இனிய நினைவுகள் இன்பம் கனிய வளர்ந்து கதிக்கும் - நினைவு, தருமதீபிகை 374
நேரிசை வெண்பா
இனிய நினைவுகள் இன்னமிர்தாய் இன்பம்
கனிய வளர்ந்து கதிக்கும் - துனியான
தீய நினைவுகள் தீவிடமாய் ஓங்கியே
மாய வருத்தும் மதி. 374
- நினைவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
நல்ல எண்ணங்கள் இனிய அமிர்தமாய்ப் பெருகி இன்பம் தருகின்றன; தீய நினைவுகள் கொடிய விடமாய் விரிந்து குடிகேடு புரிகின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.
புனிதமான எண்ணங்களை இனிய நினைவுகள் என்றது. எவ்வுயிர்க்கும் இன்னாமை இல்லாத சிந்தனைகளே இனிய நினைவுகளாம்.
உண்ணும் உணவு உடலை வளர்ப்பது போல் எண்ணும் எண்ணங்கள் உயிரை வளர்க்கின்றன. சத்து இல்லாத புல்லிய உணவுகளைப் போல், புன்மையான நினைவுகள் நன்மை யாதும் பயவாமல் வறிதே இழிந்து படுகின்றன.
அறிவும் அன்பும் மருவி எழும் நினைவுகளே பெருமையும் இன்பமும் சுரந்து பெருகி வருகின்றன. மதிநலம் கனிந்த அளவே நினைவு அதிசய மகிமையை அடைகின்றது.
உணர்வையும் உயிரையும் ஒளி மிகச் செய்து உறுதி புரிந்து வரும் உரிமை கருதி இனிய நினைவை அமிர்து என்றது.
அமுதம் உண்டவன் அறிவும் ஆண்மையும் ஆயுள் வளர்ச்சியும் அடைகின்றான்; அவ்வண்ணமே இனிய எண்ணம் உடையவனும் அரிய பல உறுதி நலங்களை எளிதே பெறுகின்றான்.
நினைவு சீவ ஊற்று; அது இனிமை சுரந்து வரின் மனிதன் மகானாய் மகிமை மிகுகின்றான். நல்ல சிந்தனைகளையே நாளும் பழகி வருகின்றவன் நல்லவன் ஆகின்றான்; ஆகவே எல்லா இன்ப நலங்களும் அவனுக்குத் தனி உரிமைகளாய் இனிது அமைகின்றன.
இனியவன், நல்லவன், பெரியவன் என்பன இனிமை, நன்மை, பெருமை என்னும் குண நீர்மைகளால் அமைந்தன.
இதமான நினைவுகளால் இதயம் உயர்ந்து, உயர் பரமனுக்கு அது தனி நிலையம் ஆகின்றது. நல்ல நீர்மைகளால் தூய்மை அடைந்த உள்ளம் தெய்வத் தன்மையை எய்துகின்றமையால் உய்தி கண்டு உயர் இன்பங்களை நுகர்கின்றது.
ஒருவன் உள்ளம் நல்லதாய் உயரின் எல்லா உயிர்களும் அவனைத் திசை நோக்கித் தொழுகின்றன.
A man in the view of absolute goodness adores with total humanity. - Emerson
நல்ல எண்ணமுடையவனை மனித சமுதாயம் தானாகவே தொழுது வணங்குகிறது” என எமர்சன் உரைத்திருக்கிறார்.
கல்வி, அறிவு முதலிய எல்லா நலங்களும் நல்ல எண்ணத்தால் ஒளி மிகப் பெறுகின்றன. எண்ணத்தின் நன்மையளவே, அவை சீரும் சிறப்பும் பெற்று மனிதனுக்குப் பேரும் புகழும் தருகின்றன.
நேரிசை வெண்பா
எண்ணம் இழிவாயின் எத்துணைநூல் கற்றாலும்
அண்ணல் அருளை அவனடையான் – எண்ணம்
புனிதமெனின் அந்தப் புண்ணியனைத் தெய்வம்
மனமுவந்து கொள்ளும் மகிழ்ந்து.
’நினைவு பழுதாயின் விழுமிய கல்வியும் இழிவாம்’ என்றமையால் அதன் உய்தி நிலையும் உறுதி நலனும் தெளிவாய் நின்றன.
இனிய நினைவு அமிர்தமாய் வளர்ந்து எங்கும் இன்பம் அருள்கின்றது; இன்னாதது எந்நாளும் துன்பமே புரிகின்றது.
யாண்டும் அழி துயரங்களேயே விளைத்து வருதல் கருதி தீய நினைவுகளைத் தீ,விடம் என்றது.
உயர் நிலைகள் எல்லாம் தூய உள்ளத்திலிருந்து உளவாகின்றன; தூய்மை தோய்ந்துள்ள அளவே பான்மை படிந்து அது மேன்மை மிகுந்து விளங்குகின்றது. அதில் தீய நினைவு படின் பாங்கு சிதைந்து தீங்காய் மாறுகின்றது. உள்ளம் கெடவே எல்லா நலங்களும் ஒருங்கே ஒழிந்து போகின்றன. தூய நினைவுடையவன் தூயனாய் உயர்கின்றான்; தீய எண்ணம் உடையவன் தீயனாய் இழிகின்றான்.
நெருப்பு பட்ட இடத்தைச் சுடும்; விடம் குடித்தவனைக் கொல்லும், கெட்ட எண்ணம் தன்னை எண்ணினவனை அடியோடு கெடுத்து விடும்; அவன் செத்தாலும் விடாமல் பிறவிதோறும் வாசனையாய்ப் புகுந்து அவனை நீசன் ஆக்கி நாசப் படுத்தும்.
பொல்லாத எண்ணங்களை எண்ணுகின்றவன் தனது உள்ளக் கமலத்தில் தீமூட்டி உயிர்க்கு விடத்தை ஊட்டினவன் ஆகின்றான்,
ஒருமுறை பழகிய தீய வாசனை உயிரை விடாது பிடிக்கும். இதனை யோசனை செய்து உன் உள்ளத்தைப் பேணுக.
அன்பு, தயை முதலிய கனிவான இனிய நினைவுகளையே என்றும் நினை; அவை அமுதவாரியாய் ஆனந்தம் விளைக்கும். கொடிய நினைவு குடிகேடு செய்யும்; அதனைக் கனவிலும் கருதாதே என்கிறார் கவிராஜ பண்டிதர்.