சினிமா ஆடும் கூத்து

சேரனின் தயாரிப்பில் டி.வி.சந்திரன் திரைக்கதையில் 2005-ல் உருவாக்கப்பட்டு பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 2008 டிசம்பர் 26-ல் சில தியேட்டர்களில் மட்டும் வெளியிடப்பட்ட, சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற படம் 'ஆடும் கூத்து'.கதையின் கதையாய் கடையநல்லூரில் தலித் பெண்ணைத் தனது பகையின் காரணமாக ஊரார் முன் கட்டி வைத்து தலையை மொட்டையடித்து விடுகிறார் ஒரு ஜமீந்தார். அந்தக் கதையை 1975-ல் படமாய் எடுக்க நினைத்து படமும் எடுக்க ஆரம்பிக்கிறார் புரட்சிகர இயக்குநரான சேரன், படத்தின் நாயகனாய் அவரும் நாயகியாய் நவ்யா நாயரும் ஜமீந்தாராய் பிரகாஷ்ராஜூம் நடிக்கிறார்கள். அந்தப் படம் முழுவதும் எடுக்கப்பட்டதா இல்லையா என்பதை பேசும் படம்தான் என்றாலும் இந்தக் கதைகளைக் கடந்து நிகழ்காலக் கதைக்குள் பயணிக்கிறது 'ஆடும் கூத்து'.கல்லூரி மாணவி மணிமேகலை... அப்பாவை 'அழகிய நம்பியாப் பிள்ளை' எனப் பேர் சொல்லி அழைக்கும் அளவுக்கு வீட்டில் செல்லம். வாழாவெட்டியாய் வீட்டில் அத்தையும்... திருமணமே செய்து கொள்ளாத சித்தி, காது கேட்காத ஆச்சி, திருமணமாகியும் கணவன் பிரச்சினையால் வீட்டில் இருக்கும் அத்தை பெண், தன்னைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் அத்தை பையன் முத்து எனப் பலரும் வீட்டுக்குள்... எல்லாருக்கும் செல்லமாய் மணிமேகலை.மணிமேகலை எதையாவது பார்த்துச் சொல்லும் போது அவள் ஏதோ சொல்கிறாள் என்பதாய் பார்க்கும் குடும்பத்தின் முன் அவள் பைத்தியக்காரியாகவும் தெரிகிறாள். படத்தின் முதல் காட்சியில் ஒரு கொலையைப் பார்த்துச் சொல்கிறாள்... அங்கு சென்றால் கொல்லப்பட்ட தடையமே இல்லை... வீட்டில் திட்டு... இப்படித்தான் நகர்கிறது அவளின் வாழ்க்கை... ஆனாலும் அவள் சொல்வதெல்லாம் எப்படியும் நிகழ்ந்துதானிருக்கிறது என்பதை கொல்லப்பட்டதாய்ச் சொன்னவன் தலையில்லாமல் ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறான்.முத்து ஆன்பாய் ஆசையாய் வாங்கிக் கொடுக்கும் வளையல் பழைய பிலிம் சுருளை உருக்கி உருவாக்கப்பட்டது என்பதை அவளிடம் சொன்ன போது அதைக் கேலி செய்கிறாள். குளக்கரையில் துணி துவைக்கும் போது அந்த வளையலில் இருந்து விரிகிறது கருப்பு வெள்ளையாய் 'ஆடும் கூத்து'... அதில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் நவ்யாவும் சேரனும்... பயந்து வீட்டுக்கு வருபவளுக்கு அன்று அம்மாவின் அணைப்பில் தூங்கத் தோன்றுகிறது.அதன் பின் அவ்வப்போது அந்தக் கதையை விரிக்கிறது வளையல். அவளும் பித்துப் பிடித்தவள் போலாகிறாள். நண்பரின் ஆலோசனைப்படி அவளின் அப்பா மனோதத்துவ மருத்துவரிடம் கொண்டு செல்கிறார். அவரும் அவளுக்கு ஒன்றும் இல்லை திருமணம் செய்து வையுங்கள் என்று சொல்ல, திருமண மண்டபத்தில் மணப்பெண்ணாய் அமர்ந்தவளின் முன்னே விரிகிறது 'ஆடும் கூத்து' படத்தின் மொட்டை அடிக்கும் காட்சி... மணிமேகலை பித்துப் பிடித்தவள் போலாகிறாள்... திருமணம் நிற்கிறது. மருத்துவமனையில் கதை சொல்கிறாள்... மொட்டை அடிக்கப்பட்டது எனக்குத்தான் என்று சொல்லும் போது அப்பா முடிவுக்கு வருகிறார் இவள் முழுப் பைத்தியமென.