நிலா காயும் இரவினிலே - 8
பாகம் - 8 :
வெண்பனி மலர்கள் புன்னகை செய்ய, தேன் உண்ணும் வண்டுகள் ரீங்காரமிட, தென்றலோ?... இந்த அழகைத் தழுவிச்செல்ல பொழுது புலர்ந்தது. எல்லாம் வந்தாச்சா, கிளம்புவோமா?... என்றாள் கல்யாணி. அப்பா... நீங்களும் அம்மாவும் அந்த வண்டியிலே போங்க, இவங்க மூணு பேரும் இதுல வரட்டும், நானும் கேசவனும் ஜீப்ல வந்துடுறோம் என்றான் முகில். ம்... அப்பா அவங்க எல்லாம் போயிட்டாங்களா?... இப்பதான் போனங்க என்று அரவிந்தனுக்குப் பதில் சொன்னார் ராசேந்திரன். சரி வாங்க நாம போவோம் என்று அரவிந்தனின் அம்மாவும் அப்பாவும் புறப்பட்டனர். வீட்டை விட்டு மூன்று வண்டிகளும் ஒன்றன் பின் ஒன்றாகப் புறப்பட்டது. கிட்டதட்ட ஒரு முப்பது நிமிட பயணத்திற்குப் பின் மண்டபத்தை அடைந்தனர்.
அந்த ஆரங்குடி ஊருலயே வசதியான பெரிய மண்டபம் சுமங்கலி திருமண மண்டபந்தான். மண்டப வாயிலின் இரு பக்கத்திலும் குலை தள்ளி பூவுடன் கூடிய வாழை மரம் கட்டியிருக்க... உள்ளே நுழைந்தது இவர்களின் வாகனம். கல்யாணியும் ராசேந்திரனும் இறங்கி மண்டபத்தின் உள்ளே நுழைகையில், கண்மணியும் ரவிங்கரும் வரவேற்றனர். எங்க... மாப்பிளையைக் காணோம் என்று ரவிசங்கர் கேட்க, வெளியில நண்பர்களோட பேசிக்கிட்டு இருக்கான் அண்ணா என்றாள் கல்யாணி. சொந்தப் பந்தங்கள் ஒவ்வொருவராய் வந்து கொண்டிருக்க நான்கு பேரும் வரவேற்று அமர வைத்தனர்.
வண்ண வண்ணப் பூமாலை தோரணங்களும் ஊதும்பைகளும்(பலூன்) மண்டபத்தின் அழகை மேலும் அழகாக மாற்றி இருந்தது. ஒரு பக்கம் மேள தாளங்களோடு நாயணம் வாசிக்க, இந்தப் பக்கம் வந்திருந்த சொந்தப் பந்தங்கள் அன்பினைப் பரிமாறி கொண்டிருந்தனர். மணமேடையின் அலங்காரம் வசீகரத் தோற்றத்தைத் தந்து கொண்டிருந்தது. அழகான புல்வெளிகளும் பூஞ்செடிகளும் மண்டபத்தின் வெளிபுறத்தில் தங்கள் பங்குக்கு அழகை அள்ளித் தர அந்த இடமே சோலையாக காட்சி தந்து. வேட்டிச் சட்டனாலே தனிக் கம்பீரம் தாண்டா என்று கேசவன் சொல்ல..., "தமிழோனாட அடையாளம் என்னைக்கும் கம்பீரமா தாண்டா இருக்கும்" என்றான் முகில். சரி வாங்கடா உள்ளே போவோம்..., டேய் மாப்புள அவசரப் படுறான் வாங்கடா போவோம் என்றான் முகில்.
உள்ளே நுழைந்ததும்... அப்பா என்றான் முகில். நீ எப்பப்பா வந்த முகில் என்றார் ரவிசங்கர். ராத்திரி தான்..ப்பா வந்தேன் என்றான். அம்மா எங்கப்பா... அந்தா
அங்க நிக்கிறா பாரு என்று கைநீட்டினார். அம்மா... எப்படி இருக்கீங்க..., சட்டெனத் திரும்பிய கண்மணி, அட முகில்
என்று நலம் விசாரித்தாள். மற்ற நண்பர்கள் மணமகன் அறைக்குள் நுழைந்தனர். சற்று நேரத்தில் முகிலும் வந்து சேர்ந்தான். முகூர்த்த நேரம் நெருங்க நெருங்க ... மணமேடையில் பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருந்தது.
என்னடா இந்த வேட்டி இடுப்புல நிக்கவே மாட்டங்குது என்று அரவிந்தன் கேட்க, பட்டு வேட்டிச் சட்டனா அப்படித் தாண்டா இருக்கும் என்றான் முகில். அருணாக் கயிற மேல எடுத்துப் போட்டுக்கடா என்றான் தேவா. நம்மாளுங்க சும்மாவா சொன்னாங்க..., எல்லாம் ஒரு காரணத்தோட தாண்டா வச்சிருக்காங்க என்று சொன்னான் கேசவன். பக்கத்து அறையில் பூவுக்குப் பூக்கள் அலங்காரம் சிறப்பாகச் செய்து கொண்டிருக்க நேரமும் நெருங்கியது.
பழக்கடைகளும் பலகாரக் கடைகளும் தாம்பாளங்களில் நிறைந்து இருந்தது. பெண்களின் கூந்தலில் பூக்கள் குடியேறி கொண்டிருந்தது. மாப்புளைய வரச் சொல்லுங்க என்று அய்யரின் குரல் ஒலித்ததும் கதவைத் தட்டினார் ராசேந்திரன். கேசவன் கதவைத் திறந்ததும்... அவனை அழைச்சிக்கிட்டு வாங்கப்பா என்று சொல்லிச் சென்றார். பட்டு வேட்டிச் சட்டையும் தோளில் பட்டுத் துண்டோடும் மணமேடையை நோக்கி மணமகன் வந்து அமர்ந்தான். பின்னால் நண்பர்கள் நின்றிருந்தனர். அடுத்த சில நிமிடத்தில் பொண்ண கூப்புடுங்க என்று அய்யர் சொன்னதும்... கதவைத் தட்டினாள் கண்மணி. அமுதா கதவை லேசாகத் திறந்தாள். என்னம்மா அலங்காரம் எல்லாம் முடிஞ்சிடுச்சா... இல்லம்மா ஒரு அஞ்சு நிமிசத்துல வந்துடுறோம் என்றாள். சீக்கிரம் வாங்கம்மா என்று சொல்லிச் சொன்றாள்.
ஒரு அஞ்சு நிமிசம்... பொண்ணு வந்திடும் என்று சொல்லி அடுத்த வேலைகளைப் பார்த்தாள். இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் என்று கேசவன் முடிப்பதற்குள் டேய் வாயை மூடுடா என்று மெதுவாய் சொல்லி குறுக்கிட்டான். பொண்ண அழைச்சிட்டு வாங்கப்பா... மாப்புள ரொம்ப அவசரப் படுறான் என்று மணி சொல்ல, அந்த இடத்தில் புன்னகை பொங்கி வழிந்தது. மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்... என்ற பாடலுக்கு ஏற்ப கதவைத் திறந்து மணமகள் நடந்து வந்து அமர்ந்தாள். பட்டுப் புடவையில் பட்டாம் பூச்சிகளாய் பின்னால் தோழிகளும் வந்து நின்றனர். அந்த நொடியில் பார்க்காத அழகு ஒன்றைப் பார்ப்பது போல் முகில் மற்றும் ஏஞ்சலின் கண் பார்வை மோதி நின்றது...
தொடரும்...