பெய்யென பெய்யும் மழை

பெய்யெனப் பெய்யும் மழை.

சுடுவெயில் காயும் பகலில் சுருண்டுவிழும் செந்தனலில் கூவிக்கொண்டிருந்தாள் ஒருத்தி
கீற்று குடையின் கீழ்...

பஞ்சென பறந்தே பரிதவித்த
வாழ்வை பதப்படுத்தவே
பக்குவமாய் சுறுட்டினாள்
பஞ்சுமிட்டாயினை...

நீரின்றி கானலாய்
நீர்த்த வெயிலில்
நீந்திய உடலும்
நீரூற்றாய் சொறிந்தது
வேர்வைதனை..

நிலைகொள்ளா பாதம்
நர்த்தனம் கொண்டது
நிழலில்லா சுடும் மணலிலே..

கையிருப்பு நீரும் காலியாய் போனதே..
கடைசி சொட்டும் ஆவியில் சேர்ந்ததே..
தாகம் அதில் வறண்டு
தவித்திருக்கும் தொண்டைக்குழி
எச்சில் தனை உண்டது
தாகமதை தணிக்கவே...

தொலைவில் ஓர் சிறுவன்
தவிப்புடன் ஓடிவந்தான்
தாளாத வெயிலின்
தாக்கம் சூழ..

சுற்றி எங்கும் நிழலில்லை
சுற்றிய கண்கள் இருண்ட நிலை..!

ஓடிவந்த பாலகன் ஒதுங்கி
நின்றான் கீற்றின் கீழ்
ஓரவிழியில் துளி நீரும் கசிய..
பாதமதும் சிவந்தே கன்றிபோனதே
பாவி சூட்டினில் பதிந்தே போனதால்..

ஆடையது கசங்கியே கிழிந்துத்
தொங்கியது தலைமேல்
கேசமோ வரண்டு கிடந்தது..
பாலருந்தும் பருவம் அவன்
பால் முகம் கருத்தே கிடந்தது..

ஆதரவற்ற பிள்ளை என்று
அப்பட்டமாய் தெரிந்தது
அய்யம் என்று ஏதும் அன்றி...

பட்டு முகம் பார்த்தே பரிதவித்தாள்
பாவையிவள் பெண்மையின் பொதுசொத்தோ தாய்மை அது
தலைதூக்க...

கையிலிருந்த மிட்டாயை
பாசமாய் நீட்டினால் கைக்கெட்டா
காசும் கரையும் என்றறிந்தும்..

வேண்டாம் என்று அம்மழலையும்
வெதும்பியே தலையசைத்து
வெறும்வாயில் விரல் நுழைத்து வினவியதே நீரினை
தாகமதை தணிக்க..

எஞ்சிய துளிநீரும் தொண்டைக்குள்
சென்றதே என துக்கம்
கொண்டாள் அவள்
சிரசினை தாழ்த்தியே..

கைகளில் அணைத்தே
இடுப்பினில் இட்டுகொண்டாள்
பிஞ்சுமேனியது வருந்தாமல்..

பால் சுரக்கா மார்பும் விம்மி நின்றதே
தழையது தாகம் தணிக்க இயலவில்லையே என்று..

என்செய்வதென்று அறியா உள்ளம்
அலைந்தே உருகியது நீரதனை
தேடியே...

பாசம் கொண்ட அவளும்
வானினை நோக்கியே
பெய் என்றாள் கோபமாய்
பெருமழை பொழிய..

பார்த்திருந்த சிலரும்
பரிகாசம் செய்தனர்
பதிவிரதையின் சொல்லுக்கே
பறந்து வரும் மாரி என்று..

கலங்கா நெஞ்சம் கொண்டு
கோபக் கனலை வீசியே
பெய் என்று கூவினால்
பளிச்சிடும் வானினை நோக்கியே..

ஒருசில கணங்களில் ஓடி வந்த
வெண்மேகம் வேகமாய் மறைத்ததே
பருதியின் கதிர்களை..
வெளிர்மேகம் கருகியே
ஒளி மின்னல் பாய்ந்தது
இடியோசையது இன்னல் தீர்க்க
இரங்கி இறங்கியது

பெருந்துளிகள் வீழ்ந்து
பேரறை அறைந்ததே
வெற்று பேச்சினை
வீசியவர் முகத்திலே..

இருகைகள் ஏந்திக் குவித்தே
குடித்தான் நீரினை பாலகன்
நீரின்றிக் கரைந்த போன
உயிரும் நிறைய..

பெருமழையில் சிறுவனை
நனையவிட்டு குளிர்வித்தாளே
தாகமதை தணித்த தாயுள்ளம்
மலர..!

பதிவிரதை வாக்கிற்கு
கட்டுண்ட அப் பூதமும்
வஞ்சமில்லா தாய்மையும்
வாவென்றழைத்தாள்
வாக்கிற்கு தலை வணங்கி
பெய்யெனப் பெய்யாதோ
பேய்மழை..!!


குறள் : 55

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"

எழுதியவர் : (11-Aug-19, 7:37 pm)
சேர்த்தது : MadhavanL
பார்வை : 408

மேலே