகப்பு வண்ணத் திறந்த ஜீப் நகர வீதிக்குள் நுழைகிறது. சாலையின் ரெண்டு பக்கங்களிலும் கடைகள், ஆங்காங்கே கூட்டம் கூட்டமாய் ஆட்கள் இவற்றையும் அந்த வாகன நெரிசலையும் கடந்து செல்கிறது. அங்கிருந்து ஒரு ஐந்து நிமிடம் பயணித்ததும் வண்டியைத் திடீரென நிறுத்துகிறான் முகிலன். பக்கத்தில் சுமங்கலி திருமண மண்டபம், இலேசாக திறந்திருந்த கதவைத் தாண்டி உள்ளே நுழைகிறேன். அப்பா என்று சொன்னதும், அட வா..ப்பா முகில் என்றார் ராசேந்திரன்.

எப்படிப்பா இருக்கீங்க, அம்மா எப்படி இருக்காங்க என்று நலம் விசாரித்தான். எல்லாம் நல்லா இருக்கோம்பா, அம்மா அப்பால்லாம் நல்லா இருக்காங்களா என்றார். ம்.. நல்லா இருக்காங்கப்பா என்றான். என்னப்பா இந்த நேரத்துல இங்கிருக்கீங்க... அரவிந்தனையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல என்றதும், இல்லப்பா முகில்... அவனத் தொந்தரவு பண்ணக் வேண்டாமுனு நானே வந்துட்டேன் என்றார். ஐயா மண்டபத்தில் உள்ள வேலையெல்லாம் முடிஞ்சுடுச்சு என்று ஓட்டுநர் முத்து வந்து சொன்னான். ஒரு நிமிடம் இருப்பா வந்துடுறேன் என்று சொல்லி உள்ளே சென்றார்.

அங்கு நடந்த வேலையெல்லாம் பாத்துட்டுச் சரியா இருக்குது என்ற திருப்தியோடு வந்திருந்த பணியாளர்களை அனுப்பி வைத்தார். மண்டப மேலாளரிடம் நாளைக்கு எல்லாம் சரியா நடக்ககனும் பாத்துக்கோங்க என்றதும், நீங்க ஒண்ணும் கவலைப் படாம போயிட்டு வாங்க ஐயா... நாங்க பாத்துக்கிறோம் என்று மேலாளர் சொன்னார். மண்டபத்தின் உள்ளிருந்து முத்துவும் ராசேந்திரனும் பேசிக் கொண்டே வெளிவந்தனர். நாளைக்கு நீயும் கூடயிருந்து எல்லாம் ஒழுங்கா நடக்குதானு பாத்துக்கோ என்றதும், நான் பாத்துக்கிறேன் ஐயா என்றான் முத்து.

என்ன முகில் ரொம்ப காக்க வச்சிட்டேனா, அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா என்றான் முகில். ஆங்.. முத்து நீ வண்டியை எடுத்துட்டு முன்னடி போ.. நான் முகிலோட பின்னடி வாறேன் என்றார். சரிங்க ஐயா.. என்று முத்து வண்டியை எடுத்துட்டுக் கிளம்பிட, சரி வா..ப்பா முகில் போவோம் என்று சொல்லி ஜீப்பில் ஏறி புறப்பட்டனர். நாளைக்குக் கால்யாணத்த வச்சிக்கிட்டு ஏன்ப்பா இப்படி அலையுறீங்க,
இதுக்குனு ஒரு முகவர் இருப்பாங்களே... அவங்ககிட்ட ஒப்படைச்சு இருக்கலாம்லப்பா என்றான். அவங்ககிட்ட தான்ப்பா ஒப்படைச்சேன் என்றார் ராசேந்திரன்.
அப்பறம் ஏன்ப்பா வீட்டுக்கும் மண்டபத்துக்கும் அலையுறீங்க என்றான்.

என்னப்பா முகில் செய்யுது... நாம கொடுத்த வேலை சரியா நடக்குதா இல்லையானு... நாம தானே பாக்கனும் என்றார், அதுவும் சரிதான்ப்பா என்றான் முகில். அப்பறம் அது சரியில்ல... இது சரியில்லனு... அவங்க மேலே குறை சொல்லி ஒரு பயனுமில்ல என்றார். ஆமாம்ப்பா, கொடுத்த வேலை சரியா நடக்குதானு... சமந்தப்பட்டவுங்க சரியா பாத்தா... இங்க பாதி பிரச்சனை தீர்ந்திடும்ப்பா என்றான். முகிலனின் தோளில் தட்டிக்கொண்டு என்னப்பா பண்றது... எல்லாம் நாம நெனைக்கிற மாதிரியா நடக்குது என்று ஒருவித சிரிப்போடு சொன்னார்.

உங்க காலத்துலயும் இப்படித்தான் நடந்ததா..ப்பா என்றான் முகில்.
இல்லப்பா முகில்... என்னப்பா சொல்றீங்க வியப்போடு கேட்டான். சின்ன சிரிப்போடு... இல்லப்பா... அப்போ இந்த அளவுக்குப் பெரிசா இல்ல, அன்னைக்கும் இதெல்லாம் நடந்துச்சுதான் என்றார். அதானே பாத்தேன் என்றதும் இருவரும் சிரித்தனர். தன்னைப்பத்தி மட்டும் யோசிக்கிறவன் எல்லாம் பொது அதிகாரத்துக்கு வந்தா இப்படித்தான் நடக்கும் என்றார். இதெல்லாம் மாறுவதுக்கு வாய்ப்பே இல்லப்பா என்றான் முகில். யாரோ?... சில நல்லவங்க இருக்குறது நாலதான் நம்ம வாழ்க்கை ஏதோ?... நகந்துகிட்டு இருக்கு என்றார்.

அப்பா உங்க கூட பேசுறப்ப எல்லாம் எனக்குள்ளே என்னென்னமோ?... நடக்குதுப்பா என்றான். உங்கிட்ட தான்ப்பா இதெல்லாம் பேசுறேன்... வீட்டுல அவனுக்கும் பிடிக்காது... அவளுக்கும் பிடிக்காது, அப்பறம் எங்க பேசுறது என்றார் ராசேந்திரன். எங்கேயோ?... ஆரம்பிச்சப் பேச்சு, எங்கெங்கோயோ?... போச்சு என்றான். அவன் தோள தட்டி சிரித்தார் ராசேந்திரன். இப்படி பேசிட்டே வந்ததுல வீட்டையும் நெருங்கி வந்து விட்டார்கள்.

தொடரும்...

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jul-19, 3:25 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 217

மேலே