ஓர்ந்துயிர்க்கு அன்புசெயின் ஏம்பல் உறுவாய் இனிது - நேயம், தருமதீபிகை 365

நேரிசை வெண்பா

மானிடனாய் வந்திருந்தும் மானிடனைப் போற்றியருள்
ஆன நலனை அடையாமல் - ஊனுடலை
ஓம்பி உழல்கின்றாய் ஓர்ந்துயிர்க்(கு) அன்புசெயின்
ஏம்பல் உறுவாய் இனிது. 365

- நேயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உயர்ந்த மனிதனாய் உதித்திருந்தும் கடவுளை உவந்து போற்றிச் சிறந்த நலனை அடையாமல் தேகத்தையே பேணி மோகம் மிகுந்து உழலுதல் மோசமான நாசம் ஆகும்; உன் நிலைமையை ஓர்ந்து உயிர்களுக்கு அன்பு செய்து உயர்ந்த பயனை விரைந்து பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனித சன்மம் பலவகையிலும் உயர் நலமுடையது. உலகில் தோன்றியுள்ள எந்தப் பிராணிகளையும் அடக்கி ஆள வல்லது: தான் கருதியதைப் பிறர்க்குத் தெளிவாக உணர்த்தவும், பிறர் கருத்துக்களை எளிதாக உணர்ந்து கொள்ளவும் இசைந்தது; தன்னையும் தலைவனையும் நுண்ணிதாக எண்ணி நோக்கிக் கண்ணிய கதி நலம் காணத் தக்கது. புண்ணியம் அமைந்தது;

இத்தகைய நீர்மையும் சீர்மையும் வேறு பிறவிகளில் யாவும் அமையா. அவ்வாறான ஊன சன்மங்களையெல்லாம் ஒருவி உயர்ந்த ஞான சென்மத்தைப் பெற்றிருக்கின்றோம்; இங்ஙனம் பெற்றிருந்தும் இந்த அருமையான உடம்பின் பயனை விரைந்து பெறாமல் மறந்திருப்பது பிறந்த பயனை இழந்திருப்பதேயாம்.

’மானிடனாய் வந்திருந்தும்’ என்றது இந்த வரவு நிலையின் அருமை பெருமைகளைச் சிந்தனை செய்து கொள்ள வந்தது.

கான விலங்குகளாய் ஈனமான உடல்களில் இழிந்து உழலாமல் ஞானம் அடையவுரிய நல்ல மானிட தேகம் பெற்று வந்துள்ளாய்! இதன் பயனை ஒல்லையில் அடைந்து கொள்க என இது உணர்த்தி நின்றது. வீண் நாள் கழியாமல் மேல்நிலை காண வேண்டும்.

சிறந்த இந்த ஞானப் பிறவிக்குத் தகுந்த பயன் யாதெனின், உயர்ந்த பரம்பொருளை உரிமையாக மருவிக் கொள்வதேயாம். என்றும் யாதும் அழிவில்லாத ஆனந்த நிலையமாதலால் அதனைத் தோய்ந்து மகிழ்வதே ஏய்ந்த பிறவிக்கு வாய்த்த பயனாம்; உரியதை உறாதொழியின் ஊனம் அடையும்.

இறைவனுக்கு உருவும் பெயரும் இல்லையாயினும் நம் அறிவு அறிந்து வழிபடச் சில உருவ நாமங்களை மருவி அருளுடன் ஒளிர்கின்றான். நிலைகள் பலவும் கலைஞானங்களாய் வந்தன.

இங்கே சிவபெருமானை மானிடன் என்றது. மானை இடது கையில் தாங்கியிருப்பவன் என்பது பொருள். மான் இடன் மானிடன் என வந்தது. மாய முனிவர் ஏவிய மாயமானைத் தன் கையில் நிறுத்தி என்றும் மாயாத மானாக அதனைக் காட்டியருளினான். மழு, துடி, புலித்தோல் முதலிய சிவ சின்னங்களெல்லாம் பரமனது அருளாடல்களை விளக்கியுள்ளன. இறைவன் கையில் ஏறியுள்ள மான் கவிஞர் மனத்திலேறிக் களிப்பை விளைத்துள்ளது.

கலிநிலைத் துறை
(காய் 5)

ஒருமானைக் கரத்தினில்வைத்(து) ஒருமானைச் சிரத்தினில்வைத்(து) உலகமேழும்
தருமானை இடத்தினில்வைத்(து) அருள்வானைப். பவளநெடும் சயிலம்போல்
வருமானை முகத்தானை அளித்தானைப், பெருமானை மகிழவேறும்
பெருமானை அருணகிரிப் பெம்மானை அடிபணிந்து பிறவிதீர்ப்பாம். 8 - அருணாசல புராணம்

கட்டளைக் கலித்துறை

மான்எழுந் தாடும் கரத்தோய்நின் சாந்த மனத்தி’ல்’சினம்
தான்எழுந் தாலும் எழுகவென் றேஎன் தளர்வையெல்லாம்
ஊன்எழுந் தார்க்கநின் பால்உரைப் பேனன்றி, ஊர்க்குரைக்க
நான்எழுந் தாலுமென் நாவெழு மோமொழி நல்கிடவே. - அருட்பா

கட்டளைக் கலித்துறை
குறிவழிச் சேறல்

காவியு மாம்பலும் பூத்தசெந் தாமரை கண்டளிகள்
வாவியு ஓடையும் விட்டெய்த வேபொழில் வாய்நிற்குமோ
தேவியும் மானும் விளையா(டு) இடத்தர் திருவெங்கையில்
ஆவியும் ஆர முதும்போன்(று) இறைகண்ட ஆயிழையே. 54

- திருவெங்கைக் கோவை, சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!

