ஆகாயம்

பேரன்பிற் குவமை யானாய்
தூரம் காணும் வரையரை கடந்தாய்
ஆகமப் பொருளின் முதன்மை யானாய்
தூம நிறமே நின் நிலையென்றாய்

முட்டும் முகில்கள் ஒன்றாய்க் கூடி - கை
தட்டும் ஒலியே இடியென மாறி
வெட்டும் மின்னல் பாதை போட
கொட்டும் மழையைப் புவியில் கொணர்ந்தாய்

குளிர் நிலவைக் கொண்டு
துகில் கொள்ளச் செய்தாய்
ஒளிரும் ரவியின் தயையால்
உயிர் நிலைபெறச் செய்தாய்

மூத்தோர் சொன்ன கதைகளி லெல்லாம்
மூவரும் தேவரும் வாழ்ந்த னரங்கே
மன்மத ரதியும் காதல் கொண்டு
விண்மீன் பிடித்துக் களித் தனரங்கே

சிந்தை மொத்தம் சிரசில் செலுத்தி
விண்கல மின்றி விண்ணில் பறந்தோம்
விந்தை தானே கோலே யின்றி
கோள்களின் தூரம் சரியாய்க் கணித்தோம்

சிறகை விரித்துப் பறவைகள் பறக்க
சிறகின்றிப் பறக்க யாமும் முயன்றோம்
திரை கடல் தாண்டிப் பாலையும் கடக்க
இயந்திரச் சிறகுடன் விமானம் அமைத்தோம்

எரிமிகு கழிவை விண்ணில் கொட்டி
ஓசோன் படலத்தை ஓட்டை போட்டோம்
கரிப்புகை மொத்தம் காற்றினில் பரப்பி
ஆக்சிஜன் அளவை நித்தம் குறைத்தோம்

பெய்யெனப் பெய்யும் மழை யின்று
பொய்த்து நிற்கும் நிலை தந்தோம்
மெய்யென யாம்கண்ட ஆகாயம் - வெறும்
வெய்யென மாறும் ரணம் உணர்வோம்!

எழுதியவர் : ராஜி அருண் (23-Jul-19, 1:26 pm)
சேர்த்தது : ராஜராஜேஸ்வரி
Tanglish : aakaayam
பார்வை : 324

மேலே