காலமானது காலம்

"காலமானது" காலம்.
===============================================ருத்ரா

இந்தக் காலத்தை என்ன செய்வது?
நாம் ஓடுகிறோமா? அது ஓடுகிறதா?
தெரியவில்லை.
அசையாமல் நாற்காலியில் உட்கார்ந்து
பொழுதை நசுக்கிவிட்டேன்
என்று தலை நிமிர்த்தினால்
சூரியனைக்காணவில்லை.
பிரன்னம் பார்க்கிற நம்பூதிரி
சோவிகளை குலுக்கிப்போட்டுவிட்டு
அதில் காலத்தை
கடுகு தாளித்ததாக சொல்கிறார்.
செத்தபாம்பும் சாகாதபாம்பும்
சேர்ந்து கொண்டு
பரமபத கட்டத்தில் ஏறி
விளையாடுகிறது.
சென்ற ஆண்டின் டிசம்பர் முப்பத்தி ஒன்று
இந்த ஆண்டு ஜனவரி ஒன்றில்
"காலம் ஆனது"
ரெண்டுக்கும் ஒரே பூமாலை தான்.
தினசரி காலண்டர் தாள் உதிர்க்கும்போதெல்லாம்
காலம் "காலம் ஆனது" என்று
நோட்டீஸ் கொடுத்துவிட்டுப்போகிறது.
காற்றைக் கையில்
படக்கென்று பிடித்தபோது
காலத்தையும் சேர்த்துதான் பிடித்தேன் என்று
கையை விரித்துப்பார்த்தேன்.
அப்போது ஒரு குரல் கேட்டது.
கையைப்பார்க்காதே.
உன் கால்களைப்பார்.
அது மைல்கல்களை தின்றுவிட்டு
கடக்கும்போதெல்லாம்
அந்த ரத்தத்தைப்பார்க்க வில்லையா?
உன் கால்களில் காயம்பட்டுக்கிடப்பது
அந்தக்காலம் தான் என்று!

======================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (5-Aug-19, 8:54 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 77

மேலே