பழவினை - கலி விருத்தம் - வளையாபதி 46
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
’ய்’ ஆசிடையிட்ட எதுகை
உ'ய்'த்தொன்றி யேர்தந் துழவுழு(து) ஆற்றவும்
வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்னொக்கும்
மெ’ய்’த்தவம் இல்லான் பொருளொடு போகங்கட்(கு)
எ’ய்’த்துழந் தேதா னிடர்ப்படு மாறே. 46 வளையாபதி
பொருளுரை:
முற்பிறப்பிலே செய்த வாய்மையான தவத்தினை இல்லாதவன்
செல்வம் பெறுதற்கும் அவற்றானின்பம் நுகருதற்கும் பெரிதும் முயன்று இளைத்து துன்புறும்வகை எதனை ஒக்கும் என்னின்,
முற்படச் சேர்த்துக் கொள்ளற்கியன்ற விதை சிறிதுமில்லாமலே
உழவெருது கலப்பை முதலிய கருவிகளைக் கொணர்ந்து உழவுத் தொழிலிலே பொருத்தி எருதுகளைச் செலுத்தி மிகவும் ஆழமாக உழுது
பசிய பயிரை விளைக்க முயல்வதனையே ஒக்கும் என்பதாம்.
விளக்கம்:
பொருளும் போகமும் முற்செய் தவமுடையார்க்கே ஆகும். அத்தவமில்லாதார் அவற்றைப் பெற முயல்வது வீணாம். எனவே, வீடு பெறுதற்கன்றி இம்மை வாழ்விற்கும் தவமே காரணம் ஆகும். ஆகவே எல்லோரும் தவவொழுக்கம் மேற்கொள்ளல் வேண்டும் என்றாராயிற்று.