திருமணம் நின்றதால் ஊரில் மாமாவின் துணிக்கடையிலும் வீட்டிலும் இருக்க விரும்பாத முத்து பத்திரிக்கையில் வேலைக்குச் சேருகிறான். அங்கு பழைய பேப்பர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆடும் கூத்து குறித்த ஒரு செய்தி... மணிமேகலை சொன்னது உண்மைதான் என்பதால் அவளிடம் ஓட. அவளோ அவனையும் இழுத்துக் கொண்டு அந்த ஊரைத் தேடிப் பயணிக்கிறாள்.விபரம் விசாரித்து பிரகாஷ்ராஜைப் பார்த்து கதையைக் கேட்கிறார்கள்... மணிமேகலை பிறந்தது 1985... படம் எடுக்கப்பட்டது பத்தாண்டுக்கு முன்னர்... ஆனால் கதையின் நாயகி மாதிரி ஒருத்தி தன் முன்னே நிற்கிறாளே என்ற வியப்புடன் கதையை விரிக்கிறார் பிரகாஷ்ராஜ்... ஜமீந்தாரின் மகன் பிரச்சினையால் படம் பாதியில் நிற்கிறது. மொட்டையடித்த நாயகின் நிலை என்ன..? இயக்குநர் என்ன ஆனான்..? ஜமீந்தார் மகன் என்ன ஆனான்..? என்பதை எல்லாம் விவரிக்க, அந்தத் தலித் பெண்ணைத் தேடிப் போகிறாள் மணிமேகலை.நின்று போன ஆடும் கூத்தின் முக்கிய கதை நாயகியான தலித் பெண்ணை வைத்து ஒரு சிறு குறும்படமாகத் தயாரித்து அதை வெளியிடுகிறாள். ஜமீந்தார் செய்ததை ஊரறியச் செய்கிறாள்.மணிமேகலையை விரும்புவதாகச் சொல்லிக் கொண்டு வீடு தேடி வரும் அவளின் ஆசிரியர் தேவையில்லாத கதாபாத்திரம்.மணிமேகலை மற்றும் நடிகையாக நவ்யா நாயர்... மிகச் சிறப்பான நடிப்பு. இயக்குநர் ஞானசேகரனாக சேரன், சினிமாவில் ஜமீந்தாராக நடித்த வாத்தியார் பிரகாஷ்ராஜ், ஜமீந்தாரின் மகனாக, பேரனாக சீமான், அப்பாவாக தலைவாசல் விஜய், அம்மாவாக ரேகா, டாக்டராக ஜெகதி (நடிப்பு செம ரகளை), ஆச்சியாக சுகுமாரி, அத்தை பையனாக ஆரி, அத்தை பெண்ணின் குடிகார கணவனாக பாண்டியராஜன், தலித் பெண்ணாக மனோரம்மா என எல்லாருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவு மது அம்பாட், இசை இசாக் தாமஸ் கொட்டுக்காப்பள்ளி இருவரும் மிகச் சிறப்பாக தங்களது வேலையைச் செய்திருக்கிறார்கள்.பலர் பார்த்திருக்கலாம்... பார்க்காதவர்கள் பாருங்கள்... ஆடும் கூத்து அசர வைக்கும். இப்படியான படங்களை இயக்கியும் தயாரித்தும் தமிழ்ச் சினிமாவில் கோலோச்சிய சேரன், வாழ்வியல் சிக்கலால் பிக்பாஸ் வீட்டுக்குள் கேவலப்பட்டுக் கேவிக்கேவி அழுவதைக் காணும் போது சிக்கல்கள் மனிதரைச் சின்னாபின்னம் ஆக்குவதைக் கண்டு கஷ்டமாகத்தான் இருக்கிறது. நாமும் அப்படித்தானே நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (28-Jul-19, 10:22 am)
சேர்த்தது : சே.குமார்
Tanglish : sinimaa adum koothu
பார்வை : 60

மேலே