நேயமுன் வீட்டளவில் நில்லாமல் விரியின் ஊட்டளவில் இன்பம் - நேயம், தருமதீபிகை 367
நேரிசை வெண்பா
தாய்தந்தை மக்கள் தமர்தாரம் என்றிவர்பால்
நேயம் புரிந்து நிலவுகின்றாய் - நேயமுன்
வீட்டளவில் நில்லாமல் மேதினியெல் லாம்விரியின்
ஊட்டளவில் இன்பம் உனக்கு. 367
- நேயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
தாய், தந்தை, மனைவி, மக்கள், ஒக்கல் என்னும் இவர்பால் இயல்பாகவே அன்பு புரிந்து வருகின்றாய்; இந்த அன்பு உன் வீட்டளவில் நில்லாமல் உலகம் எல்லாம் பரவினால் அளவில்லாத பேரின்பம் உனக்கு உண்டாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
ஊட்டு என்றது இன்ப விருந்தைக் காட்டி நின்றது. யான், எனது என்னும் முனைப்பும் நினைப்பும் மனிதனிடம் இயல்பாக அமைந்துள்ளன. ’நான் சம்பாதித்தேன்; இது என்னுடைய பொருள்' என்று தன்னைக் குறித்தும் தனது உடைமைகளைக் குறித்தும் பெருமையும் உரிமையும் யாண்டும் கொண்டாடி நிற்கின்றான். அபிமானமாகிய இந்தப் பாச உணர்ச்சிகளே வாழ்க்கையின் வளர்ச்சிகளுக்கு மூல காரணங்களாய்த் தழைத்திருக்கின்றன. தன்னைச் சார்ந்த பொருள்களிடம் இயல்பாகவே மனிதன் அன்பு செலுத்தி வருகிறான். உள்ளத்தின் பிரிய வடிவமான பாச நேசங்கள் பிள்ளைகள் மீதும் மனைவியிடத்தும் பெற்றோரிடமும் பெருகி நிற்கின்றன.
கடவுளை நினைந்து துதிக்கும் பொழுதும் தந்தையே! தாயே! எனச் சிந்தை கனிந்து பாடி வருதலால் இந்த உரிமைப் பொருள்களிடம் மனிதன் தோய்ந்திருக்கும் அன்பும் அருமையும் அறிய வருகின்றன. உள்ளப் பாசங்கள் உயிர் நேசங்கள் ஆகின்றன.
பெற்ற தொடர்பும், உற்ற உரிமையும் பெருகியிருத்தலால் தாய், தந்தை, மனைவி மக்கள் மேல் இயற்கையாகவே எவரும் உரிமையுடன் அன்பு செலுத்தி வருகின்றார்.
பிறப்புரிமையில் இயல்பாக அமைந்தமையால் இந்த அன்பு இயற்கை என வந்தது. வேறு அயலான பொருள்கள் மேல் உரிமை கொண்டபொழுது அந்த ஆர்வ நிலையை அளந்து காட்டத் தலைமையான இந்த அன்பையே உவமை கூற நேர்கின்றார். சகாதேவனைக் கண்ணன் ஒரு முறை நோக்கி, ’உன் உள்ளத்தில் மிகவும் உரிமையாக நேசித்துள்ள உண்மை என்ன?’ என்று கேட்டான். இந்தக் கேள்விக்கு அவன் சொன்ன பதில் அயலே வருவது,
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
ஒருமொழி யன்னை வரம்பிலா ஞானம்
..உற்பவ காரணன்; என்றும்,
தருமமே துணைவன்; கருணையே தோழன்;
..சாந்தமே நலனுறு தாரம்,
அரியதிண் பொறையே மைந்தன்;மற் றிந்த
..அறுவரும் அல்லதார் உறவென்(று),
இருவரில் இளையோன் மொழிந்தனன் தன்பேர்
..இதயமா மலர்க்கிடை யெடுத்தே. - 20 பழம்பொருந்து சருக்கம், இரண்டாம் பாகம், பாரதம்
சத்தியம், ஞானம், தருமம், கருணை, சாந்தம், பொறுமை என்னும் இக்குண நலங்களே தனக்குத் தாய், தந்தை, தம்பி, தோழன், மனைவி, மைந்தன் என அந்த மதிமான் இங்ஙனம் கூறியிருக்கிறான்
உயிர்க்கு உறுதித் துணைகளாகத் தான் கருதிக் கைக்கொண்டுள்ளமையைத் தெளிவாக விளக்குதற்கு உலக நிலையில் முதன்மையான உரிமையினங்களைச் சுட்டியுரைத்தான்.
இந்தச் சுற்றத்தாரைப் போலவே மற்றவரையும் உரிமையோடு கருதி நேயம் புரிந்த போதுதான் மனிதன் பெரியவனாய் அரிய பேறுகள் பெறுகின்றான்.
நேயம் உன் வீட்டு அளவில் நில்லாமல் மேதினி எல்லாம் விரியின் என்றது அன்பு எங்கும் விரிந்து பரந்து வெள்ளம் போல் பெருகியோட வேண்டுமென உள்ளப் பரிவின் எல்லை தெரிய வந்தது. அன்பு பெருக ஆன்மா உயர்கின்றது.
பெற்ற பிள்ளைகளிடமும் கொண்ட மனைவியிடமும் அன்பு நிகழ்வது இயல்பு; விலங்குகளிடமும் அது காணப்படுகின்றது. அவ்வளவில் நில்லாமல் மற்றவரிடமும் அன்பு பரவிய வழியே உயர்நிலை விளைகின்றது.
அன்பை உன் வீட்டளவில் நிறுத்தாதே; உலகம் எங்கும் நீட்டுக. எவ்வுயிரையும் தன் உயிர்போல் எண்ணி இரங்கிய போதுதான் மனிதன் தெய்வமாகின்றான்.
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
மன்னுயிர் தன்னுயிர் என்ன ஓர்மகன்
உன்னிய போதவன் உய்தி காணுமே
பின்னவன் பிறவியின் பீழை கண்டிடான்:
முன்னவன் நிலையையே முழுதும் எய்துமே.
என்னும் இதனால் உயிர் உருக்கத்தின் உய்திநிலை உணரலாகும். பேரன்பு பேரின்பம் ஆகின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர்.