அம்மா

பிறப்பிலிருந்தே உன் நிழலலை தொடர்ந்து உன் கை பிடித்து நடந்து பழகிய நான்,
இன்று பாலகனாய் சாலையின் நடுவே நிலை தடுமாறி தன்னந்தனியாக நின்று தவிக்கிறேன், உன் நிழல் பிம்பம் மறைந்ததால்.

வேடிக்கை பார்க்க ஒரு கணம் திரும்பியபோது, சற்றும் எதிர்பாராமல் நீ வேறு சாலையில் என்னைவிட்டு தனியாக பயணித்ததேன் அம்மா.
நாம் சென்ற சாலையின் ஓரம் இருமருங்கிலும் அங்கும் இங்கும் அலைந்து உன்னை காண ஒரு சிறு குழந்தையாய் தேடி பரிதவிக்கிறேன்.
கானல் நீரையும், கண்ணுக்கு எட்டாத வானத்தையும் கண்டேனே தவிர , உன்னை காணவில்லை.

உன் பச்சிளம் குழந்தை காத்திருக்கிறான் என்று காலனிடம் சொன்னாயா.
நீ கூறியிருப்பாய், உன்னால் எப்படி முடியும் உன் மகனை விட்டுச்செல்ல.
பசிக்கு பாலூட்ட தாயில்லை, அனாதை போன்று உணர்கிறேன் மற்ற சொந்தங்கள் இருந்தும்.
மேகங்களின் நடுவே நின்று கலங்காதே அம்மா ,உன் பிரிவால் என் உயிர் துடித்தாலும் உன் மகன் கோழையல்ல முடங்கி கிடக்க. நீ விட்டு சென்ற பாதையில் தொடர்ந்து பயணிப்பேன் உன் ஆசைப்படி.

வாழ பிடிக்காமல் வாழ்கிறேன், உன்னை என் மகளின் கரு விழியில் காண்பதால்.
உன் நிஜபிம்பம் நான் என்பதை நீ அறிவாய். உன் நிழல் மறைந்தாலும், நீ நிலவின் ஒளியாய் நின்று சிகரத்தை அடைய வழி காட்டுவாய். நீ செய்த அளப்பரிய அர்ப்பணிப்பை என் தாய்த்தழிலில் கூட கூற வார்த்தைகள் இல்லை அம்மா. உன்னுள் உருவான இதயம் என்னுள் துடிக்கும் வரை நீயும் என்னோடு வாழ்வாய் ஒரு உயிராக.

எழுதியவர் : ஸ்ரீதர் மதுரை (26-Jul-19, 7:47 pm)
சேர்த்தது : Sridhar Madurai
Tanglish : amma
பார்வை : 1186

சிறந்த கவிதைகள்

மேலே