தண்ணளி பேணித் தயவு புரிந்துவரின் கண்ணொளி யாகும் கதி - நினைவு, தருமதீபிகை 377

நேரிசை வெண்பா

நினைவின் அளவே நிலையாம்; இதனை
நினைவில் நிதமும் நினைந்தே - எனைவழியும்
தண்ணளி பேணித் தயவு புரிந்துவரின்
கண்ணொளி யாகும் கதி. 377

- நினைவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தனது நினைவின் அளவே மனிதன் நிலைமை அமைகின்றது; இந்த உண்மையை நாளும் உணர்ந்து எவ்வழியும் நன்மையே பேணி எவ்வுயிர்க்கும் இதம் புரிந்து வரின் திவ்விய பேரின்ப நிலை வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நினைப்பது, சிந்திப்பது, அறிவது, ஆராய்வது, உணர்வது, தெளிவது என்னும் வினை நிலைகளால் மனத்தின் இயல்புகள் வெளிப்படுகின்றன. எண்ணி அறிவதாலும், அந்த அறிவின் கண்ணிய நிலையாலும் மனிதன் மாட்சிமை அடைந்து வருகிறான்.

நினைந்து நோக்கும் ஆற்றல் இன்மையால் யானை, குதிரை, மாடு முதலிய மிருகங்கள் மாக்கள் என நின்றன. ஊன்றி நினைக்கும் உரனுடைமையால் மாக்களிலும் சிறந்தவராய் மக்கள் உயர்ந்தனர். உயர்வெல்லாம் அறிவமைதியால் வாய்ந்தன.

மாவும் மாக்களும் ஐயறி வினவே:
மக்கள் தாமே ஆறறி வுயிரே. - தொல்காப்பியம்

என ஆசிரியர் தொல்காப்பியனர் இவ்வாறு இயல் வகுத்துள்ளார். கண், மூக்கு முதலிய பொறிகளால் மட்டும் அறிவது ஐயறிவு என்றது. ஐம்பொறிகளோடு மன உணர்வும் வாய்ந்திருத்தலால் மக்களை ஆறறிவுயிர் என்றார். இந்த ஆறறிவின் உள்ளும் கூரறிவு, சீரறிவு, பேரறிவுகள் நேரளவி உள்ளன. கல்விப் பயிற்சியாலும் நல்வினை முதிர்ச்சியாலும் அறிவு ஒளியும் தெளிவும் பெற்று உயர்கின்றது. இனிய நினைவோடு தோய்ந்த அறிவு தனி மகிமை வாய்ந்து தலைமையாய் மிளிர்கின்றது.

தன் உள்ளத்திலிருந்து தோன்றுகின்ற எண்ணங்களின் வண்ணங்களாகவே மனிதர் மருவி வருதல் கருதி நினைவின் அளவே நிலை என்றது. நினைவு உயர நிலை உயர்கின்றது.

தான் பிறந்த இடம், பயின்ற கல்வி, சேர்ந்த இனம், தோய்ந்த நிலை, வாய்ந்த வகை முதலிய வசதிகளைத் தழுவியே மனிதனுடைய செயலும் இயலும் அயலறிய வருகின்றன. புறநிலை இவ்வாறு பொதுவாகப் பொருந்தி நிற்பினும் அக நிலை வேறாயமைந்து நிற்கின்றது. நெடுங்காலமாகப் பழகி வந்த வாசனைகள் மனத்தில் சூக்குமமாய் ஒடுங்கி யிருத்தலால் நினைப்பில் அந்த இயற்கை மணங்கள் வீசிச் செயற்கைகளாய் விளங்குகின்றன.

சொல்லுக்கும், செயலுக்கும் நினைவு மூலமாயிருத்தலால் யாவும் அதன்படி மேவி விரிகின்றன. தனது தகுதிக்குத் தக்கவாறே எவனும் நினைக்க நேர்கின்றான்; பழக்க வாசனைகளின்படியே நினைவுகள் பழுத்து வருகின்றன.

நினைவு நல்லதாய் உயரின் மனிதன் நல்லவனாய் உயர்ந்து எல்லையில்லாத பெருமைகளை அடைகின்றான்.

நல்ல நினைவு கற்பக தருவும், காம தேனுவும், அமுதமும் போல் அற்புத நலங்களை நல்கி ஆனந்தம் அருளி வருகின்றது. பழுதுபடாதபடி தனது நினைவை இனிது பாதுகாத்து வருபவன் விழுமிய பயனை விரைந்து பெறுகின்றான்.

எதனை அடைய ஒருவன் எண்ணுகின்றானோ, அது அவனை வந்து அடைகின்றது. எண்ணத்துக்குப் பெருமை எல்லாம் தீமை யாதும் சேராத திண்மையேயாம்.

முனிவன், யோகி, ஞானி என முதன்மை பெற்று வருபவர் எவரும் புனித எண்ணத்தினாலேயே தனி உயர்ந்துள்ளார்.

மனிதன் எதையும் அடைய உரியவன்; அவன் அடைய முடியாத அரிய பொருள் யாதும் இல்லை. தான் கருதியதைக் கருதியபடியே ஒருவன் பெறுவது புண்ணியத்தினால் அமைவது; அந்தப் புண்ணியம் நல்ல எண்ணத்தினால் விளைவது; ஆகவே எல்லா இன்பப் பேறுகளுக்கும் எண்ணமே காரணமாயுள்ளது.

தண்ணளியும் தயவும் கதியைக் கண் ஒளியாய்க் காட்டும் என்றது அருள் ஒழுக்கத்தின் பொருள் உணர வந்தது. எவ்வுயிர்க்கும் இரங்கி இதம் புரியும் இயல்பு தயவு என நேர்ந்தது. இது தெய்வ குணம். கடவுளுக்கு தயாநிதி என்று பெயர். தயையுடைய நெஞ்சில் எவ்வழியும் கனிவான இனிய எண்ணமே இதமாய் எழும்; அந்த எண்ணம் புண்ணிய விளைவாய்ப் பொங்கி வருதலால் கதி மோட்சம் அதற்குத்தனி உரிமையாயது. நினைவு கொடுமை ஆயின் நெடிய துயரமாம்; கருணை கனியின் கதியின்பமாம். உறுதி நலம் கருதி உண்மை தெளிந்து உய்தி உறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Aug-19, 5:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 86

சிறந்த கட்டுரைகள்

மேலே