2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

நகந்த ருங்கொடி கண்களை நாணியே
முகந்தி ரும்பு முறையில் திரும்புமான்
மகிழ்ந்தி டங்கதிர் வீர மழுவலந்
தகுந்த குந்தகு மென்று தயங்குற. 13 கைலாச கதி, பிரபுலிங்க லீலை

மான் ஓடு மருவிச் சிவனை இவ்வாறு.பரவி யிருக்கின்றனர். கண்ணழகில் சிறந்த மான் உமாதேவியின் கண்களைக் கண்டு நாணியது போல முகம்.திரும்பி நின்றது; அதனை நோக்கி மழு மகிழ்ந்து 'தகும் தகும்’ என்று வியந்து கொண்டது எனக் கவி புனைந்து கூறியுள்ள அழகை நோக்குக. நகம் - மலை. பருவதாசன் பெற்ற பார்வதியை நகம் தரும் கொடி என்றது.

மானிட னாய வடிவுகொண் டருளாது
மானிட னாய வடிவுகொண் டருளி. 14 பண்டார மும்மணிக் கோவை

மானை இடப் பக்கம் கொண்ட கோலம் விடுத்து மனித உருவில் குருவாய் வந்து எனப் பரமன் அருளின பான்மையை இது குறித்துள்ளது.

அரிய பிறவிக்கு உரிய பயனை உரிமையுடன் உணர்ந்து கொள்ள மானிடனாய் வந்தது மானிடனை நினைந்துய்யவே என்றது.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

மானுடப் பிறவி தானும்
..வகுத்தது மனவாக் காயம்
ஆனிடத்(து) ஐந்தும் ஆடும்
..அரன்பணிக் காக அன்றோ?
வானிடத் தவரும் மண்மேல்
..வந்தரன் தனைஅர்ச் சிப்பர்;
ஊனெடுத்(து) உழலும் ஊமர்
..ஒன்றையும் உணரார்.அந்தோ! 1

கருவினுள் அழிவ தாயும்,
..கழிந்திடா(து) அழிவ தாயும்,
பரிணமித்(து) அழிவ தாயும்,
..பாலனாய் அழிவ தாயும்,
தருணனாய் அழிவ தாயும்,
..தான்நரைத்(து) அழிவ தாயும்,
உருவமே அழிவே யானால்
..உள்ளபோ தே,பார் உய்ய. 2 சிவஞான சித்தியார்

உய்தி நிலையை உரிமையுடன் உணர்த்தியுள்ள இதன் கருத்துக்களைக் கருதி ஆராய்ந்து உறுதி நலனை ஓர்ந்து கொள்ள வேண்டும். காலம் உள்ளபொழுதே உய்க என்றது உணரவுரியது.

அரிய வாழ்நாளைப் பாழாய்க் கழியாமல் உரியபயனை விரைவில் அடைபவர் பெரிய திருவாளராகின்றார்.

ஊன் உடலை ஓம்பி உழல்கின்றாய்! என்றது உயிர்க்கு உறுதி நலனை ஓர்ந்து கொள்ளாமல் உடலைக் கொழுக்க வைத்துத் திரிகின்றாய்! இறுதியில் உன் கதி என்ன? சுடலைத் தீக்கோ, அடலை மண்ணுக்கோ இரையாய் ஒழிந்து போவதோடு கழிந்து போகவோ நீ பிறந்து வந்தாய்? உன் உயிரின் நிலைமையைச் சிறிது கருதிப்பார் என நினைவு கூற உணர்த்திய வாறாம்.

தன் உயிருக்கு இன்பத்தை நாடுகின்றவன் இன்ப வடிவமான இறைவனை எண்ணி உருகுவதையும், பிற வுயிர்களுக்கு இதம் செய்வதையும் கடமையாகக் கைக்கொள்ளுகின்றான்.

கடவுள் எல்லார்க்கும் பொதுவாய் எங்கும் நிறைந்திருந்தாலும் அன்புடையவரிடம் அருள் புரிந்து திகழ்கின்றான்.

’குழந்தையும் தெய்வமும் கொண்டனைத்த இடம்’ என்பது பழமொழி. மனிதன் உள்ளம் உருகி நினைந்த பொழுது பரமன் உரிமையுடன் அவனைத் தழுவிக் கொள்கின்றான். இவன் அன்பு செய்ய அவன் அருள் பொழிகின்றான்.

அமரர் முதல் எவருக்கும் அரியனாயினும் அன்பருக்கு மிகவும் எளியனாய் இறைவன் அமர்கின்றான்.

அன்பருக்கு அன்பனே எனப் பரமபதிக்கு மாணிக்கவாசகர் இவ்வாறு உயர்வான ஒரு பெயர் சூட்டி இருக்கிறார்.

உயிர்க்கு அன்பு செய்; ஏம்பல் உறுவாய்! என்றது சீவ கோடிகளுக்கு இரங்கி இதம் செய்; சிவனருளை அடைந்து நீ உயர் பேரின்பம் நுகர்வாய் என ஆன்ம போகத்தின் பான்மை தெரிய வந்தது.

ஏம்பல் - ஆதரவு, மகிழ்ச்சி. இனிய செயல் இன்ப நிலையமாகின்றது.

தெய்வ சிந்தனையும் சீவ தயையும் உய்வகை உதவி உயிர்க்கு உயர் நலம் அருளுகின்றன; அவற்றைக் கைதழுவி ஒழுகிக் கதி நிலை காணுவதே மெய் தழுவி வந்த மெய்ப் பயனாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jul-19, 2:